Wednesday, February 23, 2011

மனிதர்களின் அற்ப ஆயுள்!




மனிதர்களின் அற்ப ஆயுள்!

ஒரு முறை தேவ சிற்பியான விஸ்வகர்மாவிடம் இந்திரன், பதினான்கு உலகங்களிலும் இப்படி ஒரு மாளிகை இல்லை என்று சொல்லும்படியாக மிகச்சிறந்ததும் மிகப் பெரியதுமாக ஒரு மாளிகை கட்ட வேண்டும் என உத்தரவிட்டான் விஸ்கர்மாவும் தன் உதவியாளர்களுடன் மாளிகை கட்ட தயாரானார். இந்திரனின் விருப்பப்படி மாளிகை கட்ட வேண்டியிருந்ததால், பல தேவ வருடங்கள் ஆகியும் விஸ்வகர்மாவால் அப்படி ஒரு மாளிகையை கட்டி முடிக்க முடியவில்லை. விஸ்வகர்மாவும் அவரது உதவியாளர்களும் களைத்து போயினர். நொந்து போன இந்திரன் என்ன செய்வது என சிந்தித்து கொண்டிருக்கும். வேளையில், சாகா வரம் பெற்ற லோமசர் என்ற மகரிஷி அங்கு வந்தார். அவருக்கு உடம்பெல்லாம் ரோமங்கள் இருந்ததால் லோமசர் என்று பெயர். இவருக்கு இடுப்பில் சிறு துணியும் தலையில் ஒரு பாய் மட்டுமே சொத்து. அவரைப் பார்த்து இந்திரன், மகரிஷி ! பாயை எதற்கு தலைக்கு மேலே விரித்தாற் போல் வைத்திருக்கிறீர்கள் ? எனக் கேட்டான். அதற்கு லோமசர், இந்த உடலோ வீணானது. இதைக் காப்பாற்றுவதற்கு ஒரு வீடு கட்ட வேண்டுமா என்ன ? இந்த உடலை வெப்பத்திலிருந்தும், மழையிலிருந்தும் காப்பதற்காக தலையின் மேல் பாயை வைத்துள்ளேன், என்றார். எதிர்பார்க்காத இந்த பதிலை கேட்டு அதிர்ந்த இந்திரன், சிரஞ்சீவியான தாங்களா தங்கள் உடலை வீண் என்கிறீர்கள் ?

அதற்கு மகரிஷி, சிரஞ்சீவியாக இருந்தாலும் என் உடலும் ஒரு நாள் போக வேண்டியது தானே ? என் உடம்பிலுள்ள அத்தனை ரோமங்களும் உதிர்ந்ததும் இந்த உடல் அழிந்து விடும். என் மார்பு பகுதியை பார்... அதில் காசு அளவுக்கு ரோமம் உதிர்ந்து விட்டது. இத்தனைக்கும் என் ரோமம் உதிர்வதற்கு அதிக காலம் ஆகும் என நினைக்க வேண்டாம். ஒவ்வொரு பிரம்மா மறையும் போதும் உன் உடலிலிருந்து ஒரு ரோமம் உதிர்ந்து விடுகிறது. பிரம்மாவின் ஆயுட்காலம் என்பது பதினாறு இந்திரர்களின் ஆயுட் காலம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு நாள். அப்படி 365 நாளானால், பிரம்மாவுக்கு ஓராண்டு. அப்படி நூறு ஆண்டுகள் சேர்ந்தது பிரம்மாவின் ஆயுள். இப்படியே ஒவ்வொரு ரோமமாக என் உடலிலிருந்து அனைத்து ரோமங்களும் உதிர்ந்ததும் என் ஆயுள் முடிந்துவிடும். இந்த அற்ப ஆயுளுக்காகவா என்னை வீடு கட்டி கொள்ள சொல்கிறாய் ? என்றார் மிகச் சாதரணமாக. மீண்டும் அதிர்ந்தான் இந்திரன். மகரிஷி லோமசரின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடும் போது தன் ஆயுட்காலமானது மிகவும் அறபத்தனமானது என்பதை இந்திரன் எண்ணிப்பார்த்தான். உடனே அந்த பெரிய மாளிகை கட்டும் திட்டத்தை அப்படியே விட்டுவிட்டான். நாம் வாழ்வதோ கொஞ்ச காலம் தான் அதில் பணம், பொருள் என சேர்க்காமல் புண்ணியத்தை மட்டும் சேர்ப்போம்

Friday, February 11, 2011

துன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு!




சிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர்.

1. பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கும் பைரவர் என்பது பெயராயிற்று.

2.பைரவருக்கு ÷க்ஷத்திர பாலகமூர்த்தி என்றும் ஒரு பெயருண்டு. ÷க்ஷத்திரம் என்றால் கோயில். பாலகர் என்றால் காப்பவர். கோயிலைக் காப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

3. பொதுவாக பைரவர் நீலமேனி கொண்டவராய், சிலம்புகள் அணிந்த திருவடியைக் கொண்டவராய், பாம்புகள் பொருந்திய திருவரையும் மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், பாசம், உடுக்கை, மழு முதலியன தாங்கிய திருக்கரங்களை உடையவராய் கூறப்பட்டாலும் அஷ்டபைரவர் வடிவங்களாகக் கூறும்போது அவரின் வண்ணம் ஆயுதம், வாகனம் இவை மாறுபட்டுக் காணப்படும்.

4. காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு இடங்களிலும் பைரவர் கோயில்கள் காணப்படுகின்றன.

5. தாராசுரம் மற்றும் திருப்போரூரில் பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.

6. பைரவரின் பொதுவான வாகனம் நாய் ஆகும். ஒற்றை நாய் வாகனம் காணப்பட்டாலும் நகரத்தார் கோயில்களில் பைரவர் வடிவத்தில் பெரும்பாலும் இரு நாய் வாகனங்களே காணப்படுகின்றன. ஆனால் திருவான்மியூர், போரூர், வேதாரண்யம், திருவிற்கோலம் ஆகிய தலங்களில் பைரவருக்கு நாய் வாகனம் இல்லை.

7. அஷ்ட பைரவ வடிவங்களில் அன்னம், ரிஷபம், மயில், கருடன், குதிரை, யானை, சிம்மம், நாய் ஆகியவை வாகனங்களாகக் காட்டப்பட்டுள்ளன.

8. பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ விரதம் இருந்து வழிபட்டால் எந்தத் துன்பமும் நம்மை அணுகாது.

பொங்கல் திருநாள், மகர சங்கராந்தி, ரதசப்தமி, உத்தராயன புண்ணியகாலத் துவக்கம் என எண்ணற்ற வைபவங்களுடன் திகழும் தை மாதத்துக்கு இன்னொரு விசேஷமும் உண்டு. ஆமாம் காவல் தெய்வம் பைரவர் வழிபாட்டுக்கும் உகந்த மாதம். தை மாதம் முதல் செவ்வாயில் துவங்கி, அனைத்து செவ்வாய்க் கிழமைகளிலும் பைரவரை வழிபடுவது சிறப்பு. அதிலும் பைரவரின் மகாத்மியத்தை அறிந்து வழிபடுவதால், பலன்கள் பன்மடங்கு அதிகம் கிடைக்கும். சிவாலயங்களில், விநாயகர் தரிசனத்துடன் ஆரம்பிக்கும் வழிபாடு, பைரவ தரிசனத்துடன் நிறைவடையும். அகில உலகங்களையும் காத்து ரட்சிக்கும் சிவனாரின் கோயில்களுக்கு பைரவரே காவல் தெய்வம். உலகையும் அதில் அமைந்த திருத்தலங்கள் மற்றும் தீர்த்தங்களையும் காவல் புரியும் தெய்வம் ஆதலால், ÷க்ஷத்ரபாலகன் என்றும், தீர்த்தபாலகன் என்றும் பைரவரை பலவாறு போற்றுகின்றன புராணங்கள். தன்னுடைய அன்பர்களுக்குத் துன்பம் விளைவிக்கும் தீயோர்களுக்கு பயங்கரமானவராகத் திகழ்வதால் பைரவர் என்றும், வஜ்ஜிரகோட்டையாகத் திகழ்ந்து, தன்னை சரணடையும் பக்தர்களைக் காப்பவர் ஆதலால் வயிரவ மூர்த்தி என்றும் இவருக்கு திருப்பெயர் ஏற்பட்டது. ஞானிகளிடம் அறிவை வளர்க்கும் ஞான பைரவராகவும், யோகிகளுக்குக் காவலாக இருப்பதுடன், தாமே பெரிய யோகியாக விளங்கி யோக பைரவராகவும், வீரர்களிடம் உக்கிர பைரவராகவும், பஞ்சபூதங்களின் சீற்றங்களில் இருந்து பூமியைக் காப்பதால் பூத பைரவராகவும் அருள்புரிகிறார்.

உலகையும் உயிர்களையும் காக்கும் தன்மை சிவபெருமானுக்கே உரியது என்பதால், அவருடைய ஒருகூறே பைரவமூர்த்தியாக எழுந்தருளி, அன்பர்களுக்கு அருள்கிறது என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மன், ஆதிகாலத்தில் சிவனாரைப் போன்றே ஐந்து தலைகளுடன் திகழ்ந்தார். ஒருமுறை, அவர் அகந்தையால் அறிவு மயங்கிச் சிவ நிந்தனை செய்தபோது, சிவபெருமான் பைரவரைத் தோற்றுவித்தார். பைரவர், பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து எடுத்து கபாலமாக்கிக் கொண்டார். அடி-முடி தேடியபோது திருமுடி கண்டேன் எனப் பொய்யுரைத்ததால் பிரம்மனின் ஐந்தாவது தலையை பைரவர் மூலம் கொய்ததாகவும் ஒரு புராண தகவல் உண்டு. பிரம்மனின் சிரம் கொய்யப்பட்ட திருவிடம் திருக்கண்டியூர் ஆகும். தஞ்சாவூர்-திருவையாறு பாதையில் உள்ள இந்த ஊர், சிவனாரின் அட்ட வீரட்ட திருத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு அருள்பாலிக்கும் திருக்கண்டீஸ்வரரையும், பிரம்மனின் சிரம் கொய்த பைரவரையும் தரிசிப்பது சிறப்பு.

அந்தகாசுரன் என்பவன் தேவர்களைத் துன்புறுத்தியதுடன், அவர்களைப் பெண் வேடத்துடன் திரியும்படிச் செய்து அவமானப்படுத்தினான். தேவர்கள், சிவபெருமானை சரணடைந்தனர். அவர் மகாபைரவரைத் தோற்றுவித்து அந்தகனை அழிக்கும்படி ஆணையிட்டார். அதிஉக்கிரத்துடன் அந்தகன் மீது போர் தொடுத்த பைரவர், அவனைத் தனது சூலத்தில் குத்தித் தூக்கியவாறு மூன்று உலகங்களிலும் திரிந்தார். அவனுடைய உடலிருந்து வழிந்த ரத்தத்தைக் குடித்தார். அஞ்சி நடுங்கிய அந்தகாசுரன், பைரவரைத் துதித்தான். அதனால் மகிழ்ந்த பைரவர், அவனை சூலத்தில் இருந்து விடுவித்தார். அதேபோல் முண்டகன் முதலிய இன்னும்பல அசுரர்களையும் அழித்து, பைரவர் தேவர்களைக் காத்து பரிபாலித்த கதைகளும் புராணங்களில் உண்டு. வானவர்களுக்கு மட்டுமல்ல தூய பக்தியுடன் தன்னை வழிபடும் பக்தர்களுக்கும் வேண்டிய வரம் தந்து அருள்பாலிக்கும் கண்கண்ட தெய்வம் பைரவர். கடன் தொல்லை நீங்கவும், சத்ருபயம் அகலவும், பில்லி-சூனியம் போன்ற தீவினைகளின் பாதிப்புகள் இல்லாமல் இருக்கவும் பைரவரை பலவாறு போற்றி வழிபடுகின்றனர்.

தேய்பிறை அஷ்டமி திருநாள் பைரவரை வழிபடுவதற்கு உகந்த தினம். குழந்தை இல்லாமல் வருந்தும் தம்பதியர், தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமி திருநாட்களில்... செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வத்தால் பைரவரை அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பர். அதே போல், தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ ஹோமம் செய்வதுடன், பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் கலச தீர்த்தத்தைப் பருகுவதால் தீராத பிணிகளும் தீரும் என்பர். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று, அங்கு அரள்பாலிக்கும் பைரவமூர்த்திக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி, தயிர் அன்னம், தேன் மற்றும் தேங்காய் சமர்ப்பித்து வழிபடுவதால் பில்லிசூனியம் போன்ற தீவினைகள் நீங்கும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். வீட்டிலேயே நேரம் கிடைக்கும் போது பைரவ சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வதாலும் மிகுந்த பலன் உண்டு.

ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில், பைரவருக்கு விபூதி அபிஷேகத்துடன், வடைமாலை அணிவித்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்வதால், திருமணத் தடை அகலும் என்பார்கள். வளர்பிறை அஷ்டமி திருநாட்களில் அல்லது வெள்ளிக்கிழமை மாலை வேளையில் , வில்வம் மற்றும் வாசனை மலர்களை சமர்ப்பித்து பைரவருக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வறுமைகள் நீங்கும். செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் சகலவிதமான தோஷங்களும் விலகும். மகாபைரவரை திரிபுர பைரவராகவும் வழிபடும் வழக்கம் உண்டு. கரைசேர முடியாத பெருந்துன்பங்களையும் நீக்கி அருள்புரிவாராம் திரிபுர பைரவர். கோயில்களில் நடைபெறும் பிரமோற்ஸவத்துக்கு முன்பாகவும், விழா முடிந்த பின்னரும் பைரவரை வழிபட வேண்டும் என்கின்றன ஆகம நூல்கள். முன்பெல்லாம், சிவாலயங்களில் இரவில் பைரவரை பூஜித்து வழிபட்டு, ஆலயக் கதவுகளை மூடி சாவியை அவரது சன்னதியில் சமர்ப்பிப்பது வழக்கம். இப்போது, கைமணியையும் கலசத்தையும் அவர்முன் வைத்துச் செல்கின்றனர்.

அஷ்ட பைரவ தரிசனம்!

பைரவரை முழுமுதலாகக் கொண்ட சமயம் பைரவம். காபாலிகர்களும் பாசுபதர்களும் கூட பைரவரை சிறப்பாக வழிபடுகின்றனர். பைரவரை சூரிய சமயத்தவர் (கௌமாரம்) மார்த்தாண்ட பைரவராகவும், முருகன் ஆலயத்தில் குமார பைரவராகவும், விநாயகர் கோயிலில் பிரமோத பைரவராகவும் வழிபடுவர். சிவனாரின் வீரச்செயல்கள் எட்டாகும். அதேபோல், அவரது வீரவெளிப்பாடாக விளங்கும் பைரவரும்... அஜிதாங்கன், ருரு, சண்டன், உன்மத்தன், கபாலன், பீஷ்ணன், க்ரோதன் மற்றும் சம்ஹார பைரவர் என எட்டு திருவடிவங்களுடன் அருள்கிறார். இவர்கள் எண்மருக்கும் தேவியராகத் திகழும்... பிராம்மஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை ஆகியோர் அஷ்டமாதர்களாகப் போற்றப்படுகின்றனர்.

புண்ணியமிகு காசியில் அனுமன் காட்டில் ருரு பைரவரும், துர்காமந்திரில் சண்ட பைரவரும், விருத்தகாளேசுவரர் ஆலயத்தில் அமிர்த குண்டத்தின் முன்புறம் அஜிதாங்க பைரவரும், லட் பைரவர் கோயிலில் கபால பைரவரும், காமாச்சா எனும் இடத்தில் வடுக பைரவர் எனும் பெயரில் குரோதன பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவரும், திரிலோசன கஞ்ச் (பாட்டன் தர்வாஜாவுக்கு அருகில்) சம்ஹார பைரவரும், காசிபுரா எனும் இடத்தில் பீஷண பைரவரும் அருள்பாலிக்கின்றனர். சீர்காழி, பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் (தெற்கு) வெளிப்பிரகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் சுதந்திரர், சுயேச்சர், லோகர், காலர், உக்ரர், பிரச்யர், நிர்மாணர், பீஷ்ணர் ஆகிய அஷ்ட பைரவர்களை தரிசிக்கலாம். குற்றாலம் சித்திர சபையில் அஷ்டபைரவரின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. நகரத்தார் சீமையிலுள்ள திருப்பத்தூர், பிள்ளையார்பட்டியை அடுத்துள்ள வைரவன்பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம் வைரவன்பட்டி, காரையூர், நெடுமரம், இலுப்பைகுடி என்ற எட்டும் அஷ்ட பைரவ தலங்களாகப் போற்றப்படுகின்றன.

சொர்ணாகர்ஷண பைரவர்

ஸ்ரீதத்துவநிதி எனும் நூல் சொர்ணாகர்ஷண பைரவரைப் பற்றி விவரிக்கிறது. ஸ்ரீஸ்வர்ண பைரவியை தன் மடிமீது அமர்த்தியவாறு காட்சி தரும். இந்த மூர்த்தியை மனமுருகி வழிபட, பொன் பொருள் சேரும். ஐஸ்வரியம் பெருகும் என்பர். சிதம்பரம் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஒரு பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். திகம்பரராக டமருகம், சூலம், பாசம் மற்றும் கபாலம் ஏந்தியவராக நின்ற கோலத்தில் அருள்கிறார். அருகில், நாய் வாகனமும் உள்ளது. முற்காலத்தில் தில்லை கோயிலில் சேவை செய்யும் அந்தணர்கள், பூஜை முடிந்ததும் செம்பினால் ஆன தாமரையை பைரவரின் பாதத்தில் வைத்து வணங்கிச் செல்வார்களாம். மறுநாள், சுவாமியைப் பணிந்து அந்த மலரை எடுத்துக் கொள்வர். அது, அவர்களுடைய பணிகளுக்கேற்ப, பொன்னாக மாறியிருக்கும் என்றொரு தகவல் உண்டு. இன்றும் தன்னை வணங்கும் அன்பர்களின் மனப்பூர்வமான கோரிக்கைகளை ஏற்று, அருள் வழங்கி வருகிறார் பைரவமூர்த்தி.

லவகுசா பகுதி-6




சீதைக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியவில்லை. திடீரென எழுவாள். தன் இரு கைகளாலும் வயிற்றில் ஓங்கி ஓங்கி அடிப்பாள். ஐயோ! இதென்ன கொடுமை என்றபடியே மயங்கிச் சாய்வாள். ஒரு கட்டத்தில், அவள் அசைவற்றுக் கிடந்தாள். இந்த துயரத்தை விண்ணுலகில் இருந்து கண்ட தேவர்கள், அவள் இறந்து விட்டாள் என்றே முடிவு கட்டி கண் கலங்கினார்கள். அண்ணியார் இப்படி துவண்டு விழுந்தது கண்டு, லட்சுமணன் அலறினான். அவனும் கீழே புரண்டு புலம்பினான். சிறிதுநேரத்தில் சீதாதேவி கண் விழித்தாள். அம்மா, அப்பா, என் உயிர் போன்ற சிநேகிதிகளே! கேட்டீர்களா கதையை! தனக்கு தானே நிகர் என்ற பெருமையுடைய தசரத சக்கரவர்த்தியின் குமாரர் ராமபிரான், எனக்கு செய்த இந்தக் கொடுமையை நீங்கள் கேள்விப்பட்டால் துவண்டு போவீர்களே! என்ன செய்வேன்! ராமனின் ஆட்சி என்றாலே நல்லாட்சி என்று தான் பொருள். அந்த நல்லாட்சி நடத்துபவரின் மனைவியான எனக்கு மட்டும் ஏன் இந்த வனவாசத் தண்டனை? எதற்காக எனக்கு இந்தத் துன்பங்கள் வந்தன? என் மாமியார்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால், அவர்கள் கணமும் உயிர் வாழ மாட்டார்களே! என வருந்தி அழுதாள். மாமியார்- மருமகள் உறவுக்கு உதாரணம் நம் சீதாதேவி தான். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இல்லை. நம்மூர் பெண்கள் ஒரு மாமியாரை வைத்துக் கொண்டே, சமாளிக்க கஷ்டப்படுவார்கள். ஆனால், நம் சீதாதேவி மூன்று மாமியார்களை சமாளித்தவள். மூவரையும், அனுசரித்து நற்பெயர் பெற்றவள். மாமியார் இல்லாவிட்டால் மருமகள் சந்தோஷப்படுவாள். ஆனால், மருமகள் இல்லாவிட்டால் மாமியார்கள் உயிர் துறந்து விடுவார் என்றால், அது நம் சீதாதேவி இல்லத்தில் மட்டுமே நடக்கிற ஒரு விஷயம். இந்த நிகழ்வின் மூலம், மாமியார்- மருமகள்கள் வீட்டில் சண்டை போடாமல் ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ வேண்டுமென்பதை பெண்களுக்கு சீதாதேவி உணர்த்துகிறாள். இப்படி தவித்த அண்ணியாருக்கு லட்சுமணன் ஆறுதல் சொன்னான்.

தாயே! நீங்கள் முற்பிறவியில் செய்த நல்வினையால் என் சகோதரனை கணவனாக அடைந்தீர்கள். இப்பிறப்பில் என்ன தீவினை செய்தீர்களோ அவரைப் பிரிந்து விட்டீர்கள். நல்வினை, தீவினை இரண்டுமே ஏதோ ஒரு பலனைத் தருகிறது. நல்வினையால் நல்லதும், தீவினையால் தீயதும் என்று நடக்காமல் இருக்கிறதோ, அந்நாளே மனித வாழ்வில் பொன்னாள். அப்படி ஏதும் நடக்காத ஒரு நிலையை மனிதகுலம் அடைய வேண்டுமானால், அதற்கு தவமே கண்கண்ட மருந்து. ஆம்...நீங்கள் இறை வழிபாட்டில் ஆழ்ந்து விடுங்கள். தவக்கோலம் பூணுங்கள். பெருந்தவ முனிவர்கள் பலர் இந்தக் காட்டில் வாழ்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் சேவை செய்ய வேண்டும். உன் கணவனை மனதில் நினைத்து உயர்ந்த தவமிருக்க வேண்டும், என்றான். சீதை அவனிடம், லட்சுமணா! ஒரு பெண்ணின் நிலையைப் புரிந்து கொள்ளாமல் பேசாதே. இதற்கு முன் உன் அண்ணனுடன் நான் காட்டில் இருந்த போது, எத்தனையோ முனிவர்களைத் தரிசித்து ஆசி பெற்றோம். இப்போது, அவர்களை நான் தனித்துப் பார்த்தால், ஏனடி உன் கணவன் உன்னைப் பிரிந்தான்? என்று கேட்டால், நான் அவர்களிடம் என்ன பதில் சொல்வேனேடா? சரி போகட்டும். நீ நாடு திரும்பு. உன் அண்ணனிடம், என்னைச் (சீதா) சொல்லிக் குற்றமில்லை, உங்களைச் சொல்லியும் குற்றமில்லை, எல்லாம் என் விதி. அது மட்டுமல்ல! உலகம் ஒரு பழியைச் சொன்னது என்பதற்காக, அதையும் ஏற்று என்னைப் பிரிந்தாரே உன் அண்ணன்! இப்படி பழிக்கு அஞ்சுகிற உன் அண்ணனுடன் வாழ்வதை விட அவரை பிரிந்திருப்பதே மேல் என நான் சொன்னதாகச் சொல் என்று கோபத்தோடு சொன்னாள். ஒரு பெண் பொறுமையாக இருக்கலாம். பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அவளது கற்பின் மீது களங்கம் சுமத்தப்படுகிறது என்றால் அவள் கொதித்து எழுந்து விட வேண்டும் என்பதற்கு சான்றாக, பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் புத்திரி சீதாதேவி இவ்விடத்தில் பெண்ணினத்துக்கு தகுந்த புத்திமதி சொல்கிறாள்.

அத்துடன் அவள் நிறுத்தவில்லை. லட்சுமணன் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு வார்த்தையை உதிர்த்தாள். ராமாயணத்தின் உத்தர காண்டத்திலேயே உணர்ச்சி மிக்க கட்டம் இதுதான். ஏ லட்சுமணா! நான் எப்படிப்பட்டவள் என உனக்குத் தெரியும். நான் கர்ப்பமாகி நான்கு மாதங்கள் தான் ஆகின்றன. எங்கே என்னைப் பார். கர்ப்பவதியான என் மேனி வருந்தாத வகையில் அந்தப் பார்வை இருக்கட்டும், என்றாள் ஆவேசமாக. அண்ணியாரின் திருவடியை மட்டுமே லட்சுமணன் அறிவான். அவள் முகத்தை அவன் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு மரியாதை. உலகில் எந்த ஒரு அண்ணிக்கும், எந்த ஒரு கொழுந்தனும் கொடுக்காத ஒரு பாக்கியம். அப்படிப்பட்ட சௌபாக்கியவதியான சீதாதேவி, தன் கொழுந்தனிடம் இப்படி கேட்கிறாள். ஏன் கேட்டாள் தெரியுமா? இந்த களங்கற்ற முகமா இப்படி ஒரு தவறைச் செய்திருக்கும் என்று அவனாவது தெரிந்து கொள்ளட்டும். அதற்காக வருந்தட்டும் என்று தான். இதைக் கேட்டானோ இல்லையோ, லட்சுமணன் கண்ணீர் வடித்தான். தரையில் விழுந்து தலையில் அடித்துக் கொண்டு புலம்பினான். தாயே! இப்படி ஒரு கொடிய சொல்லை உங்கள் வாயால் கேட்க, நான் என்ன பாவம் செய்தேனோ? இதுவரை இப்படிப்பட்ட வார்த்தைகள் உங்கள் வாயில் இருந்து வந்ததும் இல்லையே! இன்று ஏன் வந்தன? என் சகோதரன் உங்கள் கைத்தலம் பற்றிய நாளில் இருந்து இன்று வரை உன் முகம் பார்த்தறியாதவன் நான். உங்கள் திருவடிகள் மட்டுமே எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட எனக்கு உங்கள் திருமேனியைப் பார்க்கும் துணிச்சல் எப்படி வரும்? யோசித்து தான் பேசினீர்களா? என்றான் கண்ணீர் ஆறாய்ப் பெருக. பின்பு சிரமப்பட்டு எழுந்தான். தலை குனிந்தபடியே அண்ணியார் அருகில் சென்றான். அண்ணியை அவன் பார்த்தானா?

லவகுசா பகுதி-5




அந்த தேரில் அமைச்சர் சுமந்திரரும் சென்றார். தேர், கங்கைக்கரையை அடைந்தது. தேர் அங்கு சென்றதோ இல்லையோ, குனிந்த தலை நிமிராத லட்சுமணனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. சீதை பதைபதைத்து போனாள். லட்சுமணா! எதற்காக வருத்தப்படுகிறாய்? உன் கண்கள் கண்ணீர் சிந்துகிறது என்றால், ஏதோ கெடுதலின் அறிகுறியாகத்தான் இருக்கும். மறைக்காமல் சொல், என்றாள். என்ன சொல்வான் லட்சுமணன். அண்ணி, உங்களை அண்ணன் காட்டில் தனியாக விட்டு வரச்சொன்னான் என்பதை எப்படி அவளிடம் சொல்வான்! அழுகை முட்டியதில், வார்த்தைகள் வர மறுத்தன.லட்சுமணா! தூய்மையின் வடிவமானவனே! அழகான இந்தக் கங்கை நதியைக் கண்டவர்கள் கையெடுத்து வணங்குவார்கள். தங்கள் பாவம் தீர மனம் மகிழ்ந்து நீராடுவார்கள். அப்படியிருக்க, நீயோ, இந்த நதியைப் பார்த்து அழுகிறாயே! மேலும், நீ கவலைப்படும் அளவுக்கு, உனக்கு துன்பம் செய்யக்கூடியவர்களும் இந்த உலகத்தில் பிறக்கவில்லையே, என்றாள்.அண்ணியாரே! வேறொன்றுமில்லை. நான் பிறந்த நாளில் இருந்து நேற்று வரை என் அண்ணனைப் பிரிந்ததே இல்லை. இப்போது தான் முதன்முறையாகப் பிரிந்து தங்களுடன் வருகிறேன். அண்ணனை நினைத்துக் கொண்டேன். அதனால் அழுகை வந்து விட்டது, என்றான். லட்சுமணா! இதற்கா சிறுபிள்ளை போல் அழுவது! இவ்வுலகில் அறம் தழைக்க பாடுபடுபவர்கள் முனிவர்கள். அவர்களின் திருவடிகளைப் பணிந்தால் புண்ணியம் கிடைக்கும். அந்தப் புண்ணியம் தீவினைகளை அறுத்துவிடும். மேலும், நாம் முன்பு இங்கு இந்த கானகத்தில் தங்கியிருந்த போது, எனக்கு உதவிசெய்த முனிபத்தினியர், அவர்களின் மகள்களுக்கு புடவை, ஆபரணம் முதலானவற்றைக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. அவற்றையெல்லாம் இந்த தேரில் கொண்டு வருவதை நீயும் அறிவாய். அவற்றைக் கொடுத்துவிட்டு, முனிவர்ளை வணங்கிவிட்டு, ஒரே நாளில் திரும்பி விடப் போகிறோம். இதற்காக கலங்காதே, என்றாள். உடனே தேரில் இருந்து இறங்கிய லட்சுமணன், அண்ணியை வலம் வந்து வணங்கி, தேவி! ஏழுலகையும் ஆட்சி செய்ய உரிமையுடையவளே! நான் சொல்வதைக் கேட்பீர்களா? என்றதும், அவனது வித்தியாசமான நடவடிக்கையைக் கண்ட சீதை, எதுவானாலும் தயங்காமல் சொல் லட்சுமணா, என்றாள்.

லட்சுமணனின் நாக்கு வறண்டது. உடல் சோர்ந்தது. முகம் களையிழந்தது. மனம் நடுங்கியது. தட்டுத்தடுமாறி வார்த்தைகளை உதிர்த்தான். உத்தமியே! உலகத்தின் தாயே! தூயவராகிய ஜனகரின் வேள்வித்தீயில் பிறந்தவளே! என் அண்ணன் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை உங்களுக்கு சொல்கிறேன். இந்த உலகம் இல்லாத ஒன்றை இருக்கிறது என்று சொன்னால், எல்லோருமே அதை நம்பி, ஆமாம்...இருக்கிறது என்றே சொல்வார்கள். இருக்கும் ஒன்றை இல்லை என்று உலகம் சொன்னால், நிச்சயம் அது இல்லை என்றாகி விடுகிறது. உலகம் இருக்கிறது என்று சொல்லும் விஷயத்தை, யாரோ ஒருவன் இல்லை என்று சொன்னால், அவனை பேயைப் பார்ப்பது போல பார்ப்பார்கள். அண்ணியாரே! தங்கள் விஷயத்திலும் அப்படியே நடந்து விட்டது. தங்களை ராவணன் கவர்ந்து சென்றான். அண்ணன் உங்களை மீட்டார். நீங்கள் நெருப்பில் குதித்து உங்களைத் தூயவர் என்று நிரூபித்தும் விட்டீர்கள். ஆனால், இதையெல்லாம் அயோத்தியில் உள்ளவர்கள் பார்க்கவில்லையே! அப்படி பார்க்காத யாரோ சிலர், தங்களைப் பற்றி குற்றம் சொல்லி பேசியிருக்கிறார்கள். மோகத்தின் காரணமாக, மாற்றானுடன் தங்கியிருந்தவளுடன், இந்த ராமன் வாழ்வதை விட செத்து விடலாமே என்பதே பேச்சின் சாரம். இதை ஒற்றர்கள் மூலம் அறிந்த அண்ணன் கொதித்து விட்டார். மக்களுக்கு விருப்பமில்லாத ஒருத்தியுடன் இணைந்து அரசாள முடியாது. எனவே, வால்மீகி முனிவரின் ஆசிரமம் அருகில் உங்களை நிரந்தரமாக விட்டு வரச்சொன்னார், என்றான். இதைக் கேட்டாளே இல்லையோ, சீதாதேவியின் காதுகளில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கோலை நுழைத்தது போல் இருந்தது. தேரில் இருந்து சரிந்து கீழே விழுந்து விட்டாள். வாய்களில் இருந்து வார்த்தைகள் வர மறுத்தது. அவள் தரையில் இருந்து எழ முயற்சித்தாள். நிற்க முடியவில்லை. சரிந்து சாய்ந்தாள்.

இந்த உலகத்திலேயே சீதாதேவிக்கு ஏற்பட்டது போன்ற துன்பம் யாருக்கும் ஏற்பட்டது இல்லை. யாராவது ஒரு பெண், என்னைப் போல் பாவம் செய்த ஒரு ஜீவனுண்டா? என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. ஏனெனில், சீதா திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்தாள். சில காலம் தான் மாமியார் வீட்டில் தங்கியிருந்தாள். உடனே காட்டுக்கு புறப்பட்டாயிற்று. அங்கும் சோதனை. கொடியவன் ராவணனிடம் சிக்கிக் கொண்டாள். ராவணனோ, அவளை இச்சைக்கு அழைத்தான். ஒருவனுக்கு துணைவியாக இருக்கும் நிலையில், இன்னொருவன் கூப்பிடுகிறான் என்றால், ஒரு பெண்ணின் மனநிலையைச் சொல்லவும் வேண்டுமோ? சதாசர்வகாலமும், ராமனின் திருநாமம் விழ வேண்டிய செவிகளில், அரக்கியரோ, ராவணனுடன் போய் வாழ் என்று வற்புறுத்தும் இழிவான சொற்களைப் பேசினர். அதைத் தாங்கிக்கொண்டாள். காட்டில் இருந்து மீண்டாள். கட்டிய புருஷனே அவளைத் தீக்குளிக்கச் சொன்னான். சொன்னது அவனளவில் நியாயம் என்றாலும், எந்தக் குற்றமும் செய்யாத சீதா, கணவன் தன் மீது சந்தேகப்பட்டானே என்று துடித்துப் போனாள். தீ கூட அவளைச் சுடவில்லை. ஆனால், வார்த்தைகள் சுட்டன. வீட்டுக்கு வந்தாள். பட்டாபிஷேகம் முடிந்து சில காலம் கணவனுடன் சுகவாழ்வு. இப்போது அவள் கர்ப்பிணி. அயோத்தியின் வாரிசுகளை சுமந்து கொண்டிருக்கும் அவளை, உலகம் சந்தேகிக்கிறதே என்பதற்காக நிரந்தரமாக ஒதுக்கி வைக்கிறான் ராமன். என்ன கொடுமையப்பா இது! அடியே சீதா! உன்னை நினைத்தால், எங்கள் கண்கள் அருவியைத் தானேடி கொட்டுகிறது! என்று நாமும் அவளோடு சேர்ந்து புலம்புவதைத் தவிர வேறென்ன சொல்வது!

லவகுசா பகுதி-4




உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் கற்பின் வலிமையை நிரூபித்தாள். ஆனால், உலகத்தார் அதை ஏற்க மறுக்கின்றனர். அவள் மீதும், என்மீதும் சொல்லப்படும் பழிச்சொல் என் இதயத்தை வாட்டுகிறது, என்ற ராமன் அரசவையில் ஒற்றர்கள் தன்னிடம் சொன்ன தகவலைக் கூறினார். சகோதரர்கள் இதுகேட்டு மிக துன்பமடைந்தனர். கைகேயி, ராமபிரானை நாட்டை விட்டு அனுப்பியதை விட, அவர்களுக்கு இந்த செய்தி மிகக்கொடுமையாக இருந்தது. அவர்களால், ராமனிடம் ஏதும் பேச முடியவில்லை. அண்ணன் சொல் கேட்டு நடக்கும் அவர்கள், இதனால் தங்கள் அண்ணியாருக்கு என்னாகப் போகிறதோ என்றே மனதுக்குள் கலங்கி நின்றனர். ராமன் தொடர்ந்தார். லட்சுமணா! உலகம் மூன்றையும் கலக்கு என்று சொன்னாலும் கூட கணப்பொழுதில் அதை செய்து முடித்திடும் மனோபலம் பெற்றவன் நீ. உன் அண்ணியை தவமுனிவர்கள் வாசம் செய்யும் காட்டில் சென்று விட்டு வா, என்றார். லட்சுமணன் வாய் பொத்தி நின்றான். ஏதும் பேசினால் பயனேதும் இருக்காது என்பதை அவன் அறிவான். விஷயம் அமைச்சர் சுமந்திரருக்கு தெரிய வந்தது. அவர் தசரதரின் அரசாங்கத்தில் இருந்தே முதல் அமைச்சராக இருப்பவர். கைகேயி உள்ளிட்ட பட்டத்து ராணிகளையே எதிர்த்து வாதிடுபவர். திறமைசாலி. அவருக்கும் தெரியும். ராமன் ஒரு வார்த்தையை சொன்னால் சொன்னது தான் என்பது. மனஉறுதியில் ராமன் கைகேயிக்கு சமமானவர். ஆம்....ராமனைப் பிரிந்தால் தசரதரின் உயிர்போகும் என்று தெரிந்திருந்தும் பிடிவாதம் பிடித்தவள் அல்லவா! எல்லோரும் யோசித்துக் கொண்டு நிற்பதை உணர்ந்த ராமன், இதில் யோசிக்க ஏதுமில்லை. நான், சீதைக்கு ஒன்றும் கேடு செய்யவில்லை. அவள் ஏற்கனவே என்னிடம் காட்டுக்குச் சென்று ரிஷிகளைத் தரிசிக்க வேண்டும் என்றாள்.

நானும் சரியென ஒப்புக்கொண்டேன். இப்போது, அவள் சொன்னதைத்தான் செய்கிறேன். எனவே லட்சுமணா! உம்...புறப்படு, உன் அண்ணியுடன். வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் அவளை விட்டுவிட்டு நீ வந்துவிட வேண்டும், என்றார் அதட்டலுடன். பரந்து விரிந்த முடியையுடைய வெள்ளைப்புரவிகள் பூட்டிய தேர் அரண்மனை வாசலில் வந்து நின்றது. மாமியார் கவுசல்யா, மருமகளை வழியனுப்ப வந்தாள். மகளே! பத்திரமாக சென்று வா. நாளை நீ திரும்பி விட வேண்டும். வயிற்றில் அயோத்தியின் வாரிசை சுமக்கும் நீ மிகுந்த கவனத்துடன் காட்டிற்குள் செல். அது சரி...உன் மைத்துனன் அருகில் இருக்கும்போது, உனக்கேதும் ஆபத்து ஏற்படாது என்பதை அறிவேன், என்று புன்னகையுடன் சொன்னாள், நடந்து கொண்டிருக்கும் விபரீதத்தை அறியாமலே! சீதையை அழைக்க அவள் தங்கியிருந்த மாளிகைக்குச் சென்றான் லட்சுமணன். ஒளிவீசும் ரத்தினமாலை பளபளக்க காத்திருந்த அவள், வா லட்சுமணா! பயணத்துக்கு தயார் ஆகிவிட்டேன். புறப்படலாமா? என்றாள். அவளது கமலத் திருப்பாதங்களில் விழுந்து வணங்கிய லட்சுமணன், புறப்படலாம் அன்னையே என்றார். அவள் தேரில் ஏறி அமர்ந்தாள். அப்போது, சீதையின் வலக்கண் துடித்தது. பெண்களுக்கு, வலதுகண் துடிப்பது கெட்ட சகுனத்திற்கு அறிகுறி. அதேநேரம் வயிற்றில் ஏதோ எரிச்சல் ஏற்பட்டது. உடலில் ஏதோ ஒரு நடுக்கம் தெரிந்தது. ஊருக்குப் புறப்படும் வேளையில், பூஜை குறுக்கே போய்விட்டாலே, நம் உள்ளம் நடுங்கி விடும். சீதாதேவிக்கு இத்தனை கெட்ட அறிகுறிகளும் தெரிந்ததால், அவள் ரொம்பவே கலங்கி, லட்சுமணா!கிளம்பும் போதே, கெட்ட சகுனங்கள் தோன்றுகின்றன. எனக்கு ஏற்பட்ட இந்த தீய சகுனங்கள், என்னென்ன விளைவைத் தரப்போகிறதோ தெரியவில்லை. அதற்காக என்ன செய்ய முடியும்? விதி மிகவும் வலிமையான ஒரு வஸ்து.

அது என்ன நாடகம் நடத்தப்போகிறது என்பதை யாரும் அறியமாட்டார்கள். அதை அனுபவித்து தானே ஆக வேண்டும். இந்த விதி தன் கொடுமையான கரங்களை நீட்டி, என்னை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், என் கணவருக்கோ, என் கொழுந்தர்களான உங்களுக்கோ, உங்கள் மனைவியருக்கோ, எனது மாமியார்களுக்கோ, என் தாய் சுனைநாவுக்கோ, தந்தை ஜனகருக்கோ, பிற உறவினர்களுக்கோ, இதற்கெல்லாம் மேலாக, என் மேல் அன்பைப்பொழியும் அயோத்தி வாழ் மக்களுக்கோ துன்பம் வந்து விடக்கூடாது, என்றவள், தெய்வமே! இந்த சகுனங்களால் அவர்களுக்கு எந்த தீங்கும் வந்து விடக்கூடாது, என்று கடவுளையும் வணங்கிக் கொண்டாள். எவ்வளவு உயர்ந்த பண்பு பாருங்கள்! ராமாயணத்தை படி படி என்கிறார்களே! அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்பவர்கள் சீதாதேவியின் இந்த உயரிய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாமியார், கொழுந்தனார்களுக்கு ஆதரவாக இன்றைக்கு உலகில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்? எங்கும் சண்டையும் சச்சரவும் தானே நடக்கிறது. சீதாதேவி பட்டபாடுகளைப் படித்தால், பெண்களுக்கு பொறுமை குணம் வளரும். சிறந்த பண்புகளெல்லாம் வந்து ஒட்டிக்கொள்ளும். லட்சுமணன் அவளது வார்த்தை கேட்டு திகைப்பும், மகிழ்ச்சியும் ஒருசேர தாக்க, இப்படி ஒரு உத்தமியை தன் அண்ணியாகப் பெற்றதற்காக பெருமை பொங்க அவளது திருவடி நோக்கி மீண்டும் ஒருமுறை வணங்கி, அன்னையே! நீங்கள் சொன்னது போல, நம் சுற்றத்தாருக்கும், நாட்டு மக்களுக்கும் எந்த ஆபத்தும் வராது. அவர்கள் சுகமாக வாழ்வார்கள், என்று சொல்லி விட்டு, குதிரைகளை விரட்டினான். அந்த பெரிய தேர் காட்டை நோக்கிச் சென்றது.

லவகுசா பகுதி-3




சீடர்கள் குழப்பமடைந்தனர். குருவே! ராமாயணம் தொடர்கிறது என்றால், திவ்யமான ராமநாமத்தை நாங்கள் இன்னும் உங்கள் வாயால் தொடர்ந்து கேட்கப்போகிறோம் என்றுதானே பொருள். இதில் தாங்கள் வருத்தப்படுவது பற்றி தான் எங்களுக்கு புரியவில்லை, என்றனர். சீடர்களிடம் வால்மீகி பதிலேதும் சொல்லவில்லை. அவரது ஞானதிருஷ்டியில், காட்டிற்கு வரப்போகும் சீதைக்கு ஆகப்போகும் நிலை தெரிந்தது. உம்...விதி வழி வாழ்வு. அவள் பூமாதேவியின் புத்திரி ஆயினும், அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துதானே ஆக வேண்டும். பொதுவாகவே, பொறுமைசாலிகளுக்கு தான் பூமியில் அதிக துன்பமே விளைகிறது என தனக்குள் சொல்லிக்கொண்டார். இந்த பூலோகத்தில் பிறந்தவர்களில் பொறுமைசாலிகளுக்கு துன்பம் அதிகமாக வருகிறது என்று வால்மீகி நினைத்தது இன்றுவரை கண்கூடாகத்தான் தெரிகிறது. இவ்வளவு பொறுமையாய் இருந்தும், நமக்கு இவ்வளவு சோதனையா என சில பொறுமைசாலிகள் சலித்துக் கொள்ளவும் கூடும். ஆனால், காரணமில்லாமல் காரியமில்லை. இந்த லோகத்தில் நம் முன்வினைப் பயனையெல்லாம் அனுபவித்து, மேலும் மேலும் பொறுமை காத்தால், அவ்வுலகில் சுகமான வாழ்வு வாழலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீதையிடம் ராமன், சீதா! நீ நாளையே புறப்படலாம். உரிய ஏற்பாடுகளைச் செய்து விடுகிறேன், எனச்சொல்லி விட்டு, அரசவைக்குச் சென்றார். அவருக்கு வீட்டை விட நாட்டைப் பற்றிய கவலை அதிகம். மக்களுக்கு ஒரு சிறு கஷ்டம் கூட வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதற்காக, பல ஒற்றர்களை நியமித்திருந்தார். மக்கள் என்ன பேசுகிறார்கள். அவர்களது தேவையென்ன, யாராவது வெறுப்பு கலந்த குரலில் பேசுகிறார்களா...இவை ஒற்றர்களிடம் அவரது அன்றாடக்கேள்விகள். ஒற்றர்கள் இதற்குரிய பதிலைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். விஜயன், பத்திரன், தந்தவக்கிரன், சுமகாதன், சுராஞ்சி, காளியன் ஆகியோர் ராமபிரானின் ஒற்றர்கள். நகைச்சுவை ததும்ப பேசுவதிலும் இவர்கள் கில்லாடிகள். இவர்கள் சொன்ன நகைச்சுவை கதைகளைக் கேட்டு ராமன் கலகலவென சிரித்துக் கொண்டிருந்தார்.

நகைச்சுவை வாழ்க்கைக்கு ஒரு நல்ல மருந்து. சிரிக்க சிரிக்க பேசத்தெரியவில்லையே என வருத்தப்படுபவர்கள் அதிகம். ஆனால், சிரிப்பதற்கு பழக்கம் தேவையில்லை. சிரிக்க சிரிக்க பேசுபவர்கள் அதிகம் இருந்தாலே போதும்! சிரிப்பு மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குகிறது. மகிழ்ச்சியான மனநிலை சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. நகைச்சுவை புத்தகங்களைப் படிப்பது, சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகியவை நல்ல மருந்து. அதே நேரம் கேலியும், கேளிக்கையுமே வாழ்க்கையாகி விடக்கூடாது என்பதிலும் ராமன் கவனமாக இருந்தார். ஒற்றர்களே! இந்த பரிகாசக்கதைகள் ஒருபுறம் கிடக்கட்டும். நாட்டு மக்கள் என்ன சொல்கின்றனர்? அதை முதலில் சொல்லுங்கள். நாடாள்பவனுக்கு முதலில் மக்கள். அதன்பிறகு தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டும். சொல்லுங்கள், என்று துரிதப்படுத்தினார். அவர்கள் ராமனிடம், அண்ணலே! தங்கள் ஆட்சியில் என்ன குறை இருக்கிறது? கடலின் நடுவில் இருக்கும் இலங்கை மாநகரை தாங்கள் வெற்றி கொண்டதைப் பற்றி மக்கள் வியப்புடன் பேசுகிறார்கள். அசுரர்களை அழித்ததைப் பற்றி வீரம்பொங்க உரையாடுகிறார்கள். தேவர்களின் தலைவனான இந்திரனின் கொடும் பகைவனான இந்திரஜித்தைக் கொன்றது பற்றியும், அதிசயத்தின் வடிவமான பத்து தலைகளைக் கொண்ட ராவணனை அழித்தது பற்றி பேசுகிறார்கள். எங்கள் ராமனை வெல்வார் யார் என்று மார்தட்டி பேசுகிறார்கள், என்றனர். ராமன் அவர்கள் பேசுவதை கையசைத்து நிறுத்தினார். ஒற்றர்களே! நீங்கள் நிறைகளை மட்டுமே சொல்கிறீர்கள். தனது ஆட்சியின் நிறைகளைக் கேட்டு சந்தோஷம் கொள்வது மட்டும் அரசனின் பணியல்ல. அதன் குறைகளைக் கேட்டு, அதனை நீக்கி, நன்மை செய்பவனே அரசன். எனவே, நீங்கள் கேட்ட குறைகளையும், மனம் கூசாமல், அதைரியம் கொள்ளாமல் சொல்லுங்கள், என்று வற்புறுத்தினார். அந்நிலையில் அவர்கள் தாங்கள் கேட்ட ஒரு இழிசொல்லை ராமனிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.ஸ்ரீராமா! ஆருயிர் மன்னவரே! நாங்கள் கேட்ட ஒரு விஷயத்தைச் சொல்கிறோம். அதுகேட்டு தாங்கள் வருத்தம் கொள்ள வேண்டாம். புத்தியற்றவர்கள் பேசும் பேச்சு அது, என்றதும், ராமன் உஷாராகி விட்டார்.

உம்...அதை விரைந்து சொல்லுங்கள், என்றார். ராமா! எங்கள் அன்னை சீதாதேவியார், இலங்கையில் ராவணனின் இடத்தில் ஒரு வருடகாலம் இருந்தார். இப்படி தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவளை, அவன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாமே! இது தெரிந்தும், நாடாளும் மன்னன் ஒருவன் அவளுடன் வாழலாமா? குடிமக்களுக்கு ஒழுக்கத்தை கற்பித்து முன்மாதிரியாக இருக்க வேண்டிய மன்னன் ஒருவனே இப்படி இருந்தால், அது எவ்வகையில் நியாயம்? என கேட்கிறார்கள், என்றனர். இத்தனை நேரமும் பரிகாசக்கதைகளைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த ராமனின் கரிய முகம் சிவந்து விட்டது. அது கோபத்தின் வெளிப்பாடா, வெட்கத்தின் பிரதிபலிப்பா...ஒற்றர்கள் குழம்பினர். மனதில் வேல்போன்று தைத்த இந்த கடும் சொற்களைத் தாங்க முடியாத ராமபிரான், சைகையாலேயே ஒற்றர்களை அனுப்பிவிட்டு, தம்பியர்கள் இருக்குமிடம் சென்றார். தம்பியரே! என் உயிர் நீங்கள். என் பலமும் நீங்கள் தான். நண்பர்களும் நீங்களே! நீதி, தவம், சகோதரர்கள், அரசாங்கம், இன்பம் எல்லாமே நீங்கள்! இப்படி எல்லாமே எனக்கு நீங்கள் தான் என்றாகி விட்ட பிறகு உங்களிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? ஏனெனில், எனக்கு புகழ் கிடைத்தால் அதுவே உங்கள் புகழ். என் மீது பழிவந்தால் அது உங்களுக்கும் பழிதானே. எனவே, நான் கேள்விப்பட்ட ஒன்றை வெளிப்படையாகச் சொல்கிறேன், கேளுங்கள், என்றார். அண்ணனின் முகபாவம், பீடிகை ஆகியவை அவர் ஏதோ சொல்லக்கூடாததைச் சொல்லப் போகிறார் என்பதை தம்பிகளுக்கு உணர்த்தி விட்டது. என்ன அண்ணா? என்றனர் அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன். உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் கற்பின் வலிமையை நிரூபித்தாள். ஆனால், உலகத்தார் அதை ஏற்க மறுக்கின்றனர். அவள் மீதும், என்மீதும் சொல்லப்படும் பழிச்சொல் என் இதயத்தை வாட்டுகிறது, என்றவர் நடந்ததைச் சொன்னார். சகோதரர்கள் இதுகேட்டு மிக துன்பமடைந்தனர். கைகேயி, ராமபிரானை நாட்டை விட்டு அனுப்பியதை விட, அவர்களுக்கு இந்த தகவல் மிகக்கொடுமையாக இருந்தது.

லவகுசா பகுதி-2




அன்று சீதாதேவி, ஸ்ரீராமனின் பேரழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கணவனின் அழகை ரசிப்பதில் பெண்களுக்கு பேரானந்தம் உண்டு. இத்தனைக்கும் ராமன் சியாமளவண்ணன். கரிய நிறமென்று சொல்வதற்கில்லை. கருமையிலும் ஒரு நீலம். இந்தக்காலத்தில் என்றால், பெண்கள் மாப்பிள்ளை கருப்பா என்று புள்ளி வைப்பார்கள். சீதாதேவி, ராமனுக்காகவே பிறந்தவள். அவளது தந்தை அவளுக்கு மாப்பிள்ளையாக ராமபிரானைக் கொண்டு வந்து நிறுத்திய போது, அவள் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நமது கம்பர் தான், நம் தமிழ்க்காதலின் சுவை கருதி, அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்று இருவருமே திருமணத்துக்கு முன் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டதாக அனுபவித்து எழுதியிருக்கிறார். ஆனால், வால்மீகி அப்படி சொல்லவில்லை. அவன் கால் பாதம் தான் அவளுக்குத் தெரியும். அந்த நீலவண்ணப் பாதங்களில் செந்தூரத்தால் போட்ட கோலம் தெரியும். திருமணமாகி அயோத்திக்கு வந்த பின்னர் தான் அவனது முகம் பார்த்து வெட்கத்தால் சிவந்தாளாம் அந்த சிவப்பழகி. இன்றைக்கும் கூட நமது கிராமங்களில் சிகப்பி என்று பெண்களுக்கு பெயர் வைப்பார்கள். அது வேறு யாருமல்ல. நம் சீதாதேவி தான். பூமாதேவியின் அம்சமான அவள், அத்தனை சிவப்பழகு, பேரழகு படைத்தவள். கொடிகள் அவளது இடையைக் கண்டு வெட்கப்பட்டு, முகம் நாணி, தலை குனிந்து, கொம்புகளுக்குள் வளைந்து வெட்கப்பட்டு கிடக்கும். சிவப்பழகு கொண்ட பெண்கள், கருத்த மாப்பிள்ளைகளை ஒதுக்கக்கூடாது. மனம் வெள்ளையாக இருக்கிறதா என்பதை விசாரித்து தெரிந்து கொண்டால் போதும் என்பது சீதாதேவி பெண்களுக்கு கற்றுத்தரும் பாடம். அவரருகே வந்தவள், ஸ்ரீராமா... என்று ஆரம்பித்து விட்டு நிறுத்தினாள். அவர் அவளது கைகளைப் பற்றி நெஞ்சத்தில் புதைத்து, அவளை தழுவியபடி, என்ன தேவி! சொல், என்றார்.

அன்பரே! என் மனதிலுள்ள ஆசையை நிறைவேற்றுவீர்களா?ராமன் சிரித்தார்.நாடாளும் ராணி நீ. இந்த பட்டத்தரசி சொல்வதைக் கேட்கத்தானே இந்த பட்டத்தரசனும், இந்த தேசமும், உன் மாமியார்களும், மைத்துனர்களும் இருக்கிறோம். மனதிலுள்ளதை தயங்காமல் சொல். அதிலும் நீ கர்ப்ப ஸ்திரீயாக இருக்கிறாய். கர்ப்பவதிகள் மனதில் எதையும் வைத்துக் கொள்ளக்கூடாது. தங்கள் விருப்பத்தை கணவனிடம் சொல்ல வேண்டும். கணவன் அதை நிறைவேற்றி வைக்க வேண்டும். சொல் சீதா, என்றார். ஸ்ரீராமா! எனக்கு மீண்டும் மகரிஷிகளை தரிசிக்க வேண்டுமென என் மனம் ஆசைப்படுகிறது. தாங்கள் ராஜ்ய பரிபாலனத்தில் இப்போது தான் கவனம் செலுத்த துவங்கியிருக்கிறீர்கள். எனவே, நான் மட்டும் சென்று வருகிறேன். ஒரே ஒரு நாள் தரிசனம் தான். நான் சென்று வருவதற்குரிய அனுமதியையும், அதற்குரிய ஏற்பாட்டையும் செய்து தாருங்கள், என்றாள். ராமர் கலகலவென சிரித்தார். இவ்வளவுதானா! இதற்கா மனம் சஞ்சலப்படுகிறது என்றாய். மகரிஷிகளை தரிசிப்பது என்பது நல்ல விஷயம் தானே! அதிலும், நீ கர்ப்பவதியாய் இருக்கிறாய். இந்நேரத்தில், உன் வயிற்றில் இருக்கும் நம் செல்வம், மகரிஷிகள் கூறும் மந்திரங்கள், நல்வார்த்தைகளைக் கேட்டால், மிகச்சிறந்தவனாக, தர்மத்தைக் கடைபிடிப்பவனாக பிறப்பானே! இதைச் சொல்லவா இவ்வளவு தயக்கம்! காட்டிற்கு போகிறோமோ என கவலை கொள்ளாதே. உன் மைத்துனன் லட்சுமணன், எதற்கு இருக்கிறான்? கோபக்கார பயல். அவனை உன்னோடு அனுப்பி வைக்கிறேன். அவன் தன்னைப் பெற்ற சுமித்திரையை தாயாக நினைக்கிறானோ இல்லையோ! உன்னை தாயாக நினைக்கிறான், என்றதும் சீதாவின் கண்களில் கண்ணீர் அரும்பியது. ஆம்...சுவாமி! தாங்கள் மாரீச மானைப் பிடிக்கச் சென்றதும், அவனைக் கடும் மொழிகளால் பேசினேன். அவன் கோபிக்கவில்லை. மாறாக, கண்ணீர் வடித்தான். அந்நிலையிலும் அவன் கோடு போட்டு நிற்கச் சொன்னான். அதையும் நான் மதிக்கவில்லை. அயோத்தியில் காட்டிற்கு நாம் கிளம்பிய போது, அவன் நம்மோடு கிளம்பினான். அப்போது, தன் மனைவி ஊர்மிளாவிடம், விடை பெறச்சென்றான்.

அந்த மாதரசி எந்த தடையும் சொல்லவில்லை. ஊர் உலகில் நடக்கிற காரியமா இது? எந்த மனைவியாவது தன் கணவனை, அவனது அண்ணனுக்கும், அண்ணன் மனைவிக்கும் துணையாக காட்டுக்கு 14 வருஷம் அனுப்புவாளா? அவள் அனுப்பி வைத்தாள். அந்த உத்தம பத்தினியை மனைவியாகப் பெற்ற அவன், என்னோடு வருவது சாலவும் தகும். ஆனால்... என்று இழுத்தவளிடம், ராமபிரான், என்ன ஆனால்... என்றார். சுவாமி! ஊர்மிளாவும் இப்போது கர்ப்பவதியாக இருக்கிறாள். அவள் அருகே அவன் இருக்க வேண்டாமா? அவனை ஏற்கனவே 14 ஆண்டுகள் மனைவியை விட்டு பிரித்து விட்டோம். இப்போது, அந்த கர்ப்பஸ்திரீயிடமிருந்தும் பிரிக்க வேண்டுமா? என்ற சீதாவைப் பார்த்து சிரித்தார் ராமன். சீதா! ஊர்மிளா யார்? உன் தங்கை. உன்னைப் போலவே உத்தமி. நீ காட்டிற்கு போகிறாய் எனத்தெரிந்தால், அவள் உடனே தன் கணவனை அனுப்பி வைப்பாள். இதற்கெல்லாம் கலங்காதே. மேலும், நீ என்ன அங்கே நீண்டகாலம் தங்கவா போகிறாய்? ரிஷி தரிசனத்தை முடித்து விட்டு கிளம்பப் போகிறாய். அவனும் உன்னோடு வந்துவிடுவான், என்றார். அயோத்தியில் பட்டாபிஷேகம் முடிந்ததோடு ராமாயணமும் முடிந்தது, ஸ்ரீராமனின் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ந்து வாழப் போகின்றனர். ராமசகோதரர்கள் தங்கள் மனைவியருடன் இல்லறத்தில் திளைத்து, நன்மக்களை உலகுக்கு தரப்போகின்றனர். இனி இவ்வுலகில் எல்லாம் ÷க்ஷமமே என நினைத்திருந்த வால்மீகி மகரிஷி திடீரென நிஷ்டை கலைந்து எழுந்தார். சீடர்கள், அவர் திடுக்கிட்டு எழுந்ததைக் கண்டு ஓடோடி வந்தனர். குருவே! என்னாயிற்று! தாங்கள் இப்படி பதைபதைப்பு காட்டி நாங்கள் பார்த்ததே இல்லையே! தங்கள் கண்களிலிருந்து சரம் சரமாய் கண்ணீர் கொட்டுகிறதே! ராமன் ஆளும் பூமியில் அபவாதம் ஏதும் நிகழ வாய்ப்பில்லையே சுவாமி! பின் ஏன் இந்த கலக்கம்? என்றனர் படபடப்புடன். அவர் அமைதியாகச் சொன்னார்.ராமாயணம் முடியவில்லை...அது தொடரப்போகிறது.

லவகுசா பகுதி-1




மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது அயோத்தி.மக்களெல்லாம் வண்ண வண்ண உடைகளில் தெருக்களில் பவனி வந்து கொண்டிருந்த காட்சி, விண்மீன்கள் கண்சிமிட்டும் வானத்தை ஒத்திருந்தது.எங்கள் ராமபிரான் பதவியேற்று விட்டார். இனி என்றும் எங்களுக்கு இன்பமே, என்று மக்கள் ஆரவாரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். ராமபிரானை தரிசிக்க காத்திருந்த மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு காவலர்களுக்கு அவசியமில்லாமல் போயிற்று. ஏனெனில், ராமராஜ்யம் தொடங்கி விட்டதல்லவா! ராமன் என்றாலே ஒழுக்கம் என்பது தானே பொருள். மக்கள் தாங்களே வரிசையை வகுத்துக்கொண்டு ஒழுங்குபட நின்றனர். வெளியே இப்படி என்றால், அரண்மனைக்குள் இன்னும் கோலாகலம். பட்டாபிஷேகம் காண வந்திருந்த பெண்கள் பயமின்றி நடமாடினர். சகோதரி! ராமராஜ்யம் துவங்கி விட்டது. இனி இரவு, பகல் என்ற வித்தியாசம் இங்கில்லை. நாம் எப்போது வேண்டுமானாலும், சிங்கங்கள் நிறைந்த காட்டிற்குள் கூட போகலாம். நம்மை ஏறிட்டு பார்க்கக்கூட ஆண்கள் தயங்குவார்கள். ஏனெனில், ராமராஜ்யத்தில் பண்பாடு என்பது ஊறிப்போனதாக ஆகிவிடும், என மகிழ்ச்சி பொங்க, ஒரு பெண், இன்னொருத்தியிடம் சொன்னாள். ஆம்...இயற்கை தானே! ராமபிரானின் தம்பி லட்சுமணன், தன் அண்ணனுக்கு திருமணமாகி இந்த நிமிடம் வரை, அண்ணியாரின் முகத்தை ஏறிட்டு பார்த்ததில்லை. இப்போதும், அவன் பட்டாபிராமன் முன்னால், கைகட்டி பவ்வியமாகத் தான் நின்று கொண்டிருந்தான். கோபக்காரன் தான்...மற்றவர்கள் முன்பு. அண்ணனையோ, அண்ணியாரின் திருப்பாதத்தையோ பார்த்துவிட்டால் பசுவைப் போல் ஒடுங்கி விடுவான். கோபமுள்ள இடத்தில் தானே குணம் இருக்கும்! அப்படிப்பட்ட தம்பியைப் போலவே தான் அயோத்தி வாழ் மக்களும், பெண்கள் விஷயத்தில் மிகுந்த அடக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மாமுனிவர், தமிழ்க்கடல் அகத்தியர் அங்கே வந்தார். ஸ்ரீராமனின் வெற்றிக்கு போர்க்களத்துக்கே வந்து அருளாசி செய்த மகான் அவர். ராமா! ராவணனை வெல்வோமா மாட்டோமா என சந்தேகம் கொள்ளாதே. இந்த உலகில் வெற்றி தரும் சூரிய மந்திரம் ஒன்று உள்ளது. அதை நான் உனக்குச் சொல்லித் தருகிறேன். அதைச் சொல், வெற்றி உன்பக்கம் தான், என்றவர் ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும் அந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். ராமன் சொன்னார், வென்றார்.

அந்த மரியாதைக்குரியவர் வந்ததும், அவையே அவையடக்கத்துடன் எழுந்து நின்று அவரை தலைபணிந்து தாழ் பணிந்து வரவேற்றது. ராமபிரானும், சீதாதேவியாரும் அந்த மாமுனிக்கு பாதஸ்நானம் செய்து, அந்த தீர்த்தத்தை தங்கள் தலையில் தெளித்து வரவேற்றனர். தங்க சிம்மாசனத்தில் அகத்தியர் அமர்ந்தார். ராமபிரான் அவரிடம், மாமுனியே! நான் பல அரக்கர்களை வனவாசத்தின் போது வென்றேன். அவர்களெல்லாம் யார்? அவர்களின் பிறப்பு என்ன? என்று கேட்டார். அகத்தியர் விலாவாரியாக அவற்றிற்கு விளக்கமளித்தார். ராமன் தன் அருகில் நின்ற அனுமானை அழைத்தார். முனிவரே! என் சீதாவை காட்டில் துறந்த வேளையில், எனக்காக வானரவீரர்கள் நாற்திசைகளிலும் சென்று தேடினர். தெற்கே சென்ற இந்த அனுமான் என்னைக் காப்பாற்றும் வகையிலான நற்செய்தி கொண்டு வந்தான். இறந்து போன வீரர்களை எழுப்ப மருந்துமாமலையைக் கொண்டு வா என்றால், வடக்கேயிருந்து அதை எடுத்து வர இவன் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நாழிகை (24 நிமிடம்) தான். இது இவனால் எப்படி சாத்தியமாயிற்று? என்று கேட்டார். ராமா! மிகச்சரியானதொரு கேள்வி கேட்டாய். இந்த அனுமனின் சரித்திரம் அற்புதமானது. இவனது வரலாறு கேட்டாலே பாவங்கள் நசிந்து போகும். தன் சக்தியின் பெருமை இன்னதென அறியாதவன் இந்த ஆஞ்சநேயன். செருக்கற்றவன்; பிறர் நலம் விரும்புபவன்; கருணையும், சாந்தமும் இவனிடம் ஊறிப்போனவை. கருணை எங்கிருக்கிறதோ, அங்கே தான் வீரலட்சுமி குடியிருப்பாள். இவனது வீரம் அளவிட முடியாதது. சொல்கிறேன் கேள், என்றவர் அனுமானின் கதையை ஆரம்பித்தார். ராமா! காற்றுக்கு அதிபதியான வருணபகவான், அஞ்சனை என்ற இவனது அன்னை மீது ஆசை கொண்டான். அந்த அஞ்சனையின் வயிற்றில் இந்த அனுமன் பிறந்தான். இவன் பிறந்ததுமே, இவனுக்குரிய ஆற்றல் அதீதமாக இருந்தது கண்டு பெற்றவர்கள் ஆச்சரியமடைந்தனர், இந்த வீரனால் அரக்கர் குலம் அழியும் என தேவர்கள் ஆனந்தம் கொண்டனர்.

அவன் தன் இளம்பிராயத்தில், தன் தாயிடம், அம்மா! எனக்குரிய இனிய உணவு எது? என்று கேட்டான். மகனே! இந்த குளிர்ந்த சோலையில் எந்தக் கனியெல்லாம் சிவந்து போயிருக்கிறதோ, அதுவெல்லாம் உனக்குரியது தான் என்று சொல்லிவிட்டு இவனுக்காக பழம் பறிக்க வெளியே சென்று விட்டாள். அப்போது, வான்வெளியில் சூரியன் உதயமாக, அதை பழமெனக் கருதி இவன் மேலே பாய்ந்தான். வாயுவின் மகன் என்பதால், இவனுக்கு காற்றில் பறக்கும் சக்தி இயற்கையிலேயே வாய்த்தது. இப்படி சூரியனையே பழமாக நினைத்தவனுக்கு, இலங்கை ஒன்றும் பெரியகாரியமாக படவில்லை, என்றார் அகத்தியர். பின்னர் விபீஷணன், சுக்ரீவன், அனுமான், அங்கதன், சேது அணை கட்டிய நளன் உள்ளிட்ட பலருக்கும் பரிசுகளை வழங்கினார் ராமன். அனைவரும் ராமனைப் பிரிய மனமின்றி கண்ணீருடன் அவரவர் ஊர் திரும்பினர். அனுமான் ரொம்பவே கண்ணீர் வடித்து விட்டான். சுக்ரீவனின் நிலைமை கருதி, அவனுடேயே தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்ட ராமன், அனுமானை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் சீதாதேவியுடன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தார். அவருக்கு திருமணம் நடந்த போது வயது 12. சீதாவுக்கு 6 வயது. 18 வயதில், 12 வயது சீதாவுடன் காட்டுக்குப் போய் விட்டார். 32 வயதில் திரும்பியிருக்கிறார். சீதாவுக்கு இப்போது 26 வயது. இவர்கள் தங்கள் இளமையை காட்டில் கழித்து விட்டனர். அரண்மனை சுகத்தை அனுபவிக்க இப்போது தான் நேரம் வாய்த்திருக்கிறது. இன்ப வானில் அந்த தம்பதிகள் சிறகடித்துப் பறந்தனர். ஆனால், விதி என்னும் விரோதி அந்த இன்பத்தை நீண்டநாள் நீடிக்க விடவில்லை.

கடல்பேனா



நாம் உண்ணும் உப்பு கடல் தாய் நமக்கு தந்த பரிசு என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த உப்பைத் தின்னும் மனிதர்கள் பார்க்கக்கூட முடியாத வகையில் கடலுக்குள் எத்தனையோ அற்புதங்களும், அதிசயங்களும், விநோதங்களும் அட அப்படியா என்று வியக்கும் வகையில் கடலன்னை நமக்குக் கொட்டிக் கொடுத்திருக்கிறாள் என்பது பலருக்கும் தெரியாமல் தான் உள்ளது.

கடல் பேனாக்கள் கடலுக்கடியில் அலைகள் இல்லாத இடத்தில் கூட்டம், கூட்டமாக பல வண்ணங்களில் ஆடும் பரதநாட்டியத்தைப் பார்ப்பது காணக்கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும். கடலுக்குள் ஓர் அற்புதக் கண்காட்சியையே நடத்திக் கொண்டிருக்கும் இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியது..

""பார்ப்பதற்குப் பறவைகளின் இறகுகள் போல காணப்படும் கடல் பேனாவின் விலங்கியல் பெயர் பெனாடுலாசியா என்பதாகும். பறவைகளின் இறகுகளைக் கையில் வைத்துக்கொண்டு மையைத் தொட்டு, தொட்டு ஒரு காலத்தில் எழுதினோம். அந்த இறகுப் பேனாக்கள் போலவே இவையும் இருப்பதால் இவற்றிற்குக் கடல் பேனாக்கள் என்று பெயர் உண்டானது.உலகம் முழுவதும் உள்ள கடலில் வாழ்ந்தாலும் மன்னார் வளைகுடாவில் ஆழ்கடல் பகுதியில்,அலைகள் ஆர்ப்பரிக்காத இடத்தில் இவை கூட்டம், கூட்டமாக வியாபித்து ஆடும் நடனம் அற்புதம். கடலுக்கடியில் ஸ்கூபா டைவிங் செய்பவர்கள் இவற்றின் அழகைக் கண்டு ரசிக்க முடியும்.

பவளப்பாறைகளை உருவாக்கும் கடல் தாமரைகள் மாதிரியான ஒருவகைப் பூச்சிகள்தான் கடல் பேனாவாகின்றன. இதில் உள்ள ஒவ்வொரு இறகுகளும் 8 உணர்விழைகளைக் கொண்டிருக்கிறதாம். கடல் நீரை உறிஞ்சுதல்,உணவு உட்கொள்ளுதல், இனப்பெருக்கம்,டார்ச்லைட் போன்ற ஒளி உமிழ்தல் போன்றவையே இவற்றின் செயல்பாடுகள். கடலுக்கடியில் மணலிலோ, சகதியிலோ அடிப்பகுதி புதைந்து மற்ற பகுதிகள் வெளியில் தெரிவதுபோல காணப்படும். பல வண்ணங்களில் இருக்கும் இந்த உயிரினம் 6 அடி உயரம் வரை வளரக் கூடியது.

ஆழமான அதே நேரத்தில் அமைதியான கடல் பகுதிகளையே விரும்பும் இப்பேனாக்கள் அதன் இருப்பிடத்திலிருந்து பிடுங்கி விடாமல் தன்னைத்தானே பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்கின்றன.

தாவர மிதவை நுண்ணுயிரிகளே இதன் விருப்ப உணவாக இருப்பதால் இருக்கும் இடத்தில் அது கிடைக்காவிட்டால் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொள்கின்றன. சின்னஞ்சிறு மீன்களும் சில பெரிய கடல் பேனாக்களில் ஒட்டிக் கொண்டும் உயிர் வாழ்கின்றன. இப்பேனாக்களில் உள்ள இறகுகள் போன்ற வளையங்கள் மூலமே இதன் வயதும் கணக்கிடப்படுகிறது. கடலுக்கு அடியில் வாழும் நகரும் உயிரினங்களான நட்சத்திர மீன்கள், கடல் வண்ணப் புழுக்கள் ஆகியன இவற்றின் முக்கிய எதிரிகள். இவையிரண்டும் கடல் பேனாவை பார்த்தவுடனேயே வேரோடு பிடுங்கி அழித்து விடும். இவற்றிடமிருந்து இவைகள் தப்பித்துக் கொண்டால் 100 வருடங்கள் வரை உயிர் வாழும் வகையில் இதன் ஆயுளும் கெட்டியாக இருக்கும்.

ஆண் உயிரினம் இன முதிர்ச்சியடைந்து கடலில் விந்துகளை வெளியிடும் அதே நேரத்தில் பெண்ணும் அதற்கு அருகிலேயே ஒரே சமயத்தில் முட்டைகளை வெளியேற்றுவதால் இரண்டும் ஒன்றாகி கருவுறுதல் நடந்து இளங்குஞ்சுகளாகி விடுகின்றன. இவை ஒரு சில வாரங்கள் மட்டும் கடலில் நீந்தி வாழ்ந்து கொண்டு தனக்குச் சாதகமான இடம் கிடைத்தவுடன் மணலிலோ, சகதியிலோ அப்படியே ஊன்றி அங்கேயே வளர்ந்து கொண்டிருக்கும்.

நவீன விசைப்படகுகள் இழுவலைகளின் மூலம் மீன் பிடிப்பதால் பல அரிய வகை கடல் பேனாக்கள் வேரோடு பிடுங்கப்பட்டு சிறிதும் உபயோகமில்லாமல் கரைகளில் தூக்கி வீசப்படுகின்றன.

கடல் பேனாக்களை மற்றவை தொட்டால் உடனே டார்ச்லைட் போன்ற ஒருவித ஒளியை உமிழ்ந்து எதிரிகளைப் பயப்பட வைத்து தப்பிக்கும் நுட்பத்திலும் பேனாக்கள் பலே கில்லாடிகள்'' என்றார்.

Thursday, February 10, 2011

தமிழகத்தின் பாரம்பரியச் சின்னம்


தமிழகத்தின் பாரம்பரியச் சின்னம்: கி.பி. 1987ல் யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக தஞ்சைப் பெரியகோயிலை அறிவித்தது. இதன் மூலம் இக்கோயிலின் பெருமை உலகத்தின் பலநாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. மனிதமரபினை, பண்பாட்டினைப் பறைசாற்றும் கலைப்பொக்கிஷமாகத் திகழும் இக்கோயிலைக் காண நாள்தோறும் வெளிநாட்டவர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். இக்கோயிலை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கான காரணங்கள்.


1.பொதுவாக பெரிய கோயில்களை பலகாலம் பல மன்னர்கள் கட்டுவர். ராஜராஜன் ஒருவனாலேயே எழுப்பப்பட்ட முழுமையான பிரம்மாண்ட கோயில் இது.


2.ஒரே தன்மையான செந்நிறக்கற்களால் அமைந்த திருக்கற்றளி கோயிலாக அமைந்தது. (கற்களால் ஆன கோயில்களைக் கற்றளி என்பர்)


3.கருவறைக்கு மேலே உயரமான விமானம் அமைத்தது மாறுபட்ட அமைப்பாக இருந்தது.


4.புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.


5.ராஜராஜசோழன், தானேகோயில் கட்டியதற்கான ஆதாரத்தை கல்வெட்டில் பொறித்ததோடு மட்டுமல்லாமல், எந்தெந்தவகையில் பொருள் வந்தது என்பதையும், கோயிலுக்கு யார் யாருடைய பங்களிப்பு, கும்பாபிஷேகம் நடத்திய வரலாறு ஆகியவற்றை கல்வெட்டில் பொறித்துள்ள தகவல்கள்.


6.கற்றளியால் அமைந்த விமானம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டது.
7.தஞ்சைப் பெரிய கோயில் ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல. இது தமிழக வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் பெட்டகமாகத் திகழ்கிறது.
கல்வெட்டுகள் தரும் தகவல்: தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜசோழன் காலம் முதல் மராட்டிய மன்னர் சரபோஜி காலம் வரையான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் கிடைத்த தகவல்களின் சுவையான தகவல்கள்:
* கல்வெட்டுகள் அனைத்திலும் "திருமகள் போல' "செந்திரு மடந்தை' என்று மகா லட்சுமியைக் குறிப்பிட்டே தொடங்குகின்றன.
* ராஜராஜன் மற்றும் அவனுடைய சகோதரி, பட்டத்தரசிகள், சோழ நாட்டு மக்கள் கொடுத்த பொன், பொருள்கள் முழுமையாகப் பட்டியல் இடப்பட்டுள்ளன.
* பெரிய கோயில் நிர்வாக அலுவலராக விளங்கியவர் பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்.
* அரண்மனை ராஜகுருவாக இருந்தவர் ஈசான சிவபண்டிதர்.
* கோயில் தலைமை அர்ச்சகராகப் பணிசெய்தவர் பவண பிடாரன்.
* கல்வெட்டில் இடம்பெறும் செய்திகளுக்கு மெய்க்கீர்த்தி என்று பெயர். இதனை செதுக்கியவர் பாளூர்கிழவன்.
* கோயிலைக் கட்டிய தலைமைச் சிற்பி வீரசோழன் குஞ்சர மல்லனான ராஜராஜ பெருந்தச்சன்.
* கோயிலில் தேவாரம் பாட 50 ஓதுவார்களும்(பிடாரர்கள்), ஆடல் மகளிராக 400 பேரும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு வீடுகளும், பொன்னும், பொருளும், நெல்லும் அளிக்கப்பட்டது.
* கோயிலில் பணிபுரிந்த பணியாளர்களின் எண்ணிக்கை 1500.
*அனைத்து செப்புத் திருமேனிகளையும் ராஜராஜன், அவனது மனைவியர், சகோதரிகள், அரண்மனை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் தனித்தனியாக செய்து தந்துள்ளனர்.
* இரண்டு நிதிநிலைக் கருவூலங்கள் (வங்கி போன்றது) இக்கோயிலில் இயங்கி வந்தன. மன்னன், மக்களிடம் இருந்து பெற்ற பொருளை முதலீடாகக் கொண்டு 12.5 சதவீதம் என்ற வட்டி அடிப்படையில் வணிகர்கள், ஊர் சபையினர், தனியார் கடன் கொடுக்கப்பட்டது. அதில் கிடைத்த வருமானம் கோயிலுக்கு செலவழிக்கப் பட்டது.
* கோயிலுக்கு அளிக்கப்பட்ட பலகோடி மதிப்புள்ள பொன், ரத்தின நகைகள், தங்க வெள்ளிப் பாத்திரங்கள் முதலிய அனைத்தும் முறையாக எடைபோடப்பட்டும், அதற்கான மதிப்பும் துல்லியமாகக் கணிக்கப்பட்டு பதிவு செய்யப் பட்டிருந்தன. அந்த எடைபோடும் தராசைக் கூட "ஆடவல்லான் நிறை' என்று சிவபெருமான் பெயரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடவல்லனாகிய நடராஜப் பெருமான் மீது ராஜராஜன் கொண்டிருந்த பக்தியைக் காட்டுவதாக அமைந்துள்ளது. சுவாமிக்கு அணிவிக்கும் ஒரு முத்துமாலையை எடை போட்டால் கூட "நூல் நீக்கி முத்துமாலையின் எடை'' என்று துல்லியமாக எடை குறிக்கப் பட்டிருப்பது ராஜராஜனின் நேர்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
* தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய இடங்களிலும் கோயிலுக்கு நிலங்கள் இருந்தன. அங்கிருந்து ஆண்டுதோறும் வரும் வருமானம் கருவூல அதிகாரியிடம் பதிவு செய்யப்பட்டன.
* கோயிலில் நெய்தீபம் ஏற்ற பசுமாடுகள், ஆடுகள் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பல இடங்களிலுள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்தன. அங்கிருந்து பெறப்பட்ட நெய்யில் கோயில் தீபங்கள் ஏற்றப்பட்டு வந்தன.
* கோயில் வளாகம் இசை, நடனக் கலைகளின் நிலையமாக விளங்கியது. கலைஞர்கள் மன்னரால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டனர். கலைஞர்களின் வாழ்க்கை இறைவனுக்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டது.
* சோழர்கள் நடத்திய போரில் கிடைத்த பெரும் பொருளும் பெரியகோயிலின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
* கோயில் ஊழியர்களுக்கு அனைத்துச் சலுகைகளும் மன்னரால் வழங்கப்பட்டன. கோயில் பணியாளர்களுக்கு முடிதிருத்து பவர்களுக்கு ""ராஜராஜப்பெரும் நாவிதன்'' என்று பட்டமளித்து கவுரவிக்கப்பட்டது.
* தஞ்சை நகரக் கோயில்கள், அக்கால வீதிகள், பேரங்காடிகள் (பெரியகடைகள்), அரண்மனை ஆகியவை பற்றி தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
* ராஜராஜேஸ்வர நாடகம் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப் பட்டு வந்தது.
* இதுதவிர விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் அளித்த நன்கொடை பற்றிய விபரங்களும் இடம் பெற்று உள்ளன.
* இதுவரை படியெடுக்கப்பட்ட 100 கல்வெட்டுகளில் இச்செய்திகள் இடம்பெற்றுள்ளன.
தஞ்சையின் கலைச்சின்னமான விமானம்: தஞ்சாவூர் நகருக்குள் நுழைந்ததும், நம் கண்ணில் படுவது பெரிய கோயிலில் உள்ள விமானமே. இதை "தென்கயிலாயம்' அல்லது "தட்சிண மேரு விமானம்' என்பர். கயிலாய மலையைப் போலவும், புராணங்களில் சொல்லப்படும் மேரு மலையைப் போலவும் உயரமாக இருப்பதாக இது வர்ணிக்கப் படுகிறது. தரை மட்டத்தில் இருந்து 216 அடி உயரமுடையது. பீடம் முதல் கலசம் வரை கருங் கற்களால் அமைக்கப்பட்டது. வாய் அகலமான கூம்பு வடிவ பாத்திரத்தை கவிழ்த்து வைத்தது போல இருக்கும் இவ்விமானத்தின், உட்புறத்தை, வெற்றிடமாக அமைத்திருப்பது அரிய விஷயமாகும். விமானத்தின் மேலுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட செப்புக்கலசம் 12அடி உயரமுள்ளது. விமானத்தில் நான்கு தளங்கள் உள்ளன. அவற்றிற்கும் மேல் பார்வதியும் சிவபெருமானும், தேவர்களும், கணங்களும் சூழ அமர்ந்துள்ளனர். கயிலாயத்தில் அவர்கள் இருப்பது போல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. உட்கூடாக அமைந்துள்ள விமானத்தை மூடியுள்ள "பிரம்மராந்திரக்கல்' 26.75 அடி சதுரமுள்ளது. இதன் நான்கு மூலைகளிலும் 1.34மீ உயரமும், 1.40மீ நீளமும் உடைய நான்கு நந்திகள் வீற்றிருக்கின்றன. வடமேற்குத் திசையில் பூத உருவம் ஒன்று உள்ளது. கிரீவம் எனப்படும் கழுத்துப்பகுதியும், அதற்கு மேல் அரைக்கோளமாக அமைந்துள்ள சிகரம் எனப்படும் தலைப்பகுதியும் எட்டுப்பட்டை வடிவில் அமைந்துள்ளன. தட்சிண மேரு என்பது "தெற்கே இருக்கும் மலை' என்று பொருள். போன்ஸ்லே வம்ச சரித்திரம்: தஞ்சை பெரிய கோயிலிலுள்ள விநாயகர் சன்னதியின் தென்புற வெளிச்சுவரில் "போன்ஸ்லே வம்ச சரித்திரம்' என்ற தஞ்சை மராட்டிய அரச வம்சாவளியை மன்னர் 2ம் சரபோஜி மராட்டிய மொழியில் கல் வெட்டாக வெட்டச்செய்துள்ளார்.
திருவிழாக்கள்: பெரிய கோயில் பிரதோஷ வழிபாடு மாதம் இருமுறை திரயோதசி திதியன்று நடக்கிறது. பிரதோஷ நேரத்தில் மாலை (4.30 முதல் 6 மணி வரை) மகாநந்தீஸ்வரர் அபிஷேகம், பக்தர்கள் முன்னிலையில் விரைவில் விவாகம் நடக்கவும், ஆயுள் விருத்தி வேண்டியும் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்றாவது வெள்ளிக் கிழமையன்று மாங்கல்ய பாக்கியத்திற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. சித்திரை பிரமோற்சவத் திருவிழா 18 நாட்களும், நவராத்திரி விழா 10 நாட்களும், மாமன்னன் ராஜராஜனின் பிறந்த தினமான ஐப்பசி சதய நட்சத்திரத்தன்று சதய விழாவும், மார்கழித் திருவாதிரை விழா பத்து நாட்களும் மாசியில் மகா சிவராத்திரி விழாவும் சிறப்பாக நடக்கிறது.
மராட்டிய மொழியில் பாடல்: கருவூர்த்தேவர் என்னும் அடியார் கி.பி., 11ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் பாடிய பாடல்கள் திருவிசைப்பாவாகும். இப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளில் 9ம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டு உள்ளது. இதில் தஞ்சைப் பிரகதீஸ்வரரைப் புகழ்ந்து பத்து பாடல்கள் பாடியுள்ளார். இதில் பிரகதீஸ்வரரை ""இஞ்சிசூழ் தஞ்சை இராச ராசேச்சரத்துஈசன்'' என்றே குறிப்பிடுகிறார். முருகன் தலங்களுக்குச் சென்று திருப்புகழ் பாடும் அருணகிரிநாதர் இங்குள்ள கோபுரத்திலிருக்கும் முருக பெருமானைப் போற்றிப் பாடியுள்ளார். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், இங்குள்ள கணபதி, பிரகதீஸ்வரர், முருகன் ஆகியோர் மீது பதிகங்கள் பாடியுள்ளார். தஞ்சை மராட்டிய மன்னர் சஹஜி மராட்டி மொழியில் பல கீர்த்தனைகளை பிரகதீஸ்வரர் மீது பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், சின்னையா, பொன்னையா, சிவானந்தம் வடிவேலு ஆகிய நால்வரும் இத்தல இறைவன் மீது கிருதிகளைப் பாடியுள்ளனர்.
நான்கே ஆண்டில் முடிந்த முடிந்த நல்ல பணி: ஆயிரம் ஆண்டுக்கு முன் தமிழர்கள் மிக உயர்ந்த பண்பாட்டுடன் கூடிய சமுதாய மரபுகளைப் பேணிகாத்தனர் என்பதை எதிர்காலச் சந்ததியினருக்குத் தெரிவிக்கவே மாமன்னன் ராஜராஜன் தஞ்சையில் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் எனும் பெரிய கோயிலைக் கட்டி, அதற்குள் தமது நெஞ்சில் குடியிருந்த பிரகதீஸ்வரர் என்னும் பெருவுடையாரை நிறுவினான். கி.பி., 1006ல் கோயில் கட்டும் பணியைத் தொடங்கி, 1010ல் கட்டி முடித்தான். இக்கோயிலின் மூலம் சோழர்கால தமிழகத்தின் வரலாறு, கல்வெட்டியல், அரசியல், கட்டடம், சிற்பம், ஓவியம், நடனம், இசை ஆகிய பல்கலைகளுடன் சமுதாயப் பண்பியல் மற்றும் இறைக்கொள்கை ஆகியவற்றை நமக்கு இதன்மூலம் மாமன்னர் எடுத்து கூறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளாக இந்தக்கோயில் தமிழகத்தின் பெருமையை உலகுக்கு அறிவித்துக் கொண்டுள்ளது.
காணாமல் போன பஞ்சதேக மூர்த்தி: சிவபெருமானை முழுமுதல் கடவுளாக போற்றிய ராஜராஜ சோழன் "சிவாயநம' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, இவன் தன் உயிர்மூச்சாகக் கொண்டிருந்தான். சிவபெருமானுக்கு ""பஞ்சதேகமூர்த்தி'' என்னும் பெயரில் செப்புச்சிலை வடித்து பெரியகோயிலில் வழிபட்டு வந்தான். ஐந்து சிலைகள் ஒன்றையொன்று ஒட்டிக் கொண்டு நிற்பது போல அமைக்கப்பட்டிருப்பதே பஞ்சதேக மூர்த்தி. இதன் அமைப்பினையும் சிறப்பினையும் பற்றிய கல்வெட்டு கோயிலில் கிடைத்துள்ளது. தமிழகத்தின் எந்தக்கோயிலிலும் இத்தகைய சிலை இல்லாமல் இருந்தது. கால மாற்றத்தில் இந்தச்சிலை தஞ்சாவூர் கோயிலிலும் இருந்து காணாமல் போய்விட்டது.
காந்திஜியின் கருத்துக்கு மரியாதை செய்த கோயில்: 1939ம் ஆண்டில் மகாத்மா காந்தி ஆதிதிராவிட மக்களை இறைவழிபாட்டுக்குஅனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலராக இருந்த ராஜஸ்ரீ ராஜாராம் ராஜா சாஹேப் சத்ரபதி, தனது பராமரிப்பில் இருந்த தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட 88 கோயில்களிலும் ஆதிதிராவிடர்கள் ஆலயப்பிரவேசம் செய்ய எவ்வித தடையும் இல்லை என அறிவித்தார். இச்செய்தியை அறிந்த காந்தியடிகள் 1939ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி நாளிட்டு தமது கைப்பட கீழ்க்கண்ட பாராட்டுக்கடிதத்தை அன்றைய தஞ்சை மராட்டிய அரச குடும்பத்தின் மூத்த இளவரசரும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலருமான ஸ்ரீமந் ராஜஸ்ரீ ராஜாராம் ராஜா சாஹேப் சத்ரபதி அவர்களுக்கு அனுப்பிவைத்தார் என்பது இந்தியச் சமுதாய சீர்திருத்த வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகும். ""ராஜஸ்ரீ. ராஜாராம் ராஜா சாஹேப் என்பவர் தற்போது தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் மூத்த இளவரசராகவும் பரம்பரை அறங் காவலராகவும் இருக்கிறார். இவரது பொறுப்பில் புகழ்மிக்க பிரகதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 90 கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் அனைத்தையும் தாமாகவே முழுமனதுடன் முன்வந்து ஆதிதிராவிட மக்களுக்குத் திறந்து விட்டு உள்ளதன் மூலமாக தற்போது நடைபெற்று வரும் இந்து புனருத்தாரணப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளார். இந்த ராஜா சாஹேப் செய்து உள்ளது மிகவும் தலைசிறந்த நற்செயலாகும். தீண்டாமை என்பது இந்துத்துவத்திலுள்ள கரும்புள்ளி எனக் கருது பவர்கள் அனைவராலும் இவர் பெரிதும் போற்றி பாராட்டப்பட வேண்டியவராவார்,'' என எழுதி கையெழுத்திட்டுள்ளார்.
பெரிய கோயில் நிர்வாகம்: தஞ்சை மராட்டிய அரசரான இரண்டாம் சரபோஜி. 1799ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தஞ்சை பெரியகோயில் உள்ளிட்ட 102 கோயில்களை அவற்றின் சொத்துக்களுடன் நிர்வகிக்கும் உரிமையைப் பெற்றார். 1866ல், இவற்றில் பத்து கோயில்களையும் அவற்றிற்குரிய கொடை நிலங்களையும் ஆங்கிலேய நிர்வாகம் மிகத் தந்திரமாக மராட்டிய அரச குடும்பத்தினரிடமிருந்து பறித்துக் கொண்டது. மீதமுள்ள 88 கோயில்களையும் அவற்றிற்குஉரிய சொத்துக்களையும் நிர்வகிக்கும் உரிமை அளிக்கப்பட்டு நிர்வாகம் தொடர்ந்து மராட்டிய அரசு குடும்பத்தினரால் நடத்தப்பெற்று வருகிறது. 1932ம் ஆண்டு முதல் தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப் பட்ட நிர்வாகத் திட்டத்தின் படி, கோயில் நிர்வாகத்தைப் பரம்பரை அறங்காவலரோடு இணைந்து, தமிழக அரசின் அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. இரண்டாம் சரபோஜிமன்னர் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு ஏராளமான தங்க, வெள்ளிப் பாத்திரங்கள், வாகனங்கள், தேர்கள், சப்பரங்கள் ஆகியவற்றை கொடையாக அளித்துள்ளார். 1803ல் பல திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார். அதன் பின் 177 ஆண்டுகளுக்கு பிறகு 1980, ஏப்ரல் மூன்றாம் தேதியும், தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு 1997ம் ஆண்டு ஜூன் 9ம் தேதியும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பெரியகோயில் சிவாச்சாரியார், பரிசாரகர் உட்பட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது 64 எக்டேர் நஞ்சை நிலங்கள் வில்லியநல்லூர், ஆலங்குடி, இ.நாகத்தி மற்றும் சூரக்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ளன.


உலகப்போர் வந்தாலும் தாக்குதலுக்கு தடை: 1950ம் ஆண்டு பரம்பரை அறங்காவலருடன் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பெரிய கோயிலைப் பராமரித்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள அறிவியல், கலை மற்றும் பண்பாட்டு மரபியல் சிறப்புகளைக் கண்டறிந்த யுனெஸ்கோ நிறுவனம், இக்கோயிலை உலகப்பாரம்பரியச் சின்னமாக ஏற்று அதற்குரியபட்டத்தையும் வழங்கியுள்ளது. இதன்படி எதிர்காலத்தில் உலகப்போர் மூண்டாலும் இக்கோயிலின் மீது எவ்விதத்தாக்குதலையும் எந்த நாடும் நடத்திச் சேதப்படுத்திவிடக்கூடாது என உலக நாடுகள் அனைத்திற்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது உலக அரங்கில் தமிழனின் பாரம்பரியச் சிறப்புக்கு கிடைத்த கவுரவமாகும்.