Wednesday, December 15, 2010

சுந்தரகாண்டம் பகுதி-2


வாழ்க்கையில் முக்கியமான கட்டங்களை எட்டும் போது தடைக்கற்கள் ஏராளமாய் நம் முன் வந்து விழும். சிறுகல்லாக இருந்தால் தூக்கிப் போட்டு விட்டு போய் விடுவோம். ஆனால் பாறைகள் உருண்டு வந்து விழுந்தால் தடுமாறிப் போவோம். அனுமானின் முன்பு இப்போது வந்து கொண்டிருப்பது மிகப் பெரிய பாறை தான். இதைத் தகர்க்க அவனால் முடியும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் அவன் அச்சமற்றவன். வீரர்கள் ஒருமுறை சாகிறார்கள். கோழைகள் தினமும் சாகிறார்கள் என்பார்கள். என்றாவது ஒருநாள் மரணம் நிச்சயம் என நினைத்து விட்டாலே, ஒருவன் வாழ்வில் முன்னேறி விடுவான். அதேநேரம் அவனுக்கு கொடுக்கப்பட்ட கடமையையும் முடித்தாக வேண்டுமல்லவா? வீணாக உயிர் போனால் அவன் தோற்றுப் போனவன் என்ற பழியையும் சுமக்க வேண்டி வருமே! அனுமான் உயிரைப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் சீதாபிராட்டியை கண்டுபிடித்து ராமனிடம் ஒப்படைத்தாக வேண்டும் என்ற கடமையை உயிரினும் பெரிதாக நினைத்திருந்தான். வருவது வரட்டுமென அவன் முன்னேறிய நிலையில், சுரசை அவன் முன்னால் வந்து நின்றாள். அதிபயங்கர உருவம். பற்கள் நீட்டிக் கொண்டிருந்தன. உடலில் துர்நாற்றம் பிடித்த ஆடை. தலைவிரி கோலம். நடுநடுங்க வைக்கும் தோற்றம்...அஞ்சனை பெற்றெடுத்த அந்த வீரப்புதல்வன் கலங்கவில்லை.

அவன் அந்தப் பெண்ணிடம், நீ யார்? எதற்காக என்னைத் தடுக்கிறாய்? நான் எவ்வளவு பெரிய காரியமாக போய்க் கொண்டிருக்கிறேன் தெரியுமா? வழிவிடு, என்றான் ஆவேசமாக. அவளது பதிலுக்காக காத்திராமல், அவளைத் தாண்ட முற்பட்ட போது அவள் இன்னும் தன் உடலைப் பெரிதாக்கி மறித்தாள். ஏ குரங்கே! எனக்கு கொடும்பசியாக இருக்கிறது. உன்னைத் தின்னப் போகிறேன், என்றாள். அனுமான் மனதில் இரக்கம் பிறந்தது. அரக்கியே! உன் குலம் கோத்திரம் பற்றி எனக்கு கவலையில்லை. நீ ஒரு பெண் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கிறேன். உனக்கு பசிக்கிறது என்கிறாய். உன் பசி தீர்க்க என்னைத் தவிர வேறு யாரும் இங்கு இல்லை. ஆனால் உனக்கு உணவாக முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். நான் ஸ்ரீராமபிரான் காரியமாக இலங்கை செல்கிறேன். அதை முடித்து வரும் போது, உனக்கு உணவாகிறேன், என்றான். அடேய் மடையா! யாரை ஏமாற்றப் பார்க்கிறாய். என்னைக் கண்டாலே ஓடி ஒளியும் மாந்தர்கள் மத்தியில், சாதாரண குரங்கான நீ புத்தி சொல்கிறாயா? உன் நடிப்பு என்னிடம் செல்லாது அப்பனே, என்றவள் வாயைத் திறந்து மூச்சை இழுத்தாள். அனுமான், அவள் வாய்க்குள் போய் விட்டான். உள்ளே செல்லும் போது ஒரு பூச்சி போல உருவத்தை சுருக்கிக் கொண்டு விட்டான். அவள் அனுமானை உண்டுவிட்ட மகிழ்ச்சியில், மூச்சை வெளிவிடும் போது, அதே வேகத்தில் வெளியே வந்து விட்டான். சுரசை ஆச்சரியப்பட்டாள். தன் அழகிய உருவத்திற்கு அவள் மாறினாள்.

அனுமானிடம் தான் ஒரு விண்ணுலகப் பெண் என விளக்கினாள். தீயவரின் பசியைக் கூட பொறுக்காத நீ, எவ்வளவு நல்லவன். உன் இந்த நல்ல குணமே உனக்கு வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும், என வாழ்த்தினாள். அனுமான் அவளிடம் விடைபெற்று அங்கிருந்து புறப்பட்டான். சற்று தூரம் தான் தள்ளிச் சென்றிருப்பான். கீழே கடல் மீண்டும் பொங்கியது. அலறல் சிரிப்புச் சத்தம் கேட்டது. இன்னொரு அரக்கி வந்து கொண்டிருந்தாள். அவளது பெயர் தாரை. அனுமானிடம், நீ யார்? என் எல்கைக்குள் எப்படி நுழைந்தாய்? என்றாள்.அனுமான் அதை காது கொடுத்தே கேட்கவில்லை. அவன் வழியில் சென்றான். நில்லடா என தடுத்தவள், என்னை சாதாரணப் பெண் என்று எண்ணி தானே அலட்சியமாகப் போகிறாய். தேவர்களே என்னைப் பார்த்து நடுங்குவார்கள். நீயோ என்னை அலட்சியப்படுத்தி விட்டாய், என்றவள் அனுமனைப் பிடித்து வாய்க்குள் போட்டு விட்டாள். அனுமான் இறந்து போனான் என்றே வானவர்கள் நினைத்தனர். ஆனால் அடுத்த கணம் அந்த அரக்கியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு, அவளது குடலை உருவி கையில் வைத்திருந்த நிலையில் வெளிவந்தான் அனுமான். தாரை உயிர் விட்டாள். அனுமானின் வீரத்தை வானவர்கள் பாராட்டினர். இவன் சீதையோடு திரும்புவது உறுதி எனச் சொல்லி மகிழ்ந்தனர். அனுமானுக்கு மனதில் சிறு சஞ்சலம். நமக்கு ஏன் இத்தனை தடைகள்....அவன் யோசித்தான். ராமநாமத்தை சொல்லிக் கொண்டே சென்றால் எந்தத்தடையும் நீங்குமே...இதைச் சொல்லாமல் தான் என்ற அகந்தையுடன் விண்வெளியைக் கடக்க முயன்றோம். அதனால் இந்த வினை ஏற்பட்டது, என்றவன் ஸ்ரீராம ஜெயம் எனச்சொல்லிய படியே பறந்தான்.

நினைத்தது போலவே தடைகள் அகன்றன. அவன் விரைவிலேயே இலங்கையை அடைந்து விட்டான். லங்காபுரி செல்வப்பட்டணமாக ஜொலித்தது. அங்கிருந்த அரண்மனைச் சுவர்கள் செல்வத்தின் சிறப்பை எடுத்துக் காட்டியது. மதில் சுவர்கள் ரத்தினம், முத்து, மாணிக்கங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஊரெங்கும் மாட மாளிகைகள். வறுமையின் நிழல் கூட அங்கு இல்லை. ராவணன் கெட்டவன் என்றாலும் கூட, நகரை பாதுகாப்பாகவும், செல்வ செழிப்புள்ளதாகவும் வைத்திருந்தை அனுமான் மனதுக்குள் பாராட்டினான். அன்னை சீதாதேவி இவ்வளவு பெரிய நகரில் எங்கு இருப்பாரோ? கொடிய ராவணன் அவரை எங்கே சிறை வைத்திருப்பானோ? அன்னைக்கு அவன் ஏதாவது கேடு செய்திருப்பானோ... இப்படி பலவாறாய் சிந்தித்தபடி, நகருக்குள் நுழைய வழியைத் தேடினான் அனுமான். நுழைவுவாயில் மதில் சுவரைச் சுற்றி ஏராளமான பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அசுரர்கள் கண் துஞ்சாமல் பயங்கர ஆயுதங்களுடன் காவல் காத்தனர். இவர்களுடன் மோத ஆரம்பித்தால், வீணாக நாட்கள் விரயமாகும். வேறு ஏதாவது வழி கிடைத்தால் போய் விடலாம் என்று நினைத்த அனுமான், வேறு இடத்தை தேடினான். தனது உருவத்தை சிறிதாக்கிக் கொண்டு, மரம் ஒன்றில் ஏறி மதிற்சுவரைத் தாண்டி நகருக்குள் குதித்தான். அவ்வளவு தான். பளாரென அவன் உடலில் ஒரு அடி விழுந்தது.

No comments:

Post a Comment