தலவரலாறு : தெற்கு டெக்சாஸ் இந்து சமூக அமைப்பின் சார்பில் கார்பஸ் கிறிஸ்டி பகுதியில் 2002ம் ஆண்டு ஆகம சாஸ்திர விதிப்படி ஸ்ரீ வெங்கடேஷ்வரர் திருக்கோயில் உருவாக்கப்பட்டது. தெற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள இந்து சமூகத்தினருக்கு சேவை ஆற்றுவதும், மத சேவைகள் புரிவதும் இக்கோயிலின் முக்கிய நோக்கமாக கொள்ளப்பட்டது. தெற்கு டெக்சாஸ் இந்து சமூக அமைப்பின் உறுப்பினர்களான சுப்பாராவ் புர்ரா, லலிதா ஜானகி, ராமகிருஷ்ண முலுகுட்லா,பனுகந்த் பட்டேல், எம்.பி.சுதாகரன் ஆகியோரின் சீரிய முயற்சியால் இக்கோயில் கட்டப்பட்டது. கோயிலின் வளர்ச்சிப் பணியாக இந்திய சமூகத்தினருக்கு பயன்படும் விதமாக சமூக அரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டது.
லாப நோக்கமற்ற அமைப்பாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் சமூக பணிகளுக்காக ஸ்டிவர்டு ரைஸ் என்பவரால் நிலம் பெறப்பட்டது. அதே சமயம் கோயிலுக்கென கணபதி, வெங்கடேஷ்வரர், பத்மாவதி, ஆண்டாள், சிவன், கருடர் மற்றும் துவாரபாலகர்கள் உள்ளிட்ட தெய்வ விக்ரஹங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டன. பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, கோயிலுக்கான நிதி வசூலிக்கப்பட்டது. கோயிலின் நிர்வாக உறுப்பினர்களின் முயற்சியாலும், பல்வேறு சமூக ஆர்வலர்களின் உதவியுடனும் கார்பஸ் கிறிஸ்டி பகுதியில் கோயிலுக்கான நிலம் பெறப்பட்டது. அந்த புதிய நிலத்தில் 2003ம் ஆண்டு ஜூன் 18ம் தேதியன்று வேத சாஸ்திர முறைப்படி கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கோயிலில் பல்வேறு உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, நவகிரகங்கள் உள்ளிட்ட சன்னதிகளும் கூடுதலாக அமைக்கப்பட்டது. இதை தவிர மார்பிள் கல்லால் வடிவமைக்கப்பட்ட ராதா கிருஷ்ணர், ராம பரிவாரங்கள் மற்றும் தத்தாத்ரேயர் உள்ளிட்ட தெய்வ சிலைகள் அமைக்கப்பட்டன. பின்னர் பக்த சமூகத்தின் விருப்பத்தின் பேரில் கபீர்ஜி முனிவரின் சிலையிலும் கோயிலில் அமைக்கப்பட்டது.
2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் திருப்பதியில் இருந்து புதிய கோயிலுக்கான வடிவமைப்பு மாதிரி தயார் செய்யப்பட்டு, அதற்கு பல்வேறு சமூக அமைப்புகளிடம் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் கோயிலின் வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு, கோயில் திருப்பணி துவங்கப்பட்டது. தெய்வ விக்ரஹங்கள் இந்தியாவிலிருந்து பெறப்பட்டு, தற்காலிக இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சாம்பவி தனஞ்சய சுவாமிகளால் இக்கோயிலுக்கு பார்வதி தேவி சிலையும் அனுப்பி வைக்கப்பட்டது. மிக நேர்த்தியாக, அழகுமிளிரும் விதமாக அமைக்கப்பட்ட இக்கோயிலுக்கு சத்யநாராயண ஆச்சார்யார் தலைமையில் 2005ம் ஆண்டு மே 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயில் நேரம் : காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை ; மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை. வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை கோயில் திறக்கப்படுகிறது.
ஆலய முகவரி :
Sri Venkateswara Temple,
South Texas Hindu Society,
10401 McKinzie Ln,
Corpus Christi, TX 78410
தொலைப்பேசி : (361) 241 - 0550
இமெயில் : svtemple@southtexashindusociety.org
இணையதளம் : http://svtempletexas.org
Comments
Post a Comment