Thursday, August 25, 2011

பொல்லாப்பிள்ளையார் எங்கிருக்கிறார்?


குறும்பு செய்யும் குழந்தைகளை "பொல்லாப் பயல்' என்று திட்டுவதுண்டு. பிள்ளைக்கடவுளான விநாயகரும் பொல்லாப்பிள்ளையார் என்று பெயர் பெற்றிருக்கிறார். அவர் வரலாற்றைத் தெரிந்து கொண்டால் அவர் பொல் லாதவரா நல்லவரா என்ற உண்மையை அறிந்து கொள்வீர்கள்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்களைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. இவரது தந்தை திருநாரையூர் சிவத்தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். ஒருமுறை, தந்தை வெளியூர் சென்று விட்டதால், நம்பி கோயிலுக்கு பூஜைக்கு கிளம்பினார். பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின், அவரைச் சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி, பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார்.
உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் அவர் கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கலை திருப்தியாகச் சாப்பிட்டார். அன்று கோயிலுக்கு வந்தவர்களுக்கு பிரசாதம் கிடைக்கவில்லை. பிள்ளையாரே சாப்பிட்டு விட்டதாக நம்பி சொல்ல, மற்றவர்கள் அதை நம்பவில்லை.
இந்த தகவலைக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜசோழனும் இதை நம்பவில்லை. இருப்பினும், நம்பியின் பேச்சை ஏற்று, பலவகையான பலகாரங்களுடன் கோயிலுக்கு வந்து பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யச் சொன்னான். பிள்ளையார் சாப்பிடவில்லை. உடனே நம்பியும் பக்தியுடன் அவர் மீது பாடல்களைப் பாடினார். இதுவே "இரட்டை மணிமாலை' ஆகும். மனமிரங்கிய பிள்ளையார், தன் பக்தன் கேலிப்பேச்சுக்கு ஆளாகக் கூடாதே என்பதற்காக நைவேத்யத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். இந்த பிள்ளையார் சிலை உளியால் செதுக்கப்படாத சுயம்பு விநாயகர் என்பதால் "பொள்ளாப் பிள்ளையார்' எனப்பட்டார். "பொள்ளா' என்றால் "செதுக்கப்படாத' என்பது பொருள். காலப்போக்கில் இது பொல்லாப்பிள்ளையார் ஆகி விட்டது. சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில், திருநாரையூர் உள்ளது.

இந்தப் புன்னகை என்ன விலை?


விநாயகப்பெருமான் புன்னகையிலேயே பூத்த மலர் என்கிறது பிரமாண்ட புõரணம். இந்த புராணத்தில் லலிதோபாக்யானம் என்ற பகுதி வருகிறது. அதில் விநாயகரின் பிறப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளது.
பண்டாசுரன் என்பவன் தேவர்களை மிகவும் கடுமையாகக் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டும் என தேவர்கள், பார்வதிதேவியிடம் முறையிட்டனர். பார்வதி தனது பெண் சேனைகளுடன் லலிதாம்பிகை என்னும் பெயர் தாங்கி புறப்பட்டாள். சிவனும் காமேஸ்வரர் என்ற பெயர் தாங்கிவந்தார். அதனால், அம்பாளுக்கு "காமாட்சி' என்ற பெயரும் வந்தது.(புராணகாலத்திலேயே ராணுவத்தில் பெண்கள் இருந்துள்ளனர் என்பதற்கு இது சாட்சி). அக்னிகோட்டை ஒன்றை எழுப்பி, அதனுள் தங்கிவிட்டாள்.
இதையறிந்த பண்டாசுரன், தனது உதவியாளரான விசுக்ரன் என்பவனை அனுப்பி, ""தேவியின் படைகளைச் செயல்பட விடாமல் செய்து விடு,'' என்று உத்தரவிட்டான். விசுக்ரன் ஆரவாரத்துடன் தேவி தங்கியிருந்த இடத்துக்கு வந்தான். ஆனால், சுற்றிலும் அக்னி எரிந்ததால் அவனால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. உடனே அவன் ஒரு யந்திரத்தை தயாரித்தான். அதற்கு "விக்ன யந்திரம்' என்று பெயர். அதை நெருப்பைத்தாண்டி கோட்டையின் மேல் கூரையில் விழும்படி வீசி எறிந்தான். அதுவும் கூரையில் விழுந்தது.
அந்த யந்திரம் யாருடைய உயிரையும் வாங்காது. ஆனால், மனதை மாற்றிவிடும் சக்தியுடையது. அங்கு தங்கியிருந்த தேவியின் படைகளின் மனதை அது மாற்றியது.
""இந்த தேவிக்கு கட்டுப்பட்டு நாம் ஏன் வீணே போரிட வேண்டும்? நம்மால் கொல்லப்படுபவர்கள் அசுரர்களே ஆயினும், பிரம்மஹத்தி தோஷம் ஏற்படத்தானே செய்யும்! மேலும், நாம் கஷ்டப்பட்டு போரிட, இந்த தேவி "பெரிய வீராங்கனை' என்ற பெயரைத் தட்டிக்கொண்டு போய்விடுவாள். எனவே, இவளுடன் போருக்குச் செல்லக்கூடாது. எல்லாரும் நிம்மதியாக உறங்கி விடலாம்,'' என படுத்து விட்டனர்.
இந்த மாயைகளை எல்லாம் புரிபவளே அம்பிகை தானே! அவள் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். இந்த நேரத்தில், சிவன் அங்கு வர, அவரைப் பார்த்து மயக்கும் புன்னகையைச் சிந்தினாள். அந்த புன்னகைக்கு விலை மதிப்பே கிடையாது என்பதைப் புரிந்து கொண்ட சிவனும் புன்னகையை உதிர்க்க, அவர்களது புன்னகையிலேயே உதயமானார் விநாயகர்.
விநாயகர் தன் தும்பிக்கையை மேலே உயர்த்தி யந்திரத்தை எடுத்தார். சுற்றிலும் எரிந்த அக்னிக்குள் வீசி சாம்பலாக்கி விட்டார். விக்னயந்திரம் எரிந்து போன அடுத்த கணமே, தேவியின் படைகள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் போரிட்டு பண்டாசுரனை அழித்தனர். விக்னம் என்றால் "தடை'. தடையை வேரறுத்து, தன் தாய் வெற்றிவாகை சூட காரணமாக இருந்த விநாயகருக்கு "விக்னேஷ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.

விநாயகர் சதுர்த்தி வழிபாடு


விநாயகர் அவதரித்த சதுர்த்தி நன்னாளில் விநாயகர் முன் அமர்ந்து சொல்ல வேண்டிய வழிபாடு இதுவாகும். இதனால், செய்யும் செயல்களில் தடைகள் நீங்கும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வ வளம் உண்டாகும். நல்ல குழந்தைகள் வாய்ப்பர். சாதிக்கும் ஆற்றலும், மனோதிடமும் ஏற்படும்

* கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனைக் கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே! என்னைக் காக்கும் விநாயகனே! உனக்கு என் வணக்கம்.
* இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வ வளத்தை அருள்பவனே! எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப்பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம்.
* உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங் களைக் கூட மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத்தன்மை,பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.
* திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்துவைப்பாயாக.
* தூய்மையான உள்ளத்தை கொடு. உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம் பாருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.
* பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே!
* காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே! ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானை முக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். விநாயகப்பெருமானே சரணம்.

வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை! - கீதையில் கண்ணன்* அநீதி பூமியில் தலை தூக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் யுகம்தோறும் அவதரிக்கிறேன்.

* கண்மூடி மனதை அடக்குவது மட்டும் தியானமல்ல. மகிழ்வோடு இருத்தல், சாந்தமான போக்கு, மவுனம், மனதை அடக்கி ஆளுதல், உள்ளத்தூய்மை ஆகிய இவையெல்லாம் கூட தவம் தான்.

* மனம் தன் சஞ்சலத்தைக் காட்டும் போதெல்லாம், உடனுக்குடன் அடக்கி நம் வசப்படுத்திக் கொள்ள முற்பட வேண்டும்.

* விரும்பியதை அடைந்து வரம்பின்றி மகிழ்வதும் கூடாது. துன்பம் வரும் போது மனம் சிதையவும் கூடாது. மனஉறுதியுடன் தயக்கத்திற்கு இடம் கொடாமல் மெய்ப்பொருளை உணர்ந்து பிரம்மநிலையில் நிற்க வேண்டும்.

* மனதை ஒருமுகப்படுத்த முடியாதவனுக்கு அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் கிடையாது. ஆழ்ந்த சிந்தனையற்றவன் சாந்தியும், இன்பமும் பெறமுடியாது.

* மனதை அடக்கி இருந்தாலும், சில சமயங்களில் ஐம்பொறிகள் வழியாக ஆசைப்புயல் எழுந்து, மனிதனுடைய அடக்கசக்தியை வேரோடு பறிக்க முயல்வதுண்டு. அவன் தன்னுடைய மனதிடத்தை அந்த புயலுக்கு பறிகொடுத்துவிடாமல், என்னை உறுதியாக பற்றிக் கொள்வானாக.

* பட்டினி கிடக்கும் மனிதனிடம் பலவித இச்சைகளும் அடங்கிப் போகின்றன. ஆனால், அவற்றை அடைய வேண்டும் என்ற ஆசை மட்டும் அடங்குவதில்லை. கடவுளை நேரில் தரிசித்தாலன்றி அவற்றில் உள்ள ஆசை நீங்குவதில்லை.

* கோபத்தால் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது. நினைவு தடுமாறுகையில் குழப்பம் உண்டாகிறது. குழப்பத்தால் புத்தி கெடுகிறது.

* பொருட்களைப் பற்றி சிந்தித்தால் அவற்றின் மீது பற்று உண்டாகிறது. பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து அடங்கா மோகம் உண்டாகிறது. மோகத்தால் சிந்தை கெடுகிறது; நினைவு அழிகிறது. உயரிய லட்சியம் மறைந்து போகிறது. அப்போது மனிதனே அழிந்து விடுகிறான்.

* தானம் செய்வது நமது கடமை என்னும் உணர்வோடு, இடம், தகுதி, காலம் ஆகியவற்றையும் கவனித்து, திரும்பத்தர இயலாதவனுக்கு அளிக்கும் தானமே சாத்வீக தானம் எனப்படும்.

* மரியாதை இல்லாமலும், அலட்சிய புத்தியுடனும், தகாத இடத்திலும், தானம் பெறுவதற்கு தகுதியில்லாதவனுக்கும் தரப்படுவது தாமஸ தானம் ஆகும்.

* பசுவிடம் உள்ள பால், உண்மையில் அதன் சரீரம் முழுவதும் ரத்தத்தில் சத்தோடு சாரமாக கலந்து பரவி உள்ளது என்றாலும், மடியிலேயே சுரக்கிறது. அதுபோல் ஈஸ்வரன் உலகில் எங்கும் விரவியிருக்கிறான் எனினும், தியானத்தால் தான் நம் மனதில் எழுந்தருளுகிறான்.

Saturday, May 7, 2011

ராமானுஜர் ஜெயந்தி


வைணவம் வளர மிகவும் பாடுபட்டவர் ஸ்ரீராமானுஜர். அதில் அவருக்கு எவ்வளவோ சங்கடங்கள் ஏற்பட்டன. இருந்தாலும், அதையெல்லாம் எதிர்கொண்டு பல புரட்சிகளைச் செய்தார். ஆரம்ப காலத்தில் அவர் குருகுல வாசம் செய்யும்போதே அவருக்குப் பிரச்சினை ஏற்பட்டது. அவர் கஞ்சியை அடுத்த திருப்புட்குழியில் யாதவப் பிரகாசர் என்ற அத்வைதியிடம் வேதாந்தக் கருத்துக்களைக் கற்று வந்தார். அப்போதே அவருக்கும் யாதவப் பிரகாசருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. அதன் காரணமாக ராமானுஜரின் பெருமை வளர்ந்தது. அதைக் கண்டு ராமானுஜர்மேல் வெறுப்படைந்த யாதவப் பிரகாசர் ராமானுஜரை கொலை செய்யவும் துணிந்து திட்டமிட்டார். அந்த சதியிலிருந்து ராமானுஜரின் சிற்றன்னை மகனான கோவிந்த பட்டரால் ராமானுஜர் காப்பாற்றப்பட்டார். எம்பார் என்ற கோவிந்த பட்டரின் முயற்சியாலேயே நாம் ராமானுஜரின் அருளைப் பெறுகிற பேறைப் பெற்றோம். பிற்காலத்தில் யாதவப் பிரகாசரே இராமானுஜரைச் சரணடைந்து அவரின் சீடராக மாறினார். அதுபோல மற்றுமொரு அத்வைதியான யக்ஞமூர்த்தி என்பவர் ஸ்ரீரங்கத்தில் ராமானுஜரிடம் 18 நாட்கள் வாதிட்டார். ராமானுஜர் வாதில் தோற்றுவிடுவாரோ என்ற நிலை ஏற்பட்டது. 18-ஆம் நாள் இரவு, வாதில் தாம் தோற்று தம்மால் வைணவத்திற்குக் களங்கம் ஏற்பட்டு விடுமோ என்று மனங்கலங்கிய ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனைப் பிரார்த்தனை செய்து கொண்டே நித்திரையில் ஆழ்ந்தார். காஞ்சி வரதன் அவர் கனவில் தோன்றி, ஆளவந்தாரின் மாயாவாத கண்டனத்தை துணைகொண்டு யக்ஞமூர்த்தியிடம் வாதாடுக ! நீரே வெற்றி பெறுவீர்; கவலை வேண்டாம் என்று தெரிவித்தார்.

அடுத்த நாள் வாதாடச் சென்ற ராமானுஜரைப் பார்த்த யக்ஞமூர்த்தி, அவரின் தேஜஸைக் கண்டு ராமானுஜரின் காலடியில் விழுந்து, உமது பெருமை தெரியாமல் வாதாடிவிட்டேன். எனது வாதங்களைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் என் மேல் பரிவு கொண்டு உமது சீடராக ஏற்று அருள்புரிய வேண்டும் என்று வேண்டிட, அவரை சீடராக ஏற்ற ராமானுஜர் யக்ஞமூர்த்திக்கு, அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு தம்முடனே வைத்துக்கொண்டார். மேலும் வைணவ சித்தாந்தங்களை அவருக்கு உபதேசித்து, அவருக்கென்று ஒரு மடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்து, அவரை பலர் குருவாக ஏற்றுக்கொள்ள வழிவகுத்தார். இவரின் குரு பக்தியைப் பலரும் போற்றும்படி ராமானுஜரின் ஆணைப்படி நடந்து வந்தார். அதற்கேற்றாற்போல் ஒரு சம்பவமும் நடந்தது. ராமானுஜர் மடமும் யக்ஞமூர்த்தியின் மடமும் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் இருந்தது. இரண்டுமே ராமானுஜர் மடம் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. ஒருசமயம் ஸ்ரீரங்கத்திற்கு வந்த யாத்ரிகர்கள், ராமானுஜர் மடம் எங்கேயுள்ளது? என்று விசாரிக்க, வழி சொன்னவர்கள், இங்கு ராமானுஜர் மடங்கள் இரண்டு உள்ளன. எங்கு செல்ல வேண்டும்? என்று கேட்க, அவர்கள் விஷயங்களைத் தெரிந்துகொண்டு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (யக்ஞமூர்த்தி) மடத்திற்குச் சென்றனர். இந்த விவரத்தை அறிந்த அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திகைப்படைந்து , பகவத் ராமானுஜருக்கு ஒப்பாக இருக்க எனக்குத் தகுதியில்லை. எனவே எனக்கென்று தனி மடம் வேண்டாம். நானும் பகவத் ராமானுஜரின் மடத்திலேயே தங்கி அவருக்கே சேவை செய்ய விரும்புகிறேன் என்று சொல்லி, தமது மடத்தை இடித்துத் தள்ளிவிட்டு ராமானுஜர் மடத்திற்கே வந்துவிட்டார். இவரின் ஞானசாரம், பிரமேய சாரம் என்ற படைப்புகள் வைணவ உலகில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

ராமானுஜருக்கு உபதேசம்: திருக்கோஷ்டியூரில் வசித்த திருக்கச்சி நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் வந்தார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, யார்? என்று கேட்க, நான் ராமானுஜன் வந்திருக்கிறேன், என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, நான் செத்து வா! என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் அடியேன் வந்திருக்கிறேன் என்றார். அவரை அழைத்த நம்பி, ஓம் நமோநாராயணாய என்ற மந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார்.ஆனால், ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார். கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார். மகிழ்ந்த நம்பி நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார் என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார்.ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே நம்பியின் வீடு இருக்கிறது. இந்த வீடு கல்திருமாளிகை என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.

ஆதிசங்கரர் அவதாரம்!


கருணையே மிகச்சிறந்த அஸ்திரம் என்கிறார் ஆதிசங்கரர். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இந்து மதத்துக்கு புத்தெழுச்சி யூட்டி, அனைத்து மக்களும் நலம்பெற பல ஆன்மிக வழிகளைக் கூறியவர் ஆதிசங்கரர். பூவுலக மக்களுக்கு ஞானத்தை உணர்த்தவும், தர்மத்தை வலியுறுத்தவும், யக்ஞங்கள் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள் பக்தி ஒன்றினாலேயே உயர்வதற்கும் எண்ணற்ற பாடல்களை அருளிச் செய்தார் அன்பே உருவான சங்கரர். ஆதிசங்கரருக்கு பகவத் பாதர் என்ற திருநாமமும் உண்டு. கேரள மாநிலம் எர்ணாகுளம் காலடி என்ற கிராமத்தில் சிவகுரு - ஆர்யாம்பாள் என்ற தம்பதியருக்கு திருச்சூர் வடக்கு நாதர் அருளால் அவதரித்தவர் சங்கரர். சங்கரரின் உபநயனத்திற்கு முன்பே தந்தை சிவகுரு இறைவனடி சேர்ந்தார். பெற்றோர் செய்ய வேண்டிய உபநயனம் உறவினர்களால் செய்யப்பட்டது. ஆதிசங்கரர் குருகுலம் சென்று படிக்கும்போது, அன்றாடம் உஞ்சவிருத்தி செய்து (பிஜை) உணவு கொண்டு வருவார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த அவர், தன் விரதத்தை முடிக்க அயாசகன் என்பவர் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷõம் தேஹி என அழைத்தார்.

அயாசகனின் மனைவி, தானம் கொடுக்க எதுவும் இல்லாததால், தன்னிடமிருந்த ஒரு காய்ந்த நெல்லிக்கனியை பிøக்ஷ இட்டாள். இந்தக் கருணைச் செயல், சங்கரரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. அக்குடும்பத்தின் வறுமை நீங்க, லட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். 19வது ஸ்லோகம் சொன்னவுடன், அந்த ஏழை பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது. இது சங்கரர் செய்த அற்புதம். அறத்தை நிலை நிறுத்தவே சங்கரரின் அவதாரம் என்றாலும், அன்பின் சக்தியால் நிகழ்த்திய ஆச்சரியம் இது ! அற்புதங்களை விட அன்பே முக்கியம். சங்கரர் இயற்றிய முதல் கிரந்தம் கனகதாரா ஸ்தோத்திரம் தான். எட்டு வயது பாலகனான சங்கரர் அன்னை ஆர்யாம்பாளிடமிருந்து சந்நியாசம் பெறுவதற்கு சூர்ணா நதிக்கரையில் பட்டபாடு- அன்னையின் அன்புப் பிடியிலிருந்து அவிழ்த்துக் கொள்ள தவித்த தவிப்பு- படிக்கும்போதே கல்லும் கரையும். அன்புமயமான சங்கரர் அன்னையிடம், தாயே, கல்யாணம், குடும்பம், குழந்தை என்று நான் ஆகிவிட்டால் இந்த உலகத்திற்காக யார் கவலைப்படுவது? என்று தாயிடம் கேட்கும்போது, அகிலத்திற்கே அன்பைப் பொழிய வேண்டும் என்ற கருணாமூர்த்தியாக திகழ்கிறார். அந்திம காலத்தின் போது வந்து உங்கள் ஈமக்கிரியைகளைச் செய்வேன் என்று தாயிடம் வாக்களித்துச் செல்லும்போது- அன்புமிக்க ஒரு மகனாக விளங்குகிறார்.

நர்மதை நதிக்கரையில் குரு கோவிந்த பகவத்பாதரைக் கண்டவுடன் குருவையும் கோவிந்தனையும் இணைத்து பஜகோவிந்தம் என்ற துதியைப்பாடி, நமக்கெல்லாம கோவிந்தனின் அருளைப் பெறும்படி செய்த அன்பை எப்படிச் சொல்வது ! காசிமா நகரத்தில், சநந்தனர் என்ற சீடனை மற்ற சீடர்கள் தவறாக நினைக்க, அவர்களுக்கு சநந்தனரின் குரு பக்தியை விளக்க கங்கை நதியில் தாமரையை மலரச் செய்து உணர்த்திய அன்பு- சநந்தனரை பத்மபாதராக்கிய பிரிவு... கங்கா நதி தீரத்தில் சண்டாளனாக வந்த பரமேஸ்வரனைக் குறித்து மனீஷா பஞ்சகம் என்ற அற்புதமான பாடலைப் பாடி நம்முடைய மன மாசுகளை எல்லாம் மாற்றிய மனித நேயம்... பிரயாகையில், மீமாஸ்சக கொள்கையில் இருந்த குமரிலபட்டருக்கு அத்வைதத்தை உபதேசித்து ஆட்கொண்ட அன்பிற்கு ஈடு இணையே இல்லை. மீமாஸ்சகர்களின் முதல் எதிரி கர்மாக்களை எல்லாம் நீத்த துறவிகள்தான். நர்மதை நதிக்கரையில் உள்ள மாகீஷ்மதி நகரிலுள்ள தீவிர மீமாஸ்சகரான மண்டன மிஸ்ரரை வாதத்தில் வென்று, அவருக்கு சுரேஸ்வரர் என்ற தீக்ஷõநாமம் சூட்டி அன்பு சீடராக்கிக் கொண்டார். மண்டன மிஸ்ரரின் மனைவியான சரஸவாணியின் சிக்கலான கேள்விகளுக்கு அழகாக விடை சொல்லி, சரஸவாணியை சாரதாம்பிகையாக சிருங்கேரியில் ஸ்தாபித்து வழிபாடு செய்தார்.

ஸ்ரீசைல ÷க்ஷத்ரத்தில் கோயில்கொண்டுள்ள மல்லிகார்ஜுனரைக் கண்ட மாத்திரத்தில் அன்பு பொங்க- பக்தி வெள்ளம் கரை புரண்டோட நூறு பாடல்களைப் பாடி மகிழ்ந்தார். மனம் மகேஸ்வரனின் திருவடிகளை நாடி அங்கேயே நிலை பெற்று விடுவதே பக்தி என்று நமக்கெல்லாம் அன்பில் செய்த உபதேசமே அது ! தன்னை வெட்ட வந்த காபாலிகனிடமும், அன்புடனே உரையாற்றிய அற்புதத்தையும் காண்கிறோம். அறிவினால் மட்டுமே மக்களின் சமய உணர்ச்சிகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்று உணர்ச்சிகளில் பிறப்பிடமாகிய இதயத்தில் பக்தியையும் அன்பையும் ஊன்றினார். அவர் தனது அதிநுட்பமான அறிவினால் மட்டுமே இதர மதங்களை எல்லாம் வென்று விட்டதாகச் சொல்ல முடியாது. அவர் எந்த தத்துவங்களையெல்லாம் போதித்தாரோ அத்தனைக்கும் அவரே நடமாடும் சான்றாக இருந்தார். உலகிலுள்ள சகல ஜீவராசிகளையும் தம்மில் கண்டு, தம்மை சகல ஜீவராசிகளிடமும் கண்டு பேரன்பின் உருவமாகவே திகழ்ந்தார். பயங்கரமான வழிபாடுகளையும், இந்திரிய வேகத்தையும் மக்கள் மனதிலிருந்து அகற்றி, அன்புருவான ஆண்டவனை அன்பாலே போற்றி, அனைவருடனும் அன்பு பூணும் பாங்கினை உணர்த்தி, ஈசன், அம்பிகை, நாராயணன், விநாயகர், முருகன், ஆதித்யன் மீதான ஆறுவித சாத்வீக ஷண்மத வழிபாட்டு முறைகளை வகுத்தார்.

தொழு நோயால் பீடிக்கப்பட்டு உயிரைவிட எண்ணிய வாலிபன் ஒருவனை அன்பின் மிகுதியால் அவனுடைய நோயைத் தீர்த்து சீடனாக்கிக் கொண்ட கருணையை என்ன சொல்வது? சௌசாம்பிகா நகரில் தங்களது ஒரே புதல்வனை இழந்து அவன் சடலத்தின்மீது விழுந்து இதயம் பிளக்க கதறிய பெற்றோர்களைக் கண்டு பரிதவித்த வள்ளலல்லவா சங்கரர் ! கருணை காட்ட வேண்டும் என்று ஈசனிடம் துதித்து அவனை மீட்டுக் கொடுத்த அற்புதத்தை என்னென்பது ! ஸ்ரீ வலி ÷க்ஷத்ரத்தில் ஊமைப் பிள்ளையை அழைத்து வந்து தன்னைச் சரணடைந்த பெற்றோர் மகிழ, அத்வைதம் பேச அருள்புரிந்த கருணை வள்ளலல்லவா சங்கரர் ! அவனைத் தன் சீடனாக்கிக் கொண்டு ஹஸ்தா மலகர் என்று பெயரிட்டு மகிழ்ந்த அன்பை வர்ணிக்க முடியாது. சிருங்கேரியில் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த சமயம், அறிவு குறைந்த ஆனந்த கிரி என்ற சீடனை மற்ற சீடர்கள் அலட்சியப்படுத்தியதைக் கண்டு, ஆனந்த கிரியை அறிவுக்களஞ்சியமாக்கி அனுக்ரஹம் செய்து , கடல் மடை திறந்தாற் போன்று தோடகாஷ்டகம் பாட வைத்த அன்பு சிலிர்க்க வைக்கிறது. கிரியை தோடகாச்சார்யார் என்ற தீக்ஷõ நாமம் சூட்டி மகிழ்ந்தார். சங்கரர்.

அனைத்தையும் துறந்த அற்புதத் துறவி அன்பின் உருவமாகவே இருந்தார். அந்திமக் காலத்தில் வருவதாக அன்னைக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது. அன்னை ஆர்யாம்பாளின் ஆயுள் முடியும் தருணத்தை ஞான திருஷ்டியினால் அறிந்த சங்கரர் காலடி சென்று தாயின் அருகில் அமர்ந்து அன்னையை மடியில் கிடத்திக்கொண்டு, மாத்ருகா பஞ்சகம் பாடினார். தாயின் வயிற்றில் பிள்ளை கருவாகி, பிறந்து வளரும் எல்லா நிலைகளிலும் தாயின் ஒவ்வொரு தியாகத்தையும், அனுபவித்த ஒவ்வொரு இன்னல்களையும் சொல்லிப் பாடுகிறார். அன்பின் மொழியிலேயே பாடுகிறார். ஒவ்வொரு தாயின் வயிற்றில் பிறந்த மகனும் ஆச்சார்யாளின் அடி பற்றி, அன்னைக்கு அன்பைக் கொடுத்து அருளையும் ஆசியையும் பெற வேண்டும். உலகத்திற்கே குருவாக இருந்தாலும் தாய்க்கு மகன்தானே ! தாய் அன்பிற்கு இணையே இல்லை. வயிற்றில் சுமந்த தெய்வத்தைத் தன் தோளில் சுமந்து ஈமச் சடங்குகளை செய்தார் சங்கரர் ! திசங்கரர் அகிலம் எங்கும் அத்வைதத்தை நிலை நாட்டினார். ஆறு சமய வழிபாடுகளையும் நம் போன்றவர்களுக்காவே செய்தார். ஆலயங்களுக்குச் சென்று ஆண்டவனைப் பாமாலைகளால் அர்ச்சித்தார். அறிவால் சிலரையும், அன்பினால் பலரையும் ஆட்கொண்டார். அம்பிகையின் சௌந்தர்யத்தை அழகின் அலைகளாகப் பாடி ஆனந்தம் அடைந்தார். அனைத்து தெய்வங்கள்மீதும் பேதம் இல்லாமல் பாடி அருளினார். அத்தனை உபநிஷதங்களுக்கும் உரை எழுதினார். வருங்கால மக்கள்மீது உள்ள அன்பினால் பக்தி, கர்மம், ஞானம் என்ற எல்லா மார்க்கங்களையும் உணர்த்தினார். ஞான சிம்மமாக, அன்பின் வடிவமாக அருள் அரசு செலுத்தினார் ஸ்ரீ ஆதிசங்கரர். எல்லா மதங்களும் அன்பை ஏற்றுக் கொள்ளும். அன்பிற்கு அழிவே இல்லை. ரக்தாக்ஷி ஆண்டு வைகாசி மாதம் சுக்கில பட்ச ஏகாதசி அன்று அன்பே உருவான ஆதிசங்கரர் இறைவனோடு ஐக்கியமானார் !

Monday, April 11, 2011

சித்ரா பவுர்ணமி


சித்ரபுத்திரன்: இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார்.

சித்ரா பவுர்ணமி: இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.

பூஜை: சித்ரா பவுர்ணமியன்று செய்யப்படும் விரிவான பூஜையைப் பற்றி பல நூல்கள் தெரிவித்திருந்தாலும், நாம் எளிமையாக ஒரு கலசம் அல்லது விக்ரகத்தின் தேவதையை ஆவாஹனம் செய்து

சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

என்ற சித்ரகுப்தனின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். மேலும் இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை நீக்கி நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

பூஜையின் பலன்: சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று (நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.

கோயில்: இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது. இதே போல் தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டியிலும் ஒரு கோயில் உள்ளது. எமன் தென்திசைக்கு அதிபதி என்பதால் சித்ரா பவுர்ணமி அன்று போடப்படும் கோலங்கள் தென்புற வாசலை அடைப்பது போல் கோலம் போடும் வழக்கம் இன்றும் உள்ளது. சித்ரா பவுர்ணமி மற்ற பவுர்ணமியைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது. இறைவன் புரிந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல் இந்திரன் பழி தீர்த்த படலம் என்பது தான். இந்த திருவிளையாடல் நடந்தது சித்ரா பவுர்ணமி தினத்தன்று தான். இத்தினத்தில் தான் இந்திரன் தன் பாவம் போக்க கடம்பவனத்தை அடைந்து அங்கிருந்த சுயம்பு மூர்த்திக்கு இந்திரவிமானம் அமைத்து வழிபட்டு தன் பாவத்தை போக்கிக் கொண்டான். இன்றும் கூட சித்ராபவுர்ணமி இரவில் தேவேந்திரனே வந்து மதுரை சுந்தரேஸ்வரருக்கு பூஜை செய்வதாக ஐதீகம். அத்துடன் சித்ரா பவுர்ணமி தினத்தில் தான் மதுரையில் சித்திரை திருவிழா நடக்கிறது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளும் இந்த விழா நாயகனான கள்ளழகர் இத்தினத்தில் தான் சிவன் உருவாக்கிய வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.