Thursday, February 3, 2011

நரசிம்மர் ஜெயந்திஉங்களுக்கு ஒபலய்யாவைத் தெரியுமா?
மே 26 நரசிம்மர் ஜெயந்தி
"ஒபலய்யா' என்ற பெயரில் ஒரு சுவாமி இருக்கிறார். அவர் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள். தாயின் வயிற்றில் பிறந்து வந்தால் தாமதமாகும் என்று பிரகலாதனைக் காக்க தூணில் இருந்து ஓடிவந்தார் நரசிம்மமூர்த்தி. இந்த
அவதாரம் நிகழ்ந்த தலம் அஹோபிலம் என்னும் சிங்கவேள்குன்றம். இங்கு நரசிம்மருக்கு ஒன்பது கோயில்கள் இருப்பதால் "நவநரசிம்மம்' என்பர். வான் உயர்ந்த மலையும், மூங்கில் காடுமாக இருக்கும் இங்கு மக்கள் நடமாட்டம் மிக குறைவு. மலை அடிவாரமான கீழ்அகோபிலத்தில் இருக்கும் கோயிலில் லட்சுமி நரசிம்மர், மலை மேல் அமைந்துள்ள கோயிலில் சுயம்பு நரசிம்மர் ஆகியோர் வீற்றுள் ளனர். மூலவர் சன்னதி அருகில்திருமங்கையாழ்வார், ராமானுஜர், தாயார் சன்னதிகள் உள்ளன. தாயார்செஞ்சுலட்சுமி எனப்படுகிறார். நரசிம்மர் தோன்றிய தூண் மலைக்கு மேல் உள்ளது. இதற்கு "உக்ர ஸ்தம்பம்' என்று பெயர். இம் மலையில் செஞ்சு என்னும் வேடுவ இனமக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் குலத்தில்பிறந்த பெண்ணை நரசிம்மப்பெருமாள் சிறையெடுத்து திருமணம் செய்ததாக ஐதீகம். அக்குலமக்கள் நரசிம்மரை "ஒபலய்யா' என்று அழைக்கின்றனர். தங்கள் பிள்ளைகளுக்கும் ஒபலய்யா, செஞ்சுலட்சுமி என்று பெயரிடுவதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.


மதுகிரி நரசிம்மர்
யதுவம்ச அரசன் ஒருவன்நரசிங்கப்பெருமாளை வழிபட்டு வந்தான். அவன் ஒரு மலையின் மேல் கோட்டை நிர்மாணித்து அவருக்கு கோயில் கட்டினான். அந்தக் கோயிலே "மேலக்கோட்டை' என்று பெயர் பெற்றது. கர்நாடக மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. பெங்களூருவில் இருந்து மைசூரு செல்லும் ரயிலில் பாண்டவபுரம் ஸ்டேஷனில் இறங்கி, அங்கிருந்து 30 கி.மீ., சென்றால் மேலக்கோட்டையை அடையலாம். யோக நரசிம்மசுவாமி வீற்றிருக்கும் மலை "யதுகிரி' எனப்படும். மலையின் அடிவாரத் தில் இருக்கும் கல்யாணி தீர்த்தம் பளிங்கு போல் தூய்மையாக இருக்கும். ராமானுஜர் திருமண் காப்பு (நாமம் இடும் கட்டி) கிடைக்காமல் அவதிப்பட்டபோது, இங்குள்ள பெருமாளே கனவில் தோன்றி யதுகிரியில் குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்
காட்டினார். மறுநாள் காலையில் சென்ற ராமானுஜர் தன்னுடைய திரிதண்டத்தால் மண்ணைக்கீற அங்கே பால் போன்ற திருமண் கட்டிகள் இருந்தன. சோழமன்னன் ராமானுஜரை துன்பப்படுத்திய போது அடைக்கலம் புகுந்த கோயில் இதுவே. அப்போது இங்கு ஆட்சி செய்த ஹொய்சாள மன்னன் பிட்டிகன், ராமானுஜரைக் குருவாக ஏற்றுக் கொண்டான். 12 ஆண்டுகாலம் அங்கேயே தங்கி, காவிரியின் இருகரையோரங்களிலும், அஷ்டநாராயண மூர்த்திகளான எட்டு கோயில்களை அவர் நிர்மாணித்தார். இதில் மேலக்கோட்டை சம்பத் குமாரசுவாமி, பேலூர் விஜயநாராயணசுவாமி, ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில்கள் முக்கியமானவை.
நரசிம்மருக்கு சந்தனாபிஷேகம்
நரசிம்மர் பெரும்பாலும் மலைக்கோயில்களிலேயே வீற்றிருக்கிறார். வேலூர் அருகிலுள்ள சோளிங்கர், ஆந்திராவிலுள்ள அஹோபிலம், விசாகப்பட்டினம் அருகிலுள்ள சிம்மாசலம், கர்நாடக மாநிலம் மேல்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள சிங்கப்பெருமாள் கோயில், நாமக்கல், மதுரை ஒத்தக் கடைநரசிம்மர் கோயில்கள் சிறப்பானவை. தன்னுடைய பெயரைச் சொல்ல மறுத்த பிரகலாதனை இரணியன் கல்லைக் கட்டி கடலில் போட்டுவிட்டான். அவன் வெளியில் வரமுடியாதபடி பெரிய மலையையும் அவன் மேல் போட்டு அழுத்தினான். பக்தனைக் காப்பாற்ற பெருமாள்அம்மலையைப் பிளந்தார்.
பெருமாள் காத்தருளிய இடத்தில் நரசிம்மருக்கு கோயிலைக் கட்டிய இடமே சிம்மாசலம். இக்கோயில் மலையை முழுக்க குடைந்தெடுத்து அமைக்கப்பட்டது. பாறையால் செய்யப்பட்ட ஒரு தேர், சக்கரங்களுடன் குதிரைகள் இழுத்துச் செல்லும் முறையில் உள்ளது. அத்தேரில் உள்ள நரசிம்மர் உக்ரத்துடன் இருப்பதால், அவரது கோபத்தைத் தணிக்க ஆண்டு முழுவதும் சந்தனம் சாத்துவார்கள். நரசிம்ம ஜெயந்தி அன்று இவருக்கு நடக்கும் சந்தன அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வாழ்வில் உண்டாகும் துன்பங்களைப் போக்கி பக்தர்களைக் காப்பதில் சிம்மாசலம் நரசிம்மருக்கு இணை வேறு யாருமில்லை.

No comments:

Post a Comment