Thursday, December 16, 2010

ராமாயணம் பகுதி-2



குழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் அமைந்தாள். குழந்தை இல்லாததால் கேகய நாட்டுமன்னன் தன் மகள் கைகேயியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொடுத்தார். ஆனால், அந்த பெருமாட்டிக்கும் குழந்தை பிறக்கவில்லை. அவள் அழகில் மிகவும் சிறந்தவள். ராமாயண கதாபாத்திரங்களிலேயே அழகில் சிறந்தவளாக காட்டப்படுபவள் கைகேயிதான். இதன்பின்னும் சுமித்ரா என்ற பெண்மணியை தசரதர் திருமணம் செய்தார். அவள் அறிவில் சிறந்தவள். மூன்று மனைவியர் இருந்தும் நாடாள ஒரு குழந்தைகூட பிறக்காதது அனைவர் மத்தியிலும் கவலையை எழுப்பியது. இந்நேரத்தில் ராஜகுரு வசிஷ்டர் அரண்மனைக்குள் வந்தார். வாடிப்போயிருந்த தசரதரின் முகத்தைப் பார்த்தார். தசரதரின் கவலையை குறிப்பால் உணர்ந்த அவர், தசரதா! நீ கவலை ஏதும் படவேண்டாம். ரிஷ்யசிருங்கர் என்ற முனிவர் இருக்கிறார். அவர் வேள்விகளை எவ்வித பங்கமும் இல்லாமல் சிறப்பாக செய்யக்கூடியவர். அவரைக்கொண்டு அஸ்வமேத யாகமும், புத்திரகாமேஷ்டி யாகமும் செய்தால் குழந்தையும் கிடைக்கும். அத்துடன் இந்த உலகமே உன் வசமாகும் என யோசனை சொன்னார்.

தசரதர் மகிழ்ந்தார். வேள்விகளின்போது மந்திர உச்சரிப்புகள் மிகச்சரியாக இருக்க வேண்டும். சிறிது பிசகினால்கூட விளைவுகள் எதிர்மறையாக இருக்கும். ஆனால் ரிஷ்யசிருங்கரின் நாக்கிலிருந்து வரும் ஒவ்வொரு மந்திர வார்த்தையும் எந்த பிசகும் இல்லாமல் மிகத்தெளிவாக இருக்கும். வசிஷ்டர் கூறியபடியே சிருங்கர் மிகச்சிறப்பாக இரண்டு வேள்விகளையும் செய்துமுடித்தார். அவரது ஆலோசனையின்படி, தசரதரும், அவரது மூன்று தேவியரும் மிகக்கடுமையான விரதங்களை மேற்கொண்டனர். இந்நேரத்தில் பூவுலகை ராவணன் என்ற அரக்கன் ஆண்டுகொண்டிருந்தான். அவனால் நல்லவர்கள்கூட தீய வழிக்கு சென்றுகொண்டிருந்தார்கள். நல்லதைக்கற்றுக் கொள்வதைவிட, தீயதை கற்றுக்கொள்வது மிகவும் எளிது. சாதாரண சுகங்களுக்காக தீமையான மது, மாது, சூது ஆகிய விஷயங்களில் மக்களில் ஒருசாரார் கெட்டுக்கிடந்தார்கள். விண்ணுலகிற்கு இந்த தகவல் எட்டியது. ராவணனின் புகழ் பெருகுவதைப் பார்த்தால் தங்களது பதவிக்கும் ஆபத்து வரும் என தேவர்கள் கருதினர். அவர்கள் பிரம்மனை அணுகி, விஷயத்தை எடுத்துரைத்தனர். அவர்களிடம் பிரம்மா, தேவர்களே! அந்த ராவணனை யாராலும் கொல்ல முடியாது. அதற்குரிய வரத்தை நானே அவருக்கு கொடுத்திருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவன் தவறிவிட்டான்.

பூவுலகில் எந்தப் பொருளாலும் தனக்கு அழிவு வரக்கூடாது எனக் கேட்ட அவன், மனிதர்களால் மட்டும் அழிவு வரக்கூடாது என கேட்கவில்லை. எனவே, யாராவது ஒருமனிதனால் மட்டுமே அவனை கொல்ல இயலும். அப்படிப்பட்ட தைரியசாலிகள் யாருமே இல்லை. அவனது மூச்சுக்காற்று பட்டால்கூட சாதாரண மனிதர்கள் அழிந்து போவார்கள். எனவே நாம் மகாவிஷ்ணுவை அணுகுவோம். அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்போம், என்றார். பிரம்மனும் தேவர்களும் பாற்கடலில் துயில் கொண்டிருந்த பரந்தாமனை அணுகினர். அவர்களிடம் மகாவிஷ்ணு, உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன். மண்ணுலகில் மானிடனாக பிறக்கிறேன். ராமன் என்ற பெயரில் விளங்குவேன். ராமாவதார காலம் முடிந்தபின்பு மீண்டும் வைகுண்டம் திரும்புவேன், என உறுதியளித்தார். தேவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேநேரம், ரிஷ்யசிருங்கர் நடத்திய வேள்வியும் நிறைவுபெற்றது. வேள்விக்குண்டத்திலிருந்து கண்களால் உற்று நோக்கமுடியாத அளவுக்கு படுபிரகாசமான ஒளிப்பிழம்பு எழும்பியது. அதிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. அந்த உருவத்தின் கையில் பொன்னால் செய்யப்பட்ட ஒரு பாத்திரம் இருந்தது. பாத்திரம் நிறைய தேவலோக பாயாசம் இருந்தது.

அவ்வுருவம் தசரதன் அருகில் வந்து, மகாராஜா தசரதனே! மக்கள் மீது நீ மிகவும் அன்பு வைத்திருக்கிறாய். மக்களைக் காப்பவரை ஆண்டவன் எப்போதும் விரும்புவான். நான் கிருஷ்ணபரமாத்மாவின் தூதனாக இங்கே வந்திருக்கிறேன். இந்த தங்கப் பாத்திரத்தில் உள்ள தேவலோக பாயாசத்தை ஏற்றுக்கொள். உன் மனைவியருக்கு இதை பங்கிட்டுக்கொடு. இந்தப் பாயாசம் நோயற்ற வாழ்வைத்தரும். செல்வ வளம் செழிக்கும். முக்கியமாக, நீ கேட்கும் புத்திரபாக்கியம் கிடைக்கும். உனக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள், என்றது. தசரதர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாயாச பாத்திரத்தைப் பெற்று அரண்மனைக்குத் திரும்பினார். அந்தப் பாயாசத்தில் பாதியை முதல் மனைவி கவுசல்யாவுக்கு கொடுத்தார். மீதியிருந்ததில் பாதி பகுதியை சுமித்ராவுக்கு வழங்கினார். இதிலும் எஞ்சியதை இரண்டு பங்காக்கி அதில் ஒரு பகுதியை கைகேயிக்கு கொடுத்தார். சற்று யோசனை செய்துவிட்டு, மீதியிருந்ததை இரண்டாவது தடவையாக சுமித்ராவுக்கு கொடுத்துவிட்டார். இவ்வாறு பாயாசத்தை பிரித்துக் கொடுத்ததன் விளைவாகத்தான் பிற்காலத்தில் கைகேயியின் புத்தி தடுமாறி இருக்கவேண்டும். ஏனெனில் கைகேயிக்கு மட்டுமே குறைந்த அளவு பாயாசம் கிடைத்தது. அவளால்தான் ராமாயணம் என்ற காப்பியமே உருவாயிற்று. பாயாசத்தை அருந்திய தேவியர் மூவரும் கர்ப்பமடைந்தனர். சித்திரை மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்த நிலையில் கவுசல்யா தேவிக்கு ஸ்ரீ ராமபிரான் அவதரித்தார். அடுத்தநாள் கைகேயி பூச நட்சத்திரத்தில் பரதனை பெற்றாள். ஆயில்ய நட்சத்திரத்தில் சுமித்ராவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் லட்சுமணன் மற்றும் சத்ருக்கனன் ஆகியோர்.

No comments:

Post a Comment