Friday, December 17, 2010

யூரோ சரிவு: மாற்று வழி தேடும் இந்திய ஐ.டி. நிறுவனங்கள்

லண்டன்: யூரோ எனப்படும் ஐரோப்பிய நாணயத்தின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால் இந்திய ஐடி துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்கள் பெருமளவு நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து தனது வருவாயில் 29 சதவிகிதம் பெறும் எச்.சி.எல் நிறுவனம், 59 சதவிகிதம் பெறும் டெக் மஹிந்திரா நிறுவனம் ஆகியவற்றின் வருவாயில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்பதை அதன் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் மூலம் தெரிய வருகிறது.

டி.சி.எஸ் மற்றும் விப்ரோவின் வருவாயும் யூரோ வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போஸிஸ் மற்றும் விப்ரோ போன்றவற்றின் 25 சதவிதம் வரை யூரோக்களாகவும் பவுண்டுகளாகவும்தான் கிடைக்கின்றன.

அமெரிக்காவின் லேஹ்மன் பிரதர்ஸ் வங்கியின் சரிவுக்குப் பிறகு யூரோ மதிப்பு பெருமளவு சரிந்தது. ஆனால் அதேநேரம் டாலரின் மதிப்பில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. அதன் மதிப்பு கிட்டத்தட்ட நிலையாகவே இருந்தது. ரூபாய்க்கு நிகரான யூரோ மதிப்பும் கூட நிலைப்படுத்தப்படவில்லை. நான்கு ஆண்டுகளாக இந்த நிலைதான் நீடிக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை டாலருக்கு அடுத்து முக்கிய சந்தை மதிப்பாகத் திகழ்வது யூரோதான். 15 பில்லியன் டாலர் அளவுக்கான ஏற்றுமதிகள் யூரோ மூலமே நடக்கின்றன. மகிந்திரா சத்யம் , டயிள்யூஎன்எஸ் குளோபல் சர்வீஸஸ், மாஸ்டெக் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவைவிட அதிகமாக ஐரோப்பிய நாடுகளில்தான் வர்த்தகம் செய்கின்றன.

இந்த நிலையில், கிரீஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து யூரோ மதிப்பு மேலும் குறைந்தது. இன்று காலை நிலவரப்படி 1.22 டாலராக யூரோ மதிப்பு சரிந்துவிட்டது. 1.24- டாலருக்குக் கீழே யூரோ மதிப்பு கீழே சரியாது என்று அனைவருமே நம்பிக்கொண்டிருந்த நிலையில், இந்த திடீர் சரிவு, பல முனை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாதிப்பின் அளவு குறித்து கருத்து தெரிவிக்க பல நிறுவனங்கள் முன்வரவில்லை. ஆனால் மாற்று நடவடிக்கைகளை சில நிறுவனங்கள் யோசிக்க ஆரம்பித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க அமெரிக்க வங்கிகளின் மூடுவிழா தொடர்கிறது. சனிக்கிழமை ஒரே நாளில் மேலும் 5 வங்கிகள் மூடப்பட்டன. இவற்றுடன் சேர்த்து, பொருளாதார மந்தத்துக்கு பலியான வங்கிகளின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு 25 வங்கிகள் மூடப்பட்டன. இந்த ஆண்டு அதைவிட மூன்று மடங்கு வங்கிகள் மூடுவிழா கண்டுள்ளன.

சனிக்கிழமை திவாலான வங்கிகள் விவரம்: ஃபர்ஸ்ட் பாங்க் ஆப் கன்ஸாஸ், வன்டஸ் வங்கி, பிளாட்டினம் கம்யூனிட்டி வங்கி, ஃபர்ஸ்ட் ஸ்டேட் வங்கி மற்றும் இன்பேங்க்.

இந்த ஐந்த வங்கிகள் திவாலானதால் 403 மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பெடரல் ரிசர்வ் அறிவித்துள்ளது. ஒரு பக்கம் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாக அமெரிக்க நிதித் துறை கூறினாலும், மறுபுறம் வேலையின்மை விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவு 9.7 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது. வங்கிகள் திவாலாவது தொடர்கிறது. சிறுவங்கிகள் மூடுவிழாவுக்குத் தயாராகி வருகின்றன.

மாற்று வழியை கையாளும் இந்திய முன்னணி ஐடி நிறுவனங்கள்

தங்கள் வருமானத்துக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை மட்டுமே இதுநாள் வரை நம்பியிருந்த இந்திய ஐடி நிறுவனங்கள் இப்போது பார்வை ஜப்பான் நாட்டின் பக்கம் திருப்பியுள்ளன. இந்திய ஐடி நிறுவனங்களின் 90 சதவிகித வருமானம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலுள்ள நிறுவனங்களைச் சார்ந்தே இருந்தது. ஆனால் இப்போது இந்த இரு பகுதிகளிலுமே பெரும் பொருளாதார மந்தம் நிலவுகிறது. பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இருக்கும் நிறுவனங்கள் இந்திய தொடர்புகளை முழுமையாகத் துண்டிக்கும் நிலைக்கு வந்துள்ளன. இந்தியாவில் அவுட்சோர்ஸிங் செய்தால், அந்த நிறுவனம் இனி அமெரிக்காவில் எந்த சலுகையையும் பெறவே முடியாது என்ற நிலையை அமெரிக்க அரசு உருவாக்கியுள்ளது. இதை நேரடியாக அதிபர் ஒபாமாவே தெரிவித்துவிட்டார்.

ஐரோப்பாவிலோ தற்போது நிலைமை மகா மோசம். பல நாடுகளின் மத்திய வங்கிகள் செயலிழந்து போய், அவற்றின் பொருளாதார முறையே மறுசீரமைப்புக்குக் காத்திருக்கிறது. இந்த நிலையில், இந்திய நிறுவனங்களின் முக்கிய வருவாய் ஆதாரமாகத் திகழ்வது இப்போதைக்கு ஜப்பான் மட்டுமே.

"இன்றைய சூழலில் இந்திய நிறுவனங்களின் இணக்கத்துக்குரிய ஒரே நாடு ஜப்பான்தான். அங்கு நமக்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஆனால் முன்பை விட குறைந்த செலவில் பணிகள் முடிய வேண்டும் என ஜப்பான் விரும்புகிறது. காரணம் எவ்வளவு குறைந்த செலவிலும் பணிகளைச் செய்துதர சீனா தயாராக உள்ளது. எனவே நமது நிறுவனங்கள் அதனைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்...." என்கிறார் நாஸ்காம் தலைவர் சோம் மித்தல்.

உலகின் முதல் 1000 ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்களைப் பட்டியலிட்டால் அதில் இந்தியாவைச் சேர்ந்த 281 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் இவற்றின் பங்களிப்பு ஜப்பானுக்கு அதிகம் தேவைப்படுகிறது.

ஏற்கெனவே டாடா, விப்ரோ மற்றும் இன்போஸிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஜப்பானில் பெரிய அளவு கால் பதித்துவிட்டன. ஜப்பானிய சூழல் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப இந்திய நிறுவனங்கள் விட்டுக் கொடுத்து பணிகளைச் செய்யத் துவங்கினால், இந்திய ஐடி துறை இன்றைய நெருக்கடியை எளிதாகச் சமாளித்துவிடும் என்கிறார்கள் இந்தத் துறையில் நிபுணர்கள்
.

No comments:

Post a Comment