யாரை வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம்... தப்பு செய்துவிட்டு சக்தி தேவியிடம் ஓடினால் தாய் பாசத்தோடு அணைத்துக் கொள்வாள். சிவன் தலையில் இரண்டு குட்டி குட்டி சேர்த்துக் கொள்வார். மாயக்கண்ணன், ஏதாவது கள்ளத்தனம் செய்து சிறிதளவு சோதிப்பதோடு நிறுத்திக் கொள்வான். ஆனால், இந்த சனீஸ்வரன் இருக்கிறாரே... கடவுளாக இருந்தாலும் கூட தன் வேலையைக் காட்டிவிடுவார். ஏனென்றால், அவன் சிவனுக்குரிய ஈஸ்வரப்பட்டத்தைப் பெற்றவன். சிவன் வகுத்த சட்ட திட்டங்களை பக்தர்கள் சரிவர நிறைவேற்றுகிறார்களா என்று சோதிப்பவன். ஒருமுறை சிவபார்வதியின் நடன நிகழ்ச்சி கைலாயத்தில் நடக்க இருந்தது. இதற்காக பிரமாண்ட அரங்கத்தை நிர்மாணித்தாள் பார்வதிதேவி, நடன நேரமும் குறிக்கப்பட்டது. சிவன் பார்வதியிடம், தேவி! நீ குறித்துள்ள நேரம் சனீஸ்வரனின் பார்வை நம் அரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இடத்தில் படும் நேரம். அந்நேரத்தில் நடனம் துவங்கினால் அரங்கம் எரிந்து விடும். எனவே, வேறுநேரம் குறிப்போமே! என்றார். பார்வதி கலகலவென நகைத்தாள். லோக நாயகரே! ...