Skip to main content

மண்டோதரி எனும் பதிவிரதை!



கணவனின் உயர்வில், கண்ணும் கருத்துமாகச் செயல்படுபவளைப் பதிவிரதை என்கிறோம். கணவனை அரவணைப்பவள்; சிந்தனை தடுமாறும்போது விழித்துக் கொண்டு நேர்வழியில் செல்பவள்; முழுமையாக வாழ, இடையே வருகிற இன்னல்களை அகற்ற உதவுபவள்; கணவனின் உயர்வில், இரண்டு மடங்கு உயர்ந்து நிற்பவள். இந்தக் குணங்களால்தான், அவள் தெய்வநிலைக்கு உயர்த்தப்படுகிறாள்! புராண நளாயினி துவங்கி சரித்திரக் கண்ணகி வரை பதிவிரதைகள் பலரை அறிவோம். புறத்தோற்றத்தைப் புறக்கணித்து, அகத்தோற்றத்தில் ஆனந்தம் காணும் அவர்களது பக்குவம், பதிவிரதா தர்மத்தின் மிக முக்கியமான ஆதாரம்! புகழ்மிக்க பதிவிரதைகளின் பட்டியலில், மண்டோதரிக்கும் சிறப்பான இடம் உண்டு. மந்தோதரி என்றுதான் பெயர் அவளுக்கு ஆனால், காலப்போக்கில் மண்டோதரி என்றாகி விட்டது. மந்தோதரி என்றால், சிறுத்த இடையாள் என்று பொருள். சாமுத்ரிகா லட்சணத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவள்; கைப் பிடித்த கணவனுடன் காலம் முழுவதும் பாதுகாப்பாக இணைந்தவள். ஒன்றுடன் ஒன்று பாதுகாப்பாக இணைந்து முழுமை பெறுவதுதானே வாழ்வின் இலக்கணம்! கால ஓட்டத்தில், இன்னல்கள் பலவற்றில் சிக்கினாலும், எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்று, தனக்கும் தன்னுடைய கணவனுக்கும் பெருமை சேர்த்தவள்.

ஆட்சியாளர்கள், மகான்கள், சமூக சேவகர்கள் ஆகியோரது செயல்பாடு முழுமை பெற, அவர்களின் மனைவிமார்கள் பதிவிரதையாகத் திகழ்வதுதான் பெரும் காரணம்! அவர்களது அறம், கணவன்மார்களுக்குத் தற்காப்பாகச் செயல்படுகிறது. அகல்யை, திரௌபதி, சீதாதேவி, தாரை, மண்டோதரி எனும் ஐவரை, தூக்கத்திலிருந்து விழித்ததும் நினைத்துக் கொள்கின்றனர் மக்கள். இது அவர்களின் ஒழுக்கத்தால் விளைந்த அழியாப் புகழ்! வேட்டையாடச் சென்ற ராவணன், அங்கே மயன் எனும் அசுரனைக் கண்டான். அவனுடைய புதல்வி, மண்டோதரி. ராவணனின் செயல்பாடு பயத்தைக் கொடுத்தது. விளைவு... அவனுக்குத் தன் மகளையே திருமணம் முடித்து வைத்து நிம்மதியானான் மயன். பதிவிரதையாகத் திகழ்ந்த மண்டோதரியால், ராவணனுக்குப் பெருமை சேர்ந்தது. உலக சுகத்தில் கணவனுக்காக ஈடுபட்டாலும், அறத்தின் செயல்பாட்டில் அக்கறை செலுத்தினாள் மண்டோதரி. சீதாதேவியைக் கவர்ந்து வந்தது, அறத்துக்குப் புறம்பானது என ராவணனுக்கு அறிவுறுத்தினாள். அறமானது உடலெடுத்தே ஸ்ரீராமன் என்கிற மாரீசனின் வார்த்தையைச் சொல்லி, வழி தவறியவனைத் திருத்த முயன்றாள். அறத்துடன் இணைந்தவருக்கு ஆறறிவற்ற உயிரினங்களும் துணை நிற்கும்; அறத்திலிருந்து விலகியவரை உடன்பிறப்பும் விலக்கி வைக்கும் என்பதை உணர்த்த முற்பட்டாள், மண்டோதரி.

வரம் பெறும் தருணத்தில், மனிதனால் தனக்கு இழப்பு உண்டு என அறிந்தான் ராவணன் ஆனால் வீரம், தீரம், செல்வம், பதவி, பெருமை ஆகியவற்றுடன் அகங்காரமும் இணைந்து அவனை மழுங்கடித்தன. மாரீசனிலிருந்து மண்டோதரி வரையிலானவர்களின் அறிவுரைகள், காதில் நுழைந்தன; ஆனால், மனதை எட்டவே இல்லை! நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது என்பார்களே.... அது ராவணன் விஷயத்தில் பலித்தது. வீரனாகப் பிறந்தவன், வீரனாக மடிய வேண்டும் எனும் எண்ணம் அவனுக்கு! போர்க்களத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஸ்ரீராமர் அளித்த சந்தர்ப்பத்தையும் புறக்கணித்தது அவனது வீரம்; ராம பாணத்துக்கு இரையானான். போரில் உயிர் துறப்பது வீரனுக்குப் பெருமை; எனினும், தனது வீரத்துக்கு நிகரில்லாத மனிதனால் ஏற்பட்ட மரணம் இழுக்கு என நினைத்து வருந்தினான் என்கிறார் வால்மீகி. தனது உறுதியில், கணவனைக் காப்பாற்றிய பதிவிரதைகள் உண்டு. வீரமிகு வாழ்வுக்கு வில்லங்கம் ஏற்பட்டாலும், கோழையாக மாறாதவன் ராவணன். எனவே, வீரமரணத்தை எதிர்கொள்ள ராமபாணத்தை வரவேற்றான். அவனது விருப்பத்தை அறிந்த மண்டோதரி, அதற்கு இடையூறாக இருக்கவில்லை. தனக்கு உடன்பாடில்லை எனினும் கணவனது விருப்பத்துக்கு இணங்குவதே பதிவிரதையின் இயல்பு!

தாசியைச் சந்திக்க வேண்டும் என்கிற கணவனின் ஆசையை மனைவி நிறைவேற்றியதைச் சொல்கிறது புராணம். நியதிக்குப் புறம்பாகச் செயல்பட எவராலும் இயலாது. இங்கே... நியதி, ராவணன் மரணத்தை வரவேற்கிறான் எனும் நிலை. எனவே, அதனை ஏற்றாள் மண்டோதரி. அசுரனை மனிதன் வென்றான் என்பது நிகழாத ஒன்று. காட்டில் கரன், தூஷணன் முதலான அரக்கர்களை அழித்தான் ஸ்ரீராமன். ஆகவே, அவன் மனிதன் இல்லை; மனித வடிவில் தென்படும் கடவுளாக இருக்கவேண்டும். அதேபோல் வானரங்களைக் கொண்டு கடலில் அணை அமைத்து இலங்கைக்குள் நுழைவதும் மனிதனால் இயலாத ஒன்று. அப்போதே சந்தேகம் வலுத்தது. அணுகவே முடியாத உன்னை (ராவணனை), சீதை எனும் மாயையால் மதியை மங்கச் செய்து, ஸ்ரீராமனின் வடிவில் எமன் தனது வேலையை முடித்துக் கொண்டான் என்பது, இப்போதுதான் தெரிகிறது. ஸ்ரீமந் நாராயணனே மனித வடிவில் வந்து, வானரங்களுடன் இணைந்து, தவறு செய்தவனை, உலக நன்மைக்காகத் தண்டிக்க வந்திருக்கிறார். உனது மறைவுக்கு நீயே காரணம்! காட்டில் தனியே இருந்த சீதையை, மாரீசனின் துணையுடன் ஏமாற்றிக் கவர்ந்து வந்தாய். வீரனுக்குப் பொருத்தமில்லாத, உறங்கிக்கிடந்த உனது அல்பத்தனம் அங்கே வெளிப்பட்டது. பெருமைக்குரியவள் என்பதைப் பொருட்படுத்தாமல் தூக்கி வந்தாய். பதிவிரதையின் மீது நீ கொண்ட தாபமே, உன்னை அழித்தது. பொறுமைக்குப் பெயர் பெற்ற பூமாதேவியின் மகள் அவள். அதனால்தான், அவளை அணுகும் தருணத்திலேயே உன்னை அழிக்கவில்லை அவள்! அதேநேரம், பதிவிரதை எடுத்த முடிவையும் எவராலும் மாற்ற முடியாது.

ராமனுடன் பகை வேண்டாம்; சீதையை அவனிடம் இணைத்துவிடு என்று எத்தனை முறை சொல்லியிருப்பேன்! நீ கேட்டால்தானே? நல்லது செய்தவன் நன்மையைச் சந்திப்பான்; கெடுதல் செய்தவன், பாபத்தைச் சந்திப்பான். உன்னுடைய சகோதரன் நன்மை செய்தான்; மகிழ்ச்சியுடன் இருக்கிறான். நீ கெடுதல் செய்தாய்; பாபத்தைச் சந்தித்தாய். சீதையைப் பார்த்த கணத்தில், அவளை எடைபோடத் தெரியவில்லை உனக்கு! காமத்தில் மூழ்கிய உன் மனம் தவறிழைத்தது. அவள் மூலமாக உனக்கு மரணமும் கிடைத்தது.... இப்படியெல்லாம் சிந்தித்த மண்டோதரியின் மனம் இயலாமையில் தவித்தது. குலம், குணம், அழகு, ஒழுக்கம், பெருமை ஆகிய குணங்களைக் கொண்டவளை மனைவியாகப் பெற்றிருந்த போதிலும், பிறன்மனையைத் தீண்டியதே ராவணனின் முடிவுக்குக் காரணமாயிற்று. அக்னிக்கு இரையான பொருள் திரும்பவும் துளிர்க்காது. சீதையின் பதிவிரதாக்னியில் வீழ்ந்த நீ, உயிர் பெற்று வருவது இயலாத ஒன்று. பதிவிரதையின் கண்ணீரானது, பூமியில் விழுந்தால், ஏதேனும் ஒன்று நடந்தே தீரும். அதுதான் உன்னைப் பழிவாங்கியது! எது எப்படியோ... உன்னை இழந்து நான் அநாதையாக நிற்கிறேன் எனப் புலம்பினாள் மண்டோதரி கணவனின் செயல்பாடு அவனுடன் முடிவதில்லை; மனைவியையும் துன்பத்தில் ஆழ்த்தும் எனப் புரிந்து கொண்டேன் எனத் தெளிந்தாள். அவனது தவறில் தானும் பங்கேற்று, உலக சுகங்களைத் துறந்து, துயரத்தை ஏற்றாள்; கணவனை, ராவணனைத் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கிய முதல் பதிவிரதை, மண்டோதரி! ராவணனின் மனைவி என்பதால் மாற்றுக் குறையவில்லை அவள்! கணவன் இறந்தாலும், அவனது நினைவிலேயே வாழ்ந்தவள் என்பதால், சிறப்புப் பெற்றவளாக ஒளிர்கிறாள் மண்டோதரி!

Comments

Popular posts from this blog

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத ...

Amazing Oranges~~simply superb

ஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்

ஆண்டாள் அருளியது பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும். விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். ...