| |
ஒவ்வொரு இலையிலும் ஓர் உணவுத் தொழிற்சாலை: மரம்,செடி,கொடிகளின் இலைகளின் உருவங்களில் (நீள, அகலம்) தான் எவ்வளவு வேறுபாடு. கருவேல மரத்தின் மிகச்சிறிய இலைகள் ஒன்று அல்லது இரண்டு மில்லி மீட்டர் நீள அகலம் கொண்டவை. தேக்கு மரத்தின் இலைகள் அவற்றைக் காட்டிலும் நூறு மடங்குப் பெரியவை. வாழை இலைகள் ஆயிரம் மடங்குப் பெரியவை. எல்லா இலைகளிலுமே ஒரு உணவுத்தொழிற்சாலை உள்ளது. இலைகளின் செல்களில் உள்ள பச்சையம் (க்ளோரோஃபில்) சூரிய ஒளியிலிருந்து பெறும் சூரியனின் ஆற்றலை, காற்றிலுள்ள கரியமில வாயு மற்றும் வேரிலிருந்து உறிஞ்சப்ப்பட்டு இலையை அடையும் நீரின் நுண்துளிகளையும் ( மாலிக்யூல்கள்) பயன்படுத்தி, சர்க்கரைச் சத்தாக மாற்றுகிறது. இதைத்தான் ஒளிச்சேர்க்கை என்கிறோம். சத்து தண்டுப்பகுதி வழியாக செடி மரத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.நெல்மணிகள், கரும்பின் இனிப்பு, மாம்பழம், முந்திரி, பாதாம், பாகற்காய் எல்லாவற்றுக்குமே இந்த உணவுதான் ஆதாரம். இந்த உணவு உற்பத்தித் திறன் காரணமாகத் தாவரங்கள் தாமும் வாழ்ந்து ஏனைய உயிரினங்களையும் ஆடு, மனிதன் உள்பட வாழ வைக்கின்றன.
ஒவ்வொரு இலையிலும் ஓர் ஏர்கூலர் மற்றும் நுரையீரல்: சர்க்கரை அல்லது மாவுச்சத்தின் உபரிப் பொருளாக ஆக்சிஜன் (பிராண வாயு) இலைகளின் அடிப்பகுதியின் மேற்பரப்பில் உள்ள ஸ்டோமேட்டா என்றழைக்கப்படும் செல்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
கூடவே சற்று உபரி நீரும் ஆவியாக வெளியேறுகிறது. இதன் காரணமாகவே நாம் வெயில் பொழுதில் மரத்தடியில் நாம் ஒதுங்கும்போது புத்துணர்வு பெறுகிறோம், குளிர்ச்சியும் உண்டு. இதே ஸ்டோமேட்டா செல்கள்தான் ஒளிச்சேர்க்கை நிகழாக சமயங்களில் சூரியஒளி இல்லாத பகல்பொழுதிலும், இரவு நேரங்களிலும் ஏனைய உயிரினங்களைப் போல காற்றைச் சுவாசிக்கின்றன. அதாவது காற்றிலுள்ள பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. அதனால் இரவு நேரங்களில் மரத்தடியில் இளைப்பாறும்போது புத்துணர்வு தோன்றாது. புளிய மரமும், பேயும்: கொஞ்சம்கூடக் காற்றின் அசைவு இல்லாத சமயங்களில் பெரிய அடர்ந்த புளியமரம் போன்ற மரத்தடியில் உறங்கினால் உங்களைப் பேய் அடித்துக் கொல்லும் வாய்ப்பு உண்டு என்றே பாமர மக்கள் நம்புகிறார்கள்.
அதன் அறிவியல் அடிப்படையிலான விளக்கம் : காற்று அசைவு இல்லாவிடினும் இலைகள் சுவாசிக்கும்போது வெளியேறும் கரியமிலவாயு காற்றைவிடச் சற்று கனமானது. கரியமில வாயு காற்றில் சாதாரணமாக 0.5 விழுக்காடுதான் உள்ளது. இரவு நேரங்களில் அதுவும் காற்றின் சலனம் இல்லாவிடில் மரத்தடியில் கரியமிலவாயுவின் அளவு அதிகரிப்பதால் நமக்கு மூச்சு அடைக்கும். உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவர்களின் உயிரை எடுப்பது இந்தப் பேய்தான். ஒவ்வொரு மரத்திலும், பொறியியல் கட்டிடக்கலை தொழில்நுட்பம் (எஞ்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்சர்): ஆஸ்திரேலியா நாட்டில் வளரும் சில தைல மரங்கள் (யூக்கலிப்டஸ்) 300 அடி உயரம் வளரக் கூடியவை. அமெரிக்க கண்டத்தில் வளரும் சேக்கோவியா மரங்கள் 400 அடிக்கும் கூடுதலாக வளர்கின்றன. அவற்றை நாம் பார்த்ததில்லை.
நாம் பார்த்துள்ள, பார்த்து வரும் பெரியபுளியமரம் அல்லது வேப்பமரங்கள் 60-70 அடி உயரம் வளர்கின்றன. 20-30 அடி உயரம் உள்ள தடிமனான அடிமரம் பிறகு அவற்றிலிருந்து பிரிந்து செல்லும் கிளைகள், கொப்புகள், அவற்றில் வளரும் இலைகள், காய்க்கும் காய்கள், பழங்கள் எல்லாம் 60-7- டன்களுக்கு மேல் எடை கொண்டவை. காற்றுக்கும் வளைந்து கொடுத்து அதே சமயம் உறுதியாக நிற்பவை. இந்த ஒட்டுமொத்த எடையைப் பூமிக்கடியில் வேர்கள் ஒரு கட்டிடத்தின் அஸ்திவாரம் போல் தாங்கிக் கொள்கின்றன. அடிமரத்திலிருந்து பிரியும் கிளைகள், கோப்புகள் எல்லாமே ஒரு கணிதம்.- குறிப்பாக ஜியோமிதி கணித அடிப்படையில் பிரிந்து செல்கின்றன. அதாவது கட்டிடக்கலை வல்லுநர் திட்டமிடுவதுபோல மரமும் ஒரு திட்டத்துடன்தான் கிளைகளைப் பரப்புகிறது. அதே சமயம் இலைகளுக்குப் போதுமான அளவில் சூரிய ஒளி கிடைப்பதையும் உறுதி செய்து கொள்கிறது. அப்போதுதான் நாம் முன்பே குறிப்பிட்ட ஒளிச்சேர்க்கை உணவு தயாரிப்பு எல்லாமே நிகழ முடியும். |
Comments
Post a Comment