Skip to main content

ராமாயணம் பகுதி-4



தசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன் வேறு யாருமல்ல... லட்சுமணன் தான்... தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்குச் சொந்தக்காரன்.தந்தையே! என் சகோதரன் எங்கிருக்கிறாரோ அங்கிருப்பதே எனக்கு பெருமை, வேலை, கடமை எனக்கருதுபவன் நான். அவர் கானகம் சென்றால் நானும் அவருடன் செல்வேன். அவரின்றி நான் இல்லை; அண்ணனுடன் செல்வதென முடிவெடுத்து விட்டேன், என்ற லட்சுமணனின் சொல் கேட்டு தசரதருக்கு இன்னும் இக்கட்டான நிலைமை ஆயிற்று. ஒரே நேரத்தில் இரண்டு மைந்தர்களை இழந்து விடுவோமோ என பயந்தார்.ஆனாலும், லட்சுமணனை தடுக்கும் சக்தி அவருக்கில்லை. இருவரும் கானகம் செல்ல தசரதர் அனுமதி அளித்தார். விஸ்வாமித்திரர் அந்த வீர சகோதரர்களுடன் காட்டுக்கு புறப்பட்டார். காட்டிற்குள் மனித ஜீவன்கள் யாருமே வருவதில்லை. தடாகை விழுங்கி விடுவாள் என்ற பயம். அங்கு வந்த பின், தாடகையை கொல்வதற்கு ராமன் யோசித்தார். ஏனெனில், அவள் ஒரு பெண். அரக்கியாக இருந்தாலும் பெண் என்பதால் அவளை கொல்வதற்கு ராமனிடம் தயக்கம் இருந்தது. விஸ்வாமித்திரர் ராமனின் எண்ணத்தை புரிந்து கொண்டார். ராமா, அவளுக்கு பெண்மைக்குரிய எந்த இலக்கணமும் கிடையாது. மனித மாமிசம் உண்ணும் பெண்மணியை கொல்வதில் எந்த தவறும் இல்லை. அவளை உடனே அழித்துவிடு, என்றார். ராமனும் விஸ்வாமித்திரரின் சொல்லில் இருந்த நியாயத்தை உணர்ந்து வில்லை எடுத்து ஒலி எழுப்பினார். அவரது நாண் அசைவில் அந்த கானகமே நடுங்கியது. விலங்குகள் ஓடி மறைந்தன. நாண் ஒலி கேட்டு கலங்கிப் போன தாடகை வெளியே வந்தாள். யாரடா அவன்! எனது கானகத்திற்குள் புகுந்து தைரியமாக வில்லை எடுத்தவன்! உன்னை ஒழிக்காமல் விடமாட்டேன், என கர்ஜித்தவளாக வெளியே வந்தாள்.

ராமன் வில்லெடுத்து தாடகையின் மீது அம்புமழை பொழிந்தார். தாடகை அலறிக் கொண்டே சாய்ந்தாள். உயிர் பிரிந்தது. அவளது மறைவு செய்தி அறிந்த மகன்கள் மாரீசனும், சுபாகுவும் ராமனை தாக்க பாய்ந்தோடி வந்தனர். சுபாகுவை அக்னி அஸ்திரத்தால் ராமன் சுட்டெரித்தார். மாரீசன் மீது மானவம் என்ற அஸ்திரத்தை எய்தார் ராமன். அது மயக்கும் சக்தி வாய்ந்தது. மயங்கி போன மாரீசன், எங்கோ ஓடிப் போய்விட்டான். ராமாயணத்தில் ராமனின் முதல் போர் இதுதான். போரில் வெற்றி பெற்ற ராமனை விஸ்வாமித்திரர் பாராட்டினார். ராமனுக்கும், லட்சுமணனுக்கும் பலம், அதிபலம் என்ற இரண்டு மந்திரங்களை கற்றுக் கொடுத்தார். மிக மிக களைப்பாக இருக்கும்போதோ, உடல் நலமற்ற வேளையிலோ, கவனக்குறைவாக இருக்கும்போதோ உயிருக்கு ஆபத்து உருவாகலாம். அந்த சமயத்தில் இந்த மந்திரத்தை பக்தியுடன் சொன்னால் எந்த அதர்மமும் அவர்களை அணுகாது. எனவே இந்த மந்திரங்களை ராம லட்சுமணர் மிகவும் கவனத்துடன் படித்தனர். படித்ததற்குரிய சக்தியும் அவர்களுக்கு கிடைத்தது. அரக்கர்களின் அழிவுக்கு பிறகு விஸ்வாமித்திரரின் யாகம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. யாகம் முடிந்த பின், விஸ்வாமித்திரர் ராம, லட்சுமணர்களை மிதிலாபுரி நகருக்கு அழைத்தார். அந்நகரில், மிகச் சிறப்பு வாய்ந்த சிறப்பான வேள்வி நடத்தப்பட இருந்தது. அதைப் பார்த்த பிறகு ஊர் திரும்பலாம் என்பது விஸ்வாமித்திரரின் திட்டம். செல்லும் வழியில் கவுதம முனிவரின் ஆஸ்ரமத்தில் அவர்கள் தங்கினர். அங்கே சில சீடர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. கவுதமர் எங்கே என ராமன் விசாரித்தார். அவர் இமயமலைக்கு தவம் செய்ய சென்றுவிட்ட விபரம் தெரிந்தது. முனிவரின் மனைவி அகலிகை. அழகில் சிறந்தவள். அவளது அழகைக் கண்டு தேவேந்திரனே சபலப்பட்டான். ஒருமுறை கவுதமரைப் போலவே மாற்று உருவம் எடுத்துவந்து அவளை அடைந்தான். கோபம் அடைந்த கவுதமர் இந்திரனின் உடலழகு அழியும்படி சாபமிட்டார்.

அகலிகையை யார் கண்ணுக்கும் தெரியாமல் அதே ஆஸ்ரமத்தில் வசிக்கும்படி சொல்லிவிட்டு, களங்கமடைந்த அவள் புனிதமாவது எப்போது என்பது பற்றியும் சொல்லியிருந்தார். விஷ்ணு மானிடப் பிறப்பெடுத்து எப்போது பூமிக்கு வருகிறாரோ அவரது பாதம் படும் இடத்தில் நீ இருந்தால் மீண்டும் கற்புத்தன்மை பெறுவாய், என சொல்லியிருந்தார். இப்போது ராமபிரான் முனிவர் தங்கியிருந்த ஆஸ்ரமத்திற்கு வந்துவிட்டதால் அகலிகை சாபம் நீங்கி அனைவர் முன்னிலையிலும் தென்பட்டாள். அவள் கல்லாகக் கிடந்ததாகவும் கூறப்படுவதுண்டு. அந்தக் கல்லின்மீது ராமனின் பாதம் பட்டதும் அவள் மீண்டும் உருபெற்றாள் என்பார்கள். இந்த நேரத்தில் கவுதமரும் வந்து சேர்ந்தார். தம்பதியர் இணைந்தனர். அவர்கள் விஸ்வாமித்திரரையும், ராம லட்சுமணர்களையும் கனிவுடன் உபசரித்தனர். அகலிகை சாப விமோசனத்திற்கு பிறகு, அவர்கள் மிதிலாபுரி நகர் சென்றடைந்தனர். செல்வச்செழிப்பும், அறிவுடைய மக்களும் இணைந்த பூமி அது. காரணம் அந்நகரில் லட்சுமி நிஜமாகவே வாசம் செய்தாள். அந்நாட்டை ஜனக மகாராஜா ஆண்டு வந்தார். அவரிடம் விசித்திரமான ஒரு வில் இருந்தது. அதன் எடை மிக மிக அதிகமானது. அதை அசைக்கக்கூட யாராலும் இயலவில்லை. மன்னர் ஜனகரின் அவையில் குரு சதானந்தர் இருந்தார். அவர் கவுதம முனிவருக்கும், அகலியைக்கும் அவதரித்த திருமகன். மிதிலைக்கு வந்த ராம லட்சுமணர்களை அவர் அன்புடன் வரவேற்றார். தன் தாய்க்கு சாபவிமோசனம் அளித்த அந்த மகானை அவர் மிகவும் நேசித்தார். விஸ்வாமித்திரரிடம், முனிவரே! ஜனக மகாராஜா மிகப் பெரிய வேள்வியை நடத்த இருக்கிறார். வேள்வி முடிந்தபிறகு அவரது திருமகள் சீதைக்கு சுயம்வரம் நடத்தப்போகிறார். சுயம்வரத்திற்கு வரும் மன்னர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அரண்மனையில் இருக்கும் வில்லை நாணேற்றி யார் அம்பு எய்கிறார்களோ, அவருக்கே தன் மகள் சீதையை திருமணம் செய்து கொடுப்பதாக சக்கரவர்த்தி முடிவு செய்துள்ளார். ராமன் இந்த போட்டியில் நிச்சயமாக வெல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே அவரை போட்டியில் கலந்து கொள்ள செய்யுங்கள், என்றார். விஸ்வாமித்திரரும் சம்மதித்தார். இதன் பிறகு தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு மூவரும் புறப்பட்டனர். நீலவண்ணமேனியன் ஒருவன் கருணை பொங்கும் கண்களுடனும், அழகு பொங்கும் வதனத்துடனும் வருவதைக் கவனித்தன இரு அழகு விழிகள்.

Comments

Popular posts from this blog

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத

Amazing Oranges~~simply superb

ராமாயணம் பகுதி-3

தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து பார்த்து புளகாகிதமடைந்தார்கள். சகோதரர்கள் நால்வரும் கணமும் பிரிவதில்லை. ராமனும் சுமித்திரை மகன் லட்சுமணனும் இணை பிரிவதே கிடையாது. பரதனும் சத்ருக்கனனும் ஒன்றாகத் திரிவார்கள். இந்த சகோதர ஒற்றுமை உலக சகோதரர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். ஒருவருக்கு தலைவலித்தால், நான்கு பேருக்கும் வந்தது போல துடித்துப் போவார்கள். அப்படி ஒரு ஒற்றுமை.மனைவியை விட நல்ல குழந்தைகள் அமைவது ஒருவனுக்கு கிடைத்தற்கரிய ஒன்று. தசரத சக்கரவர்த்தி குழந்தைகள் விஷயத்தில் ரொம்ப கொடுத்து வைத்தவர். இன்றும் ராம லட்சுமணர்கள், பரத சத்ருக்கனர்கள் என்று தானே நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மனிதன் இன்பத்தை மட்டுமே அனுபவிக்க பிறந்தவன் அல்லவே. அவன் துன்பக்கடலையும் கடந்தாக வேண்டுமே. ராமனின் பதினாறாவது வயதிலேயே சோதனையும் வந்தது விஸ்வாமித்திர முனிவரின் ரூபத்திலே. அவர் அன்று அரசவைக்கு வருகை தந்தார். இக்ஷ்வாகு குல மன்னர்கள் முனிவர்களின் பேச்சுக்கு மிகுந்த மதிப்பளிப்பவர்கள். அவர்களைத் தெய்வமாய் போற்றுபவர்கள். விசு