Skip to main content

உலக அதிசயம் - மனித மூளை!




[ மூளையின் முன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருக்கின்றன.

ஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம். உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.]

ஒரு விமர்சனம் - ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு.

குழந்தைக்குத் தாய் முத்தம் தருவது,

நம் உடல் உஷ்ணம் 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகில் இருப்பது,

ஊசிக்காதில் நூலைச் செருகுவது,

கம்பிமேல் நம்மில் சிலர் நடப்பது,

உப்பு - புளிப்பு - தித்திப்பு எல்லாம் உணர்வது,

"தலைவர் அவர்களே! தாய்மார்களே!" என்று அரை மணி சொற்பொழிவது, நல்லது - கெட்டது - குற்றம் - பாவம் என்பதையெல்லாம் தீர்மானிப்பது,

"பத்துப் பேர் ஒரு வேலையை எட்டு நாட்களில் செய்தால் எட்டுப் பேர் இரண்டு வேலையைச் செய்ய எத்தனை நாள்?" போன்ற கணக்குகள் போடுவது, செக்ஸ் உணர்ச்சி - தியானம் இவை அனைத்துக்கும் காரணம் ஒரு இரண்டு எழுத்துச் சமாசாரம் - மூளை!

ஏன், இந்த பாராவை எழுதியதும் மூளைதான். அர்த்தம் பண்ணிக்கொண்டதும் மூளைதான்.

40,000 வருஷங்களாக நமக்கு இதே சைஸ் மூளை இருந்து வந்திருக்கிறது. இதைக் கொண்டுதான் விவசாயம் கண்டுபிடித்தோம். முதல் சக்கரங்கள் செய்தோம். மாட்டைப் பழக்கினோம். காட்டை வெட்டினோம். வியாதிகளை வென்றோம். சந்திரனுக்குச் சென்றோம்.

உடைத்துப் பார்த்தால் ஒரு ஓவர்சைஸ் அக்ரூட் போலிருக்கும் இந்த ஈர, அழுக்கு கலர் கொசகொசப்புக்கு உள்ளேயா இத்தனை சாகஸம்?

ஆரம்பத்தில் மனிதன் நம்பவில்லை. அரிஸ்டாட்டில் "இதயத்தில்தான் இருக்கிறது சூட்சுமம்" என்றார். "மூளை - சும்மா ரத்தத்தைக் குளிர வைக்க மாடிமேல் ஏ.ஸி." என்றார்.

இன்னும் மூளையைப் பற்றிய முழு ஞானமும் நமக்கில்லை. ஆனால், நவீன மருத்துவம், கம்ப்யூட்டர் கருவிகள் உதவியுடன் நிறையவே தெரிந்து கொண்டுவிட்டோம்.

அண்மையில் PET என்னும் பாஸிட்ரான் எமிஷன் டோமா கிராஃபி என்கிற கருவியைப் பயன்படுத்தி, நாம் பேசும்போது - பார்க்கும்போது - படிக்கும்போது -நினைக்கும்போது... மூளையில் எந்த எந்த இடங்களில் நடவடிக்கை ஜாஸ்தியாகிறது என்று கலர் கலராகக் காட்டியிருக்கிறார்கள்!

உலகிலேயே மிக மிக ஆச்சரியம் - மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.

இன்றைய கணிப்பொறிகளோடு ஒப்பிட்டால் மூளை ரொம்ப ரொம்ப நிதானம். ஆனால், கணிப்பொறியால் நீச்சல் அடிக்க முடியாது. டை கட்ட முடியாது. ஓரமாக பேப்பரைக் கிழித்துச் சுருட்டிக் காதை கிளீன் பண்ணிக்கொண்டு பொண்டாட்டியோடு வாக்குவாதம் பண்ண முடியாது.

இந்த மூளை என்னும் ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு முன் மூளையின் மேலமைப்பு, சைஸ் இவற்றைத் தெரிந்துகொள்வோம்.

சராசரி மூளை சுமார் ஒண்ணரை கிலோ கனம் இருக்கிறது (பிறந்த முழு குழந்தையின் பாதி கனம்) அளவு? அதுவும் சுமார் ஒண்ணரை லிட்டர் (1,400 மி.லி).

ஆனால், மூளை அளவு குழுவுக்குக் குழு வேறுபடுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு மூளை கொஞ்சம் குறைவு (அளவில்தான். காரணம், பெண்களே கொஞ்சம் சைஸ் குறைவானவர்கள் - ஆண்களோடு ஒப்பிடும்போது).

ஆனால், சைசுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்ல முடியவில்லை. அப்படிப் பார்த்தால் எஸ்கிமோக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மூளை ரொம்பப் பெரிசு. அனடோல் ஃப்ரான்ஸ் என்னும் மிக புத்திசாலி எழுத்தாளருக்குச் சின்னதாக இருந்தது மூளை (ஒரு கிலோதான்!). இன்னொரு பக்கம் திரும்பினால்... உலகிலேயே மிகப் பெரிய மூளை அளவு - ஒரு முட்டாளுக்கு இருந்திருக்கிறது!

தனிப்பட்ட மூளை கனத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை. ஆனால், மூளை சைசுக்கும் பாடி சைசுக்கும் உள்ள உறவு முக்கியம். உயரமான ஆசாமிகள் மூளை கனமாக இருக்கலாம். ஆனால், குள்ளமானவர்களின் மூளை எடை குறைவாக இருந்தாலும், உடல் எடையோடு ஒப்பிடும்போது அதே விகிதம் அல்லது அதிக விகிதம் இருப்பதால் குள்ளமானவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம்.

ஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம். உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.

மூளை / உடல் கன விகிதத்துடனும் தீர்மானமாகப் புத்திசாலித்தனத்தை இணைக்க முடியவில்லை. அப்படிப் பார்த்தால் வீட்டுச் சுண்டெலியும் முள்ளம்பன்றியும் ரொம்ப புத்திசாலிகளாக இருக்கவேண்டும். எலிப்பொறிக்குள் வடையைத் தின்றுவிட்டு 'ஸாரி' என்று சுண்டெலி லெட்டர் எழுதி வைக்கவேண்டும்! அதுபோல் முள்ளம் பன்றி 'நான் பன்றியும் அல்ல... என் முதுகில் இருப்பது முள்ளும் அல்ல!' என்று புதுக்கவிதை (ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை) படிக்கவேண்டும்! ஏனெனில், இவை இரண்டும் மனிதனைவிட மூளை / உடல் கன விகிதாச்சாரத்தில் அதிகம்.

எனவே எடை, சைஸ், விகிதாச்சாரம் இவற்றைவிட உள்ளே, சமாசாரத்தில் எத்தனை அடர்த்தி, எத்தனை மடிப்பு என்று கவனித்தால் மனிதன்தான் முதல்! நம் மூளைக்கு உள்ளே இருக்கும் சிக்கலில்தான் இருக்கிறது சூட்சுமம்!

நம் மூளை கனம் எப்போதும் ஒரே எடை இருப்பதுமில்லை. பிறந்ததில் ஆரம்பித்து மூன்று மடங்கு அதிகமாகிறது இளமையில். அதன் பிறகு வருஷத்துக்கு ஒரு கிராம் தலை கனம் குறைகிறது!

கொஞ்சம் சுவாரஸ்யமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்...

மிக அதிக எடையுள்ள மனித மூளை & 2049 கிராம்.

ஜோனாதன் ஸ்விஃப்ட் (கலிவர்ஸ் யாத்திரை எழுதிய எழுத்தாளர்) 2000 கிராம்.

சராசரி மனிதன் 1349 கிராம்.

அனடோல் ஃப்ரான்ஸ் (பிரெஞ்சு எழுத்தாளர்) 1017 கிராம்.

மைக்ரோ ஸெஃபாலிக்ஸ் எல்லாம் பிறவியில் மாங்காய்த் தலையர்கள் 300 கிராம்.

பாணலி கட் மாதிரி சுற்றி நம் மண்டையோட்டை வெட்டி 'டாப்' பைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் மூளை இப்படித்தான் இருக்கும் மடிப்பு மடிப்பாக, பாளம் பாளமாக, கசங்கி!

மூளை, ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத்தண்டிலிருந்து முளைக்கிறது. ஒருவாறு முட்டைக்கோஸ் தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக இலைகள் வளர்வதுபோல அல்லது வெங்காயம் போல... இதை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் பிரிக்கிறார்கள். முன் மூளை, நடுமூளை, பின் மூளை. முன் மூளை என்பது ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர் என்று இரண்டு பாதிகளாக இருக்கிறது. நடு மூளை என்பது கீழே இருந்துவரும் தண்டின் மேல்பகுதி. பின் மூளை என்பது நடுமூளையின் கீழ் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மிச்ச சொச்ச சமாசாரங்கள்.

முன்மூளையில் இரட்டை இரட்டையாக தலாமஸ், ஹைப்போதலாமஸ், பேஸல் காங்லியா, மூக்கு - கண் இவற்றின் முடிவுகள் போன்றவை உள்ளன.

பின் மூளையில் ஸெரிபெல்லம், மெடுலா, ஒப்ளாங்கட்டா... அட, உட்காருங்க சார்... இந்தப் பெயர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள். ஒவ்வொன்றையும் தனிப்பட்டு விளக்கத்தான் போகிறோம்.

முதலில் ஸெரிப்ரம் என்பதை மட்டும் மேலாகச் சுரண்டிப் பார்க்கலாம். முன் மூளையில் மடிப்பு மடிப்பாக மூளையின் நரம்பு அமைப்பில் முக்கால் பாகம் ஆக்கிரமிக்கும் இந்தப் பகுதிதான் நம் புத்திசாலித்தனத்துக்கு எல்லாம் காரணம். இந்த மடிப்புகளில் ஏதாவது அர்த்தம், காரணம் அல்லது ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த மடிப்புகளால் உள்ளே அடைத்து வைக்கக்கூடிய பகுதியின் பரப்பு அதிகமாகிறது என்னவோ உண்மை.

இந்த மடிப்புகளில் சில, நம் எல்லோருக்கும் இருக்கிறது. மூளை - ஆதி நாட்களிலிருந்து வளர்ந்த விதத்துக்குத் தகுந்தபடி இந்த மடிப்புகளின் வடிவம் இருக்கிறது. இந்த மடிப்புகளினால் இந்தப் பகுதியை இரண்டு பாதியாகவும், அவ்விரண்டு பாதிகளை நான்கு சுளைகளாகவும் பிரிக்க முடிகிறது. இந்த முயற்சியெல்லாம் நம் வசதிக்காக, மூளையின் எல்லா இடங்களுக்கும் பேர் கொடுத்து அவற்றை அடையாளம் கண்டுகொள்ளத்தான். ஆனால், இன்ன இடத்தில் இன்னது நடக்கிறது என்று திட்டவட்டமாக இன்னும் சொல்ல முடியவில்லை.

இந்த இரட்டைப் பகுதியைக் குறுக்கே வெட்டினால் ஒரு ஆச்சரியம் தெரிகிறது. மேலாக கார்ட்டெக்ஸ் என்று ஒரு சுமார் நாலரை மில்லி மீட்டர் போர்வை அல்லது மரத்துக்கு மேல்பட்டை போலிருக்கும் பகுதியில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்புச் செல்கள் உள்ளன. அவற்றுக்கு இடையே உள்ள இணைப்பைப் பார்த்தால் பிரமிப்பு! ஒரு கன இன்ச்சுக்குள் சுமார் 16,000 கிலோ மீட்டர் நுட்பச் சரடுகள்!

சிந்தனை சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களும் கார்ட்டெக்ஸ் பகுதியில் நிகழ்வதால் இத்தனை அடர்த்தி..!

முன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருப்பதை உணர்ந்து போட்டது போட்டபடி விலகிவிட்டோம்.

இன்னும் கொஞ்சம் வெட்டிப் பார்ப்போம். இத்தனை சிக்கல் இந்த மேற்பரப்பில் எதற்காக எனில், இங்கேதான் தலைமைச் செயலகம் இயங்குகிறது. இங்கேதான், கடைசி அலசல் மூலம் பார்க்கிறோம்... கேட்கிறோம்... சிந்திக்கிறோம்... சித்திரம் வரைகிறோம்... எழுதுகிறோம்... கவிதை பண்ணுகிறோம்... பாடுகிறோம்!

இந்த மெல்லிய மேல்பட்டையைக் குறுக்கே வெட்டினால் ஆறு வரிசை தெரிகிறது. இந்த கார்ட்டெக்ஸ் பகுதியைத்தான் பழுப்பு சமாசாரம் என்று சொல்கிறார்கள். இதற்குக் கீழே போனால் நிறைய வெள்ளைப் பகுதி தெரிகிறது. இங்கே கோடிக்கணக்கான நரம்பு நூல்கள் அதி சிக்கலாகத் தென்படுகின்றன. இதிலே மூன்று வகை கனெக்ஷன் சொல்ல முடிகிறது. கொஞ்சங் கொஞ்சம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போல லோக்கல் இணைப்பு. நடு மையத் தண்டுக்கு இணைப்பு, மூளையின் இடது, வலது பாதியை இணைக்கும் கார்ப்பஸ் கலாஸ்ஸம் என்னும் நரம்புக் கயிறு. நாலு இன்ச் நீளமிருக்கும் இந்தப் பாலம் விசித்திரமானது.

தாமஸ் ஆல்வா எடிஸன், ''உங்கள் உடலின் முக்கியப் பணி உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது'' என்றார்.

எடிஸன் அவ்வாறு சொல்லக்கூடியவர்... மூளையை நன்றாக உபயோகித்தவர்.

நியோ கார்ட்டெக்ஸ் என்னும் இந்த மேல்பகுதியின் சுருக்கம் ஒருவேளை எடிஸனுக்கு அதிகம் இருந்திருக்கலாம். ஆறு வயசுக்குள் நம் மூளை முழு சைஸில் 90 சதவிகிதம் வளர்ந்துவிடுகிறது... அதற்குப் பின் வளர்ச்சி என்பதெல்லாம் நாம் மேற்சொன்ன நியூரான்களுக்கு இடையேயான இணைப்புக்களின் விருத்திதான். இடம் குறைச்சல். எனவே, உள்ளுக்குள்ளே மடிப்புக்கள் அதிகரிக்கின்றன.

குழந்தை பிறந்தவுடன் அதன் மூளையின் மொழி சம்பந்தப்பட்ட பகுதிகளின் நியூரான் இணைப்பு அதிகமாக அடர்த்தியில்லாமல் இருக்க... ஆறு வயசுக்குள் அடர்த்தி அதிகரித்துவிடும்.

புத்திசாலித்தனம், அறிவு என்பதெல்லாம் இந்த நியூரான் இணைப்புகளின் சிக்கலில் இருக்கலாமோ என்று கருதுகிறார்கள்.

வலது இடது பாதி மூளைகளுக்கு இடையேயுள்ள கார்ப்பஸ் கலாஸ்ஸம் இணைப்பை வெட்டிப் பார்த்தார்கள். ஒரு ஆசாமிக்கு கால் கை வலிப்பு அதிகமாகி, கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போக, ஒரு கடைசி முயற்சியாக இதை வெட்டிவிட்டார்கள். அவனுக்குக் குணமாகியது. ஆனால், சுபாவத்தில் விநோதமான மாறுதல்கள் ஏற்பட்டன.

ரோஜர் ஸ்பெர்ரி, மைக்கல் கஸானிகா என்று இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1967-ல் செய்த பரிசோதனைகள், நம் மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் தனித்தனியான முறைகளில் வளர்கின்றன. இந்த 'கார்ப்பஸ் கலாஸ்ஸிம்' இல்லையேல், ஒரு பக்கத்துக்கு, மற்ற பக்கத்தின் அறிவு விருத்தியைப் பற்றித் தெரியவே தெரியாது' என்று நிரூபித்தன.

Comments

Popular posts from this blog

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத ...

Amazing Oranges~~simply superb

ஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்

ஆண்டாள் அருளியது பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும். விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். ...