Skip to main content

சுந்தரகாண்டம் பகுதி-4


மரத்தின் கீழிருந்த அவள் இளைத்து காணப்பட்டாள். ஆனால் முகத்தில் இயற்கையாகவே உள்ள பிரகாசம் குறையவில்லை. அவளது பெருமூச்சின் வெளிப்பாடு, எந்த அளவுக்கு அவள் நொந்து போயிருக்கிறாள் என்தை உணர்த்தியது. இலங்கைக்கு வந்த பிறகு அவள் உறங்கவே இல்லை என்பதை அவளது கண்கள் உணர்த்தின. அந்தக் கண்களில் இருந்து கண்ணீர் செந்நீராக வழிந்து கொண்டிருந்தது. வெறித்த பார்வையுடன் அவள் அமர்ந்திருந்தாள். இமை மூடாத இந்தக் கண்கள் இலங்கையை உற்று நோக்கிக் கொண்டிருப்பதால் தானே இலங்கை இந்த அளவு செல்வாக்கோடு திகழ்கிறது என்பதை யாராவது அறிவார்களா? அவளது உடலில் ஒரு மஞ்சள் ஆடை மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது. அலங்காரம் கலைந்த சிலையாக, கற்பூர புகை படிந்த சிற்பம் போல் கவலையுடன் இருந்த அவள், நிச்சயமாய் சீதையாகத் தான் இருக்க வேண்டும். ராமன் சொல்லிய அடையாளங்கள் சிலவும் இந்தப் பெண்மணிக்கு பொருந்துகின்றன. இவள் அரக்கிகளால் துன்புறுத்தப்பட்டிருக்கிறாள். கெட்ட எண்ணம் கொண்ட ராவணனுடன் உறவு கொள்ளும்படி தூண்டப்பட்டிருக்கிறாள். கொடுமைக்கு ஆளாகி இருக்கிறாள். வேங்கைகளின் மத்தியில் சிக்கிய வெள்ளாடு போல அவள் கண்களில் மிரட்சி தெரிகிறது. வாழ்வில் விரக்தி ஏற்பட்டு, இனியும் உயிர் வாழ விரும்பாத நிலை அவள் உணர்வுகளில் தெரிகிறது. ராமபிரானுக்கென்றே படைக்கப்பட்ட அவள், ஒரு காமுகனின் கோட்டைக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறாள். வண்ண வண்ண ஆடைகள் புனைந்த வனப்பு மிகு தோழியரும், தாதியரும் சூழ்ந்திருக்க, கண்ணசைத்தால் ஓடிவந்து நிற்கும் ஏவலர்கள் பாதுகாக்க, வைரமும், முத்தும், மரகதமும் சேர்ந்த நகைகள் பரிணமிக்க, ஒய்யாரமாய் நடை பயின்ற அந்த அரண்மனைக்கிளி, இங்கே கூண்டுக்கிளியாய் அடைபட்டு கிடப்பதை அனுமான் பார்த்தான்.

சந்தேகமே இல்லை. இவள் சீதாதேவி தான். இதை உறுதிப்படுத்துவது எப்படி? என அவன் ஆராய்ந்தான். இந்த நேரத்தில் அரக்கிகளின் கண்ணில் பட்டால் அவர்கள் சீதாதேவியை வேறு இடத்திற்கு மாற்றி விடுவார்கள். எனவே அமைதியாக காரியம் சாதிப்போம், என்று எண்ணியவன் மறைந்து, மறைந்து அவள் அமர்ந்திருந்த அசோக மரத்திற்கு வந்தான். உடலை மிகவும் நல்ல கிளையாக தேர்வு செய்து அமர்ந்தான். அரக்கிகள் சிலர் அங்கே வந்தனர்.ஏய் சீதா! உன் மனதில் என்னடி நினைப்பு? உன் ராமன், எங்கள் ராவணேஸ்வரனை விட எந்த வகையில் உயர்ந்தவன்? அவன் நாடிழந்து, பஞ்சையாய், பராரியாய் திரிகிறான். எங்கள் சூர்ப்பனகையின் மூக்கறுத்து அவமானப்படுத்தினானே உன் மைத்துனன்! அவனை பழிக்குப்பழி வாங்காமல் நாங்கள் விட மாட்டோம். உன் கணவனை நாங்கள் அழிப்பது உறுதி. ராவணேஸ்வரர் உன் கணவனை விட பக்தியில் குறைந்தவரா? சிவபெருமானின் ஈடிணையற்ற பக்தர் அவர். பத்து தலைகள் கொண்டு உலகின் எப்பகுதியையும் பார்க்கும் சக்தி கொண்டவர். அவரது தேஜஸ் கண்டு மயங்காத மனங்களே இல்லை. தேவலோகப் பெண்கள் எல்லாம் அவருக்கு சேவகம் செய்கிறார்கள். ஆனால் சாதாரணப் பெண்ணான நீ, அவரைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய். நீ அவரோடு சேர்ந்து விட்டால், நீயே லங்காதேசத்தின் ராணியாவாய், என்று மிரட்டலும், ஆசை வார்த்தைகளுமாய் விடுத்தனர். மேலே இருந்த அனுமானுக்கு அவர்களது சம்பாஷணை கேட்கவில்லை. கேட்டிருந்தால், அவன் உணர்ச்சி வசப்பட்டு அவர்களைக் கொன்று குவித்திருப்பான். அந்த இடமே ரணகளம் ஆகியிருக்கும். அநியாயம் கண்டு பொங்குபவன் அல்லவா அனுமான்? அதனால் தானே அவன் நமது ஊர்களில் உள்ள கோயில்களில் குடி கொண்டுள்ளான்! நமது உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றிருக்கிறான்! அந்தப் பெண்ணை அவர்கள் கொடுமையான வார்த்தைகளால் பேசியது மட்டும் அவனுக்கு தெளிவாகப் புலனானது. அவள் சீதாவாகத்தான் இருக்க வேண்டும் என்பது உறுதிப்பட்டது. சற்றுநேரத்தில் அந்த அரக்கிக் கூட்டம் போய் விட்டது. அவர்கள் போனதும் அந்த மாதரசி குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

எத்தனை நாள் தான் இந்த அவஸ்தையைப் பொறுப்பது. நீங்கள் எப்போது வருவீர்கள்? நான் ஒருவேளை இறந்து விட்டதாக நினைத்து நீங்கள் உங்கள் நாட்டுக்கே திரும்பிப் போய் விட்டீர்களோ? நீங்கள் இனியும் வராவிட்டால் நான் அழுதே இறந்து விடுவேன். நான் இறந்து விட்டால், என் கற்பின் உண்மை உங்களுக்குப் புரியாமல் போய் விடுமே, என மனதிற்குள் எண்ணியவளாய் சீதா அழுது கொண்டிருந்தாள். ஆபத்தில் சிக்கியவர்க்கு அருமருந்தாய் விளங்கும் ஆஞ்சநேயன், தனக்கு மேல் அமர்ந்திருப்பதை அவள் அறியவில்லை. நல்ல நேரம் கொட்டுமேளம் கொட்டி முழக்கிக் கொண்டு வருவதை அவள் உணரவில்லை. கெட்டது வேகமாக வரும். ஆனால் நல்லது மெதுவாகத்தானே வரும்!. சொர்க்கவாசலின் கதவு அனுமன் ரூபத்தில் அங்கே திறக்கப்பட இருக்கிறது என்பதை அவள் இன்னும் சிறிது நேரத்தில் உணரப் போகிறாள்.நடுநிசி நெருங்கி விட்டது. காவல் நின்ற அரக்கிகளை அனுமான் நோட்டம் விட்டான். ஒருத்திக்கு பயங்கர முகம்; இன்னொருத்திக்கு ஒரு காது இல்லை. ஒருத்தியின் காது யானைக்காது போல இருந்தது. அதைக் கொண்டு முகத்தை அடிக்கடி மறைத்துக் கொண்டாள். ஒருத்தியின் காது ஊசி போல இருந்தது. ஒருத்தியின் வயிறு பெரிய பானை போல இருந்தது. அவள் கீழே குனிந்தால் கால்களே தெரியாது. ஒருத்தி நெடுநெடுவென வளர்ந்திருந்தாள்.இன்னொருத்தி கூனிக்குறுகி இருந்தாள்.இதையெல்லாம் படிக்கும் போது நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் ராவணன் காரணத்தோடு இவர்களை நிறுத்தி இருந்தான். குள்ளமாக இருப்பவள் எந்த ரூபத்தில் பகைவர் வந்தாலும், கவனிக்க கூடியவள். நெட்டையாக வளர்ந்திருப்பவள் சற்று எம்பிப் பார்த்தாலும், யாராவது வருகிறார்களா என கவனித்து விடுவாள். நீண்ட காதுகளைக் கொண்டவள் எப்பேர்ப்பட்ட மெல்லிய ஒலியையும் உணர்ந்து கொள்வாள். இவ்வளவு பேரையும் கடந்து, சீதையை காண்பது என்பது கடினத்திலும் கடினம். மிகச்சிறிய வடிவில் இருந்தாலும், அனுமான் இவர்கள் முன்னால் போய் நின்றால் விடுவார்களா? கொட்டாவி விட்டாலே போதும். அனுமான் வாய்க்குள் போய் விடுவான். இவர்களின் கட்டுக்காவலை உடைக்கும் வியூகம் எப்படி என அனுமான் யோசிக்க ஆரம்பித்தான்.

Comments

  1. Hi, am looking for complete series of this sundharakaandam. Do you have it saved some where?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத ...

Amazing Oranges~~simply superb

ஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்

ஆண்டாள் அருளியது பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும். விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். ...