Wednesday, December 22, 2010

அருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம், தாலாஸ்,அமெரிக்கா




தலவரலாறு : டெக்சாசின் ஃபிரிஸ்கோ பகுதியில் உள்ள தாலாசில் அமைந்துள்ள அழகிய ஆலயம், அருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம் ஆகும். பரம பூஜ்ய ஸ்ரீ சுவாமிஜி தாலாஸ் மற்றும் ஹோஸ்டன் பகுதியில் உள்ள சட்சாங் குழுவினரை 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி சந்தித்து, தத்தா கோயில் கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அப்பகுதியிலுள்ள பக்தர்களின் உதவியுடன் தாலாஸ் பகுதியில் நிலம் பெறப்பட்டு அருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம் கட்டப்பட்டது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டத்திலேயே முற்றிலும் கல்லால் உருவாக்கப்பட்ட ஒரே ஆலயம் இதுவாகும். சுவாமிஜியின் அரிய முயற்சியால் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆலயம் அமைப்பதற்காக நிலம் தேடும் பணி துவங்கப்பட்டது. இப்பணி செப்டம்பர் மாத இறுதி வரை தொடர்ந்தது. பின்னர் தாலாஸ் பகுதியில் பெறப்பட்ட நிலம் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் விலைக்கு வாங்கப்பட்டது. வேகமாக முன்னேறி வந்த நகரங்களில் ‌ஒன்றான ஃபிரிஸ்கோ பகுதியில் இக்கோயில் அமைக்கப்பட்டது. குடியிறுப்பு பகுதியின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு மிக அருகில் தேவாலயமும், பள்ளியும் இருப்பது தனிச்சிறப்பானதாகும்.

வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய சுமார் 10,000 சதுரடியில் அமைந்த கோயில் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டப்பட்டது. கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போது மெட்ரோபிளக்ஸ் பகுதியில் பக்தர்களால் எளிமையான முறையில் ஹனுமன் வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. பக்தர்களின் பல ஆண்டுகால கோரிக்கைக்கு பிறகு சுவாமிஜியால் ஜெய்பூரில் இருந்து இளஞ்சிவப்பு நிறத்தாலான ஹனுமன் சிலை புதிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டது. அத்துடன் 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதியன்று முதல் ஹனுமன் ஜெயந்தி விழாவன்று 5 அடி உயர ஹனுமன் சிலை ஒன்று கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதியன்று ஹனுமன் கலாச்சார மையத்துடனான ஸ்ரீ காரிய சித்தி ஹனுமன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆஷாத சுக்ல ஏகாதசி அன்று கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டதால், அன்று முதல் ஏகாதசி தினமும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதியன்று ஹனுமன் கலாச்சார மையத்தில் ஹனுமன் விக்ரஹத்தின் பிரன்ன பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

ஆலய நேரங்கள் : திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது. வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமையிலும், தேசிய விடுமுறை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக ஆலயம் திறக்கப்படுகிறது.

ஆலய முகவரி : Karya Siddhi Hanuman Temple,

12030 Independence, Pkwy, Frisco, Texas - 75035

இ-மெயி்ல் : info@dallashanuman.org

தொலைப்பேசி : (866) 996-6767

இணையதளம் : http://www.dallashanuman.org

No comments:

Post a Comment