Wednesday, December 15, 2010

சுந்தரகாண்டம் பகுதி-3வாங்கிய அடி வலித்தாலும், அனுமான் அதை பொருட்படுத்தாமல், பின்னால் திரும்பிப் பார்த்தான். அங்கே ஒரு பெண் பூதம் நின்று கொண்டிருந்தது. இவள் யாராக இருக்கும். ராவணனின் நாட்டில் பெண்கள் கூட காவல் புரிகிறார்களா? என்று சிந்தித்து நிற்கும் வேளையில், ஏ குரங்கே! நீ எப்படி மதில் ஏறிக்குதித்து உள்ளே வந்தாய். வெளியே கட்டுக்கடங்கா காவல் இருந்தும் எங்கோ ஒளிந்து உன் குரங்கு புத்தியைக் காட்டி உள்ளே வந்து விட்டாயோ! உன்னை தூக்கி வெளியே வீசுவதற்குள் நீயாகவே ஓடிவிடு, என எச்சரித்தாள். அனுமான் அவள் பேச்சை பொருட்படுத்தவில்லை. நீ பெண் என்பதால் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். உன்னால் என்னை எதுவும் செய்ய இயலாது. முக்கியப் பணியாக வந்திருக்கும் என்னைத் தடுக்காதே, என்ற அனுமானுக்கு இன்னொரு அறை விழுந்தது. அனுமானுக்கு ஆத்திரம் எல்லை மீறி விட்டது. நீ யார்? அதை முதலில் சொல், என்றதும், அவள் பதிலளித்தாள். வானரமே! நான் லங்காதேவி. இத்தீவை பாதுகாக்கும் தேவதை. உன்னைப் பார்த்தால் இவ்வூருக்கு கேடு செய்ய வந்தவன் போல் தோன்றுகிறது. ஓடிவிடு, என்றதும், நிலைமையை உணர்ந்த அனுமான், லங்காதேவிக்கு ஒரு குத்து விட்டான். லங்காதேவி கலங்கி விட்டாள். ஒரே அடியில் சுருண்டும் விட்டாள்.

பெண்ணை அடித்தது பெரும்பாவம் என்ற அனுமான் அவளைத் தூக்கி விட்டான். அவள் இப்போது சவுந்தர்ய ரூபிணியாக விளங்கினாள். அனுமானின் பாதங்களில் விழுந்தாள். ஐயரீர்! தங்கள் அனுக்கிரகத்தால் நான் சுயஉரு பெற்றேன். முன்னொரு காலத்தில் பிரம்மா இந்தத்தீவைக் காக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். இங்கு திருமகளின் அம்சமான ஒரு பெண்ணை ராவணன் கடத்தி வருவான் என்றும், அவளைக் காப்பாற்ற கிருஷ்ணபரமாத்மா ராமனாக அவதாரம் எடுத்து வருவார் என்றும், அவரது தூதராக வரும் வானரம் ஒன்றால் நான் தாக்கப்படுவேன் என்றும், அன்றுடன் இந்தத் தீவைக் காக்கும் பொறுப்பு முடிந்து விடும் என்றும், அத்துடன் இந்தத்தீவு அழிந்து விடும் என்றும் பிரம்மன் என்னிடம் சொல்லி இருந்தார். தங்களிடம் அடிபட்ட நான், மீண்டும் விண்ணுலகம் செல்கிறேன். நீங்கள் எண்ணி வந்த காரியம் இனிதே நடக்கும். ராவணனின் அழிவுகாலம் நெருங்கி விட்டது. அரக்கர்கள் ராஜ்யம் அழியும், என்றாள். அனுமான் அவளை மகிழ்வுடன் வாழ்த்தி விடை கொடுத்தான். ஊருக்குள் நுழைந்தான். ஒரு பூனை அளவுக்கு தன் உடலை சுருக்கிக் கொண்டான். மரங்களில் ஏறி தாவிச் சென்றான். அங்கிருந்த அரண்மனைக்குள் நுழைந்தான். ஒரு அறையில் அரக்கன் ஒருவன், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். பஞ்சணையில் படுத்திருந்த அவன் ஆஜானுபாகுவாக இருந்தான். அவனைச் சுற்றிலும் தேவமாதர்கள் போன்ற பெண்கள் சாமரம் வீசிக் கொண்டிருந்தனர். இவன் தான் ராவணனோ, இவனை இப்படியே கொன்றுவிட்டால் என்ன, என எண்ணியவன் நன்றாக உற்றுப்பார்த்தான். ராவணனுக்கு பத்து தலைகள் இருக்குமே! இவனுக்கு ஒரு தலை தானே இருக்கிறது...அப்படியானால் இவன் கும்பகர்ணனாக இருக்க வேண்டும்...இவன் இப்போது நிம்மதியாகத் தூங்குகிறான். இவன் தூக்கத்தை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி நிரந்தரமாக்கி விடுவார், என்று மனதிற்குள் கறுவியவன், அடுத்த அரண்மனைக்குள் புகுந்தான். அங்கே அமைதியே வடிவாக ஒருவன் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் வீபிஷணன். பார்ப்பதற்கே நல்லவனாக இருந்தான். அவனைச் சுற்றி பெண்கள் யாரும் இல்லை என்பதே அவனது ஒழுக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. கெட்டவர்களையே வரிசையாக சந்தித்து விட்டு, ஒரு நல்ல முகத்தை பார்த்ததும், அனுமானுக்கு ஏதோ புதுசக்தி பிறந்தது போல இருந்தது. இரண்டு அரண்மனைக்குள் புகுந்து அங்குலம் அங்குலமாகத் தேடியும், சீதாதேவியைக் காணவில்லையே என்ற ஆதங்கம், பயம், ஆத்திரம் எல்லாமுமாக சேர்ந்து அவனை வாட்டிய நேரத்தில், வீபிஷணனைக் கண்டது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. மனதில் அமைதி பிறந்தது. ஆத்திரத்தில் மனிதன் சிந்திக்கும் தன்மையை இழந்து விடுகிறான். அமைதியாக இருக்கும் போது ஆக்கப்பூர்வமாக சிந்திக்கிறான். அனுமானுக்கு இப்போது புதிய சிந்தனைகள் தோன்றின.

அடுத்து அனுமான் யாரும் நுழைய முடியாத ராவணேஸ்வரன் ரண்மனைக்குள்ளேயே நுழைந்து விட்டான். அங்கிருந்த அறையில் ஒரு படுக்கையில், அப்சரஸ் போல ஒரு பெண் படுத்திருந்தாள். ஆழ்ந்த நித்திரையில் இருந்தாலும், அவளது வாய் புலம்பிக் கொண்டிருந்தது. அவரை ஒன்றும் செய்யாதீர்கள். ஐயோ! யார் அங்கே! இலங்கைக்கு யாரோ தீ வைக்கிறார்கள்...மகனே அட்சகுமாரா! உன்னைக் காப்பாற்றிக் கொள்...என் பிராணநாதரரே! சீதையை விட்டு விடுங்கள், என்று புலம்பவும், ஓ...இவள் மண்டோதரி... ராவணனின் தர்மபத்தினி....இவளது புலம்பலே நாட்டின் நிலை என்னவென்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டி விட்டது, என்று மனதிற்குள் சந்தோஷப்பட்ட அனுமான், அந்த மாதரசி மீது தன் மூச்சுக்காற்று கூட பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து அங்கிருந்து அகன்றான். இங்கு தான் அன்னை தங்கியிருக்க வேண்டும். ராவணன் இங்கு தான் மறைத்து வைத்திருப்பான். எதற்கும் ராவணனின் அறையைப் பார்ப்போம், என சிந்தித்தவன் அவனது அறையைத் தேடி அலைந்தான். பலமணி நேரம் தேடி ஒதுக்குப்புறமாக இருந்த ராவணனின் அந்தப்புரத்தை அடைந்தான். மனைவி தனியறையில் துயில, இங்கே ராவணன் நூற்றுக்கும் மேற்பட்ட கன்னியர்கள் புடைசூழ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.

சீதாதேவி ஒருவேளை இங்கு இருப்பார்களோ... என்றவன், தன் மனநிலையை உடனடியாக மாற்றிக் கொண்டு, சே...இந்த மனது ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறது...அன்னையின் நிழல் கூட இங்கிருக்காதே! இந்த கிராதகனிடம் சிக்கி, அவனது சயன அறையில் இருப்பதை விட, இதற்குள் அன்னை உயிர் விட்டிருப்பார்களே... என்றவாறு அனுமான் ராவணனின் முகத்தை நோக்கினான். அவனுக்குள் மீண்டும் ஆத்திரம் பொங்கியது. இந்தக் கொடூரன் தானே அன்னையைக் கொண்டு வந்தவன். இவனை இப்படியே அழித்து விட்டால் என்ன..., என வீறுகொண்டு எழுந்தவன், அப்படியே ஆத்திரத்தை அடக்கிக் கொண்டான். அங்கு சீதை இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான். சீதாதேவியை எங்கு தேடியும் கிடைக்காததால், அவள் உயிருடன் இல்லை என்பதே அனுமானின் இறுதி முடிவாக இருந்தது.அன்னையைப் பற்றிய தகவல் இல்லாமல், ஸ்ரீராமன் முன் செல்வதை விட இறப்பதே மேல் எனத் தோன்றிற்று. அதோ... அசோக மரங்கள் சூழ்ந்த ஒரு வனம் தெரிகிறது.அங்கு மட்டும் தான் தேட வேண்டியது பாக்கி. அங்கு சீதா இல்லாவிட்டால் இலங்கையை அழித்து விட்டு, நாமும் இறந்து விடுவோம், என்று முடிவு செய்தான். பள்ளிக்கூட மாணவன் தேர்வு முடிவை பார்க்கும் போது, எண்ணைக் காணாமல், விடுபட்ட எண்ணில் தன் எண் இருக்காதா என பரபரப்புடன் தேடுவானே....அதே மனநிலையில் அனுமான் இருந்தான். அசோகவனத்திற்குள் நுழைந்தான். அங்கே.... கோடி நட்சத்திரங்கள் கொட்டியது போல முகத்தில் ஒளிபொங்க வீற்றிருக்கும் அந்தப்பெண்மணி...அவர் யார்?. அனுமான் அருகில் சென்றான்.

No comments:

Post a Comment