Skip to main content

சுந்தரகாண்டம் பகுதி-1


சுந்தரகாண்டம் பகுதி-1

தொடரை துவங்கும் முன்....


சுந்தரகாண்டம்.... ராமாயணத்தின் மிக அற்புதமான பகுதி. இதில் ஆறு காண்டங்கள் இருந்தாலும் சுந்தரகாண்டத்திற்கு மட்டும் ஏன் தனியிடம் தரப்படுகிறது என்று உங்கள் மனம் எண்ணக்கூடும். ஒரு பெண் வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டம் அனுபவிக்க கூடாதோ அத்தனையும் அனுபவிக்கிறாள்....மென்மையான அவள் கணவனைப் பிரிந்து யாரோ ஒருவன் கையில் சிக்கிக் கொள்கிறாள். தன் கணவனுடன் திரும்பவும் சேரமாட்டோம் என்ற நிலையில், உயிர் போய் விடும் நேரத்தில் ராமதூதன் அனுமான் வருகிறான். கணையாழியைக் காட்டுகிறான். பசியால் துடித்து கிடப்பவனின் முன்பு சுவையான கறிகளும், பலகாரமும், பாயாசமும், பழங்களும் ஒரே நேரத்தில் குவிக்கப்பட்டால் எப்படி திகைத்து போவானோ...அப்படி ஒரு நிலைமையை சீதா அடைகிறாள். நம்பிக்கை பிறந்தது. மனதில் நம்பிக்கை பிறந்து விட்டால் மலைகள் கூட தகர்ந்து போகுமே... அந்த நம்பிக்கையை மனதில் வளர்த்துக்கொள்ள சுந்தரகாண்டம் உங்களுக்கு வழி காட்டப் போகிறது. சுந்தரகாண்டத்தை அதிகாலையில் நீராடிய பிறகு, 4 மணி முதல் 5 மணிக்குள் பிரம்ம முகூர்த்த நேரத்தில், மனச் சுத்தத்துடன் படித்தால் நல்லது என்பது நம்பிக்கை. சுந்தரகாண்டம் தொடரை படித்து முடித்ததும், உங்கள் வாழ்வில் ஏதோ ஒரு நல்லது நடக்கும் என்பது மட்டும் உறுதி. நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.

அசோகவனத்தில் இருந்த சீதாதேவியின் நெஞ்சத்தில் பழைய நினைவுகள் அலை பாய்ந்தன. ராமா... ராமா... என்று அவளது உடலின் நரம்பு, நாளங்களெல்லாம் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. ராமா! நானில்லாமல் நீங்கள் எப்படி தவிப்பீர்கள்...உங்களுக்கு அறுசுவை உணவு கொடுப்பது யார்? நீங்கள் உறங்கும் போது, என் மடி மீது தலை வைத்திருப்பீர்களே! இப்போது என்ன செய்கிறீர்களோ...எப்படியெல்லாம் சிரமப்படுகிறீர்களோ... என்னைத் தேடி காடெல்லாம் அலைந்து உங்கள் கமலப்பாதங்கள் புண்ணாகி போயிருக்குமே...அதற்கு மருந்து தடவுவார் யார்? ராமா...ராமா....உங்களை நினைத்து நினைத்தே நான் இறந்து விடுவேன் போலிருக்கிறதே! இறப்பைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் உங்கள் திருமுகத்தை பார்க்காமல் எப்படி இறப்பு என்னைத் தொடும்? நான் உங்கள் சீதாவாக, கற்புநிறை செல்வியாக வாழ்ந்து மடிந்தேன் என்பதை எப்படி தெரிந்து கொள்வீர்கள்? ராமா...அன்றொரு நாள் நீங்கள் காட்டில் அலைந்து திரிந்த களைப்பால் என் மடிமீது தலை வைத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் கண் விழித்து விடக்கூடாது என்பதால் நான் அசையாமல் உட்கார்ந்திருந்தேன். அப்போது இந்த பாழாய்ப் போன அழகைக் கண்டு ஆசைப்பட்ட இந்திரன் மகன் சயந்தன், காக உருவெடுத்து வந்து என் மார்புகளைக் கொத்தினான். உங்கள் உறக்கம் கலையக்கூடாது என்பதால் நான் அதை விரட்டவில்லை. அந்த காகம் மேலும் மேலும் என் தனங்களைக் கொத்தியது.

ரத்தம் கொட்டியது. அது உங்கள் மேல் வழிந்ததால் நீங்கள் விழித்து விட்டீர்கள். நடந்ததைக் கேட்டு வருந்தினீர்கள்... காகத்தின் மீது ஒரு தர்ப்பைப் புல்லை எறிந்தீர்கள். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைப் போல, அது பாணமாக உருவெடுத்து காகத்தை விரட்டியது. காகமாக இருந்த சயந்தன் தன் உருக்கொண்டு ஓடினான். அவன் பல தேவர்களிடம் அடைக்கலம் புகுந்தான். யாரும் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் தந்தை இந்திரன் கூட அவனை விரட்டி விட்டான். வேறு வழியே இல்லாமல், ராமா நீயே தஞ்சம், என உன் காலிலேயே வந்து விழுந்தான். தஞ்சமென்று வருவோர்க்கு வஞ்சமின்றி அருளும் நீ, அவனை மன்னித்தாய். பகைவர்க்கும் அன்பு செய்தவனே! உன் மனையாளின் நினைவு இன்னும் வரவில்லையா? அவளது மன ஓட்டம் இப்படி இருக்க, அதை விட கடும் வேகத்தில் இலங்கை நோக்கி பாய்ந்து வந்து கொண்டிருந்தான் ராம தூதன் அனுமான். மகேந்திர மலையின் சிகரத்தில் நின்று கொண்டு, மேலே பார்த்தான். அழகுக்கு இலக்கணமான இந்திரலோகம் அவன் பார்வையில் பட்டது. அங்கு நடமாடும் தேவர்களைக் கண்டான். இங்கு சீதாதேவி இருப்பாரா? இது நல்லவர்கள் நடமாடும் பகுதியாக அல்லவா இருக்கிறது? இங்கே அன்னையார் இருக்க வாய்ப்பில்லை, என்றவன், மலையின் கீழே பார்த்தான். கடலின் நடுவில் தேவலோகத்தையும் மிஞ்சும் அழகில் ஒரு குட்டி உலகம் காட்சியளித்தது.

ஆயிரம் சந்திரர்கள் கொட்டிக் கிடந்தது போல ஒளி பொருந்திய நகரம் அது. அதன் அழகை வர்ணிக்க வார்த்தைகளைத் தேடினாலும் கிடைக்காது. இந்த மலையிலிருந்து குதித்து கடலைத் தாண்டி அங்கு செல்ல வேண்டுமானால், பல மாதங்கள் ஆகும் போல் இருக்கிறதே!அங்கு சென்றால் சீதாதேவியின் தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும். அவர் மட்டும் அங்கு இருந்தால், ராவணனை ஒரு வழி செய்து, அன்னையை கூட்டிச் சென்று ராமபிரானிடம் சேர்த்து விட வேண்டியது தான்,. அனுமன் நம்பிக்கையுடன் தனக்குள் பேசிக் கொண்டான். மனதில் நம்பிக்கை பிறந்ததும், கீழே கிடந்த கடல் ஏதோ தூசு போல அனுமானுக்குப் பட்டது. அவன் மகேந்திரகிரி மலையை ஒரு மிதி மிதித்து, உயரப் பறந்தான். அவன் மிதித்த வேகத்தில் மலை கிடுகிடுத்தது. அதில் ஒளிந்து கிடந்த விலங்குகள் எல்லாம், அலறி அடித்து ஓடின. எப்பேர்ப்பட்ட பலசாலியாக இருந்தால், ஒரு மலையே கிடுகிடுக்கும்...அனுமான் பெரும் பலத்துடன் பாய்ந்தான். அவன் இலங்கையை அடைந்து விடுவான். ஸ்ரீராமர் தன் தேவியை அடையும் காலம் நெருங்கி விட்டது என்பதை தங்கள் ஞான திருஷ்டியால் உணர்ந்த தேவர்கள், வாயு மைந்தனை வாயார வாழ்த்தினர். இருப்பினும் இவனால் இலங்கையில் சீதாதேவியை சந்திக்கும் அளவுக்கு புத்திசாலித்தனமும், தைரியமும் இருக்குமா என்று பரீட்சித்து பார்க்கவும் முடிவு செய்தனர்.

சுரசை என்ற பெண்மணியை அழைத்தனர். சுரசையே! வாயு மைந்தன் அனுமான் இலங்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறான். அவன் மிகப்பெரிய கடலைத் தாண்டி இலங்கைக்கு சென்று விடுவானா? அப்படியே சென்றாலும் புத்திக்கூர்மையுடன் நடந்து சீதாபிராட்டியை சந்தித்து விடுவானா? அவரைச் சந்தித்தாலும், ராவணனை சமாளிக்கும் அளவு அவன் ஆற்றல் பெற்றவனா? என்பதை அறிய ஆவலாக இருக்கிறோம். நீ அசுரப் பெண்ணாக வடிவெடுத்து அவனை பல வழிகளிலும் இம்சிக்க வேண்டும். உன்னை வெல்கிறானா என்பதைப் பொறுத்து தான் அவன் உண்மையில் பலம் பொருந்தியவனா என முடிவு செய்ய வேண்டும். உடனே புறப்படு, என்றனர். சுரசை அந்தக்கணமே பயங்கர உருவம் தாங்கி பறந்து சென்றாள். அனுமானை நோக்கி வாயால் ஊதினாள். அந்தக் காற்று பெரும் புயலாய் உருவெடுத்தது. கீழே கடலில் பெரும் அலைகள் கிளம்பின. வாயுமைந்தன் வாயுவின் தாக்குதலுக்கு ஆளாகி தடுமாறினான். எங்கிருந்து வந்தது இந்தப்புயல்....தடுமாற்றத்துடன் அவன் தூரத்தே நோக்கும் போது பயங்கர உருவம் ஒன்று தன்னை நோக்கி வருவது தெரிந்தது.

Comments

Popular posts from this blog

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத ...

Amazing Oranges~~simply superb

ராமாயணம் பகுதி-3

தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து பார்த்து புளகாகிதமடைந்தார்கள். சகோதரர்கள் நால்வரும் கணமும் பிரிவதில்லை. ராமனும் சுமித்திரை மகன் லட்சுமணனும் இணை பிரிவதே கிடையாது. பரதனும் சத்ருக்கனனும் ஒன்றாகத் திரிவார்கள். இந்த சகோதர ஒற்றுமை உலக சகோதரர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். ஒருவருக்கு தலைவலித்தால், நான்கு பேருக்கும் வந்தது போல துடித்துப் போவார்கள். அப்படி ஒரு ஒற்றுமை.மனைவியை விட நல்ல குழந்தைகள் அமைவது ஒருவனுக்கு கிடைத்தற்கரிய ஒன்று. தசரத சக்கரவர்த்தி குழந்தைகள் விஷயத்தில் ரொம்ப கொடுத்து வைத்தவர். இன்றும் ராம லட்சுமணர்கள், பரத சத்ருக்கனர்கள் என்று தானே நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மனிதன் இன்பத்தை மட்டுமே அனுபவிக்க பிறந்தவன் அல்லவே. அவன் துன்பக்கடலையும் கடந்தாக வேண்டுமே. ராமனின் பதினாறாவது வயதிலேயே சோதனையும் வந்தது விஸ்வாமித்திர முனிவரின் ரூபத்திலே. அவர் அன்று அரசவைக்கு வருகை தந்தார். இக்ஷ்வாகு குல மன்னர்கள் முனிவர்களின் பேச்சுக்கு மிகுந்த மதிப்பளிப்பவர்கள். அவர்களைத் தெய்வமாய் போற்றுபவர்கள். விசு...