Monday, December 20, 2010

கும்பகர்ணனின் தூக்கம்!



சிலர் இரவும், பகலும் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். சாப்பிடும் நேரத்திற்கு எழுந்திருப்பார்கள். சாப்பாட்டை முடித்து விட்டு தூங்க ஆரம்பித்து விடுவார்கள். சிலபேர் அலுவலகங்களில் தூங்குவார்கள். சிலர் கடையில் தூங்குவார்கள். இப்படி தூங்குபவர்களை, என்னப்பா! கும்பகர்ணன் மாதிரி தூங்குறியே, என்று கிண்டல் செய்வதுண்டு. கும்பகர்ணனுக்கு இந்த தூக்கம் வர காரணமானவர் யார் தெரியுமா? நம்ம நாரதர் தான். நாரதர் குழப்பவாதி. ஆனால் நல்லது நடக்கவே குழப்புவார். எல்லாரையும் தெய்வங்கள் சோதிக்கும் என்றால், தெய்வங்களை இவர் சோதிப்பார். அப்பேர்ப்பட்ட மகாத்மா அவர். ராவணன் பத்து தலைகளை உடையவன். மிகப்பெரிய சிவபக்தன். ஆனால் குணம் தான் ராட்சஷ குணம். அவன் மனதைக் கெடுத்தது அவனது சகோதரி சூர்ப்பனகை. ராமன் மீது ஆசைப்பட்ட அவள், அவனைத் திருமணம் செய்ய எண்ணினாள். ஏகபத்தினி விரதனான ராமன் அவளை விரட்டி அடித்து விட்டான். லட்சுமணன் அவளது மூக்கை அறுத்து அவமானப்படுத்தி விட்டான். இந்த அவமானத்தை சூர்ப்பனகையால் தாங்க முடியவில்லை. தன் அண்ணன் கும்பகர்ணனிடம் வந்து அழுதாள். கும்பகர்ணன் கடும் கோபம் கொண்டு, அண்ணன் ராவணனிடம் சென்று, ராம, லட்சுமணர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றான். சூர்ப்பனகை இதற்கு தூபம் போட்டாள். தன்னைப் போலவே ராமனின் மனைவியும் அவமானப்பட வேண்டும். மனைவி போனதும் ராமன் மனம் மாறி ஒருவேளை தன்னைத் திருமணம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அவள் எண்ணினாள். சீதையின் அழகை ராவணனிடம் வர்ணித்து, அவள் உன் அந்தப்புரத்தில் இருக்க வேண்டியவள் என ஆசையைத் தூண்டினாள். ராவணனும் சீதையைக் கடத்தி வந்து விட்டான். நிலைமை இப்படி இருக்க கும்பகர்ணனின் மனதில் ஒரு ஆசை. நாம் பிரம்மாவை நினைத்து தவமிருந்து, அண்ணனைப் போலவே சாகாவரம் பெற வேண்டும் என விரும்பினான். அந்த ஆசையுடன் அவன் காட்டை நோக்கி புறப்பட்டான். செல்லும் வழியில் நாரதர் எதிர்ப்பட்டார். கும்பகர்ணா! எங்கே கிளம்பி விட்டாய்? எங்கோ அவசரமாக செல்வது போல தெரிகிறதே? என்று கேட்டார். கும்பகர்ணன்

நாரதரை வணங்கினான். தவத்தில் சிறந்த நாரத முனிவரே! நான் பிரம்மனிடம், சாகாவரம் பெறப் போகிறேன். எங்கள் வம்சம் தழைத்தோங்க நான் இந்த வரத்தை பெறுவேன், என்றான். நாரதருக்கு பகீரென இருந்தது. ஐயையோ! இது என்ன சோதனை. ஏற்கனவே இவனது அண்ணன் ராவணன் மிகப் பெரிய பாவி. அவன் செய்யும் கொடுமை கொஞ்ச நஞ்சமல்ல. சீதாவாய் மானிட அவதாரம் எடுத்துள்ள லட்சுமிதேவியே அவன் கைவசம் இருக்கிறாள். அவன் மானிடர்களைத் தவிர, மற்ற யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றுள்ளான். மனிதர்களை இழிந்த ஜென்மமாகக் கருதி, மனிதர்களைத் தவிர மற்ற தேவர்களால், ஏன்...கடவுளால் கூட அழிக்க முடியாத வரம் பெற்றுள்ளான். இதற்காகவே பகவான் ராமனாக மானிட அவதாரம் எடுத்து சீதையை இழந்து நிற்கிறார். இப்போது இவனும் சாகாவரம் பெற்றால் நிலைமை என்னாகும்? தேவர்களும், மக்களும் இன்னுமல்லவா கொடுமைப்படுத்தப்படுவார்கள் என யோசித்தார். என்ன நாரதரே! யோசிக்கிறீர். நீர் கலகம் விளைவிப்பதில் பெரிய கில்லாடி ஆயிற்றே! என்னைக் கவிழ்க்க ஏதாவது ஆலோசிக்கிறீரா? என சிரித்துக் கொண்டே கேட்டான். சிவ சிவ! உனக்கு நன்மை செய்வது பற்றி யோசித்தால், நீ என்னையே சந்தேகப்படுகிறாயே! நவக்கிரகங்கள் எல்லாம் உன் சகோதரனுக்கு படிக்கட்டுகளாக குப்புற படுத்துக் கிடந்ததை, நேராக படுக்க வைத்து அவற்றின் மேல் ஏறிச்சென்றால் தான் மதிப்பு என்று, நான் உன் அண்ணன் ராவணனிடம் கூறவில்லையா? அப்படி உன் குலத்தின் பெருமையை பேணிக்காக்கும் நான், மாபெரும் வீரனான உன்னிடம் கலகம் செய்வேனா? அப்படி செய்தால் என்னை நீ நசுக்கி விட மாட்டாயா? என்று நல்லவர் போல் நடித்தார். கும்பகர்ணன் நாரதரின் நடிப்பை நம்பி விட்டான். பொதுவாக ஒருவரைப் பற்றி உயர்வாக பேசினால் போதும். அப்படியே குளிர்ந்து எதிரிகள் சொல்வதைக் கூட நம்பி விடுவார்கள்.

உலகத்தின் இந்த நியதிக்கு கும்பகர்ணன் மட்டும் விதிவிலக்கா என்ன!. நடிப்பை நம்பி விட்ட கும்பகர்ணனிடம் நாரதர், கும்பகர்ணா! உனக்கு வரம் கொடுக்க நிச்சயம் பிரம்மா வருவார். அவரிடம் மறக்காமல் நித்யத்துவம் வேண்டும் எனக் கேள். நித்ராத்துவம் வேண்டும் எனக் கேட்டு விடாதே, என்றார். நித்யத்துவம் என்றால் இறப்பற்ற வாழ்வு. நித்ராத்துவம் என்றால் எப்போதும் உறங்கிக் கொண்டிருப்பது. மீண்டும் மீண்டும் நாரதர், கும்பகர்ணா மறந்து விடாதே! அந்த பிரம்மன் பொல்லாதவர். நீ நித்யத்துவம் என்று கேட்பதற்கு பதில் நித்ராத்துவம் எனக் கேட்டு விட்டால் அதைக் கொடுத்து விட்டு, உடனே மறைந்து விடுவார். நித்ராத்துவம்...நித்ராத்துவம்...நித்ராத்துவம். இந்த வார்த்தையை மறந்து விடு, என்ன புரிகிறதா? என்றார். கும்பகர்ணன் நாரதருக்கு நன்றி சொன்னான். நல்ல வேளையாக வார்த்தை உச்சரிப்பை தெளிவாகக் கூறினீர். இல்லாவிட்டால் நான் மாற்றிக் கேட்டு மாட்டிக் கொண்டு விடுவேன், என்றவன் வெகுதூரம் நடந்தான். செல்லும் வழியில் நாரதர் சொன்ன அந்த வார்த்தையை நினைவுபடுத்தி பார்த்தான். நித்யத்துவமா... நித்ராத்துவமா... .நாரதர் அழுத்தம் திருத்தமாக சொன்னாரே! நித்ராத்துவம், என்றபடியே தவத்தில் ஆழ்ந்து விட்டான். சந்தேகத்துடன் எந்தச் செயலையும் தொடங்குவது தவறு. சந்தேகத்துடன் ஒரு மாணவன் தேர்வு எழுதினால், மொத்த பதிலும் தப்பாகி, மார்க் கிடைக்காமல் போய்விடும். எதிலும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதையே கும்பகர்ணனின் செயல் உணர்த்துகிறது. அவன் நினைத்திருந்தால் நாரதரிடம் திரும்பவும் தன் சந்தேகத்தை தீர்த்து விட்டு, தவத்தை தொடங்கி இருக்கலாம். சந்தேகத்துடன் தவத்தை தொடங்கி விட்டான். அவனது தவத்தை ஏற்றுக் கொண்ட பிரம்மா அவன் முன் தோன்றினார். அன்பு பக்தா கும்பகர்ணா! என்ன வரம் வேண்டும் கேள், என்றார். எனக்கு நித்ராத்துவம் வேண்டும், என்றான். அப்படியே தருகிறேன், என்றவர் நிற்காமல் மறைந்து விட்டார். அவ்வளவு தான். கும்பகர்ணனுக்கு அங்கேயே தூக்கம் வந்து விட்டது. நடந்ததை அறியாத ராவணன் கும்பகர்ணனைத் தேடி காட்டுக்குள் சென்றான். அங்கே அன்புத் தம்பி குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். அவனை எழுப்பினான். உஹூம்....எழவில்லை. அரண்மனையிலிருந்து ஆட்களை வரவழைத்து, முரசறைந்து எழுப்பினான். பின்பு மாற்றி சொல்லி விட்டதை அறிந்து, பிரம்மனை மீண்டும் வேண்டி, ஆறுமாதம் தூக்கம்...ஆறுமாதம் விழிப்பு என்ற வரத்தை பெற்றான் கும்பகர்ணன்.

No comments:

Post a Comment