சுந்தரகாண்டத்தில், விபீஷணனின் மகளான திரிசடை சீதையிடம் சரணாகதி அடைந்தாள். சீதை அவளுக்காக அரக்கப்பெண்களை எல்லாம் அனுமனிடம் இருந்து காப்பாற்றினாள். அசோகவனத்தில் அரக்கிகள் அனைவரும் சீதையைத் துன்புறுத்தி வந்தனர். "" ராவணனிடம் சேர்ந்து வாழ்! இல்லாவிட்டால் நீ பிழைக்க முடியாது'' என்று சீதைக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனால், நல்லோருக்கும் பெய்யும் மழை எல்லோருக்கும் என்பார்களே. அதுபோல, நல்லவளான திரிசடையினால் எல்லா அரக்கிகளும் பிழைத்துக் கொண்டார்கள். அசோகவனத்தை அழிக்கப் புறப்பட்ட அனுமன், ""தாயே! கட்டளை இடுங்கள். இந்த அரக்கியர் கூட்டத்தை என் கால்களாலே பந்தாடி விடுகிறேன்'' என்றார். அதற்கு சீதை, "" இத்தனை நாட்களும் இந்த ராட்சஷப்பெண்கள் என்னை ஏசியும் பேசியும் வந்தது என்னவோ உண்மைதான். ஆனால், அவர்கள் ராவணனிடம் கொண்ட பயத்தினால் என்னைப் பழித்தார்களே தவிர, உண்மையில் யாருக்கும் என் மீது வெறுப்பு இல்லை. உன் பார்வையில் இவர்கள் தப்பு செய்தவர்கள் அவ்வளவுதான். தப்பு செய்தவர்களிடம் கருணை காட்டுவது தான் நல்லது. உலகத்தில் தப்பு செய்யாதவர்கள் தான் யார் இருக்கிறார்கள்?'' என்று கேட்டாள். இதைக் கேட்டதும் அனுமனின் முகம் வெளுத்துவிட்டது. தப்பே செய்யாதவராக ராமன் இருக்கிறாரே என்ற எண்ணம் கொண்ட அனுமனுக்கு சீதையின் பேச்சு அதிர்ச்சியைத் தந்தது. சீதை அனுமனின் உள்ளக்குறிப்பை உணர்ந்தவளாய், ""ஆஞ்சநேயா! உன் எண்ணத்தை நான் நன்கு அறிவேன். ராமனும் தப்பு செய்தவன் தான்! தன் பத்தினியை அயலான் கடத்தி வந்துவிட்டானே என்று ஓடிவந்து காப்பாற்ற வேண்டாமா? இத்தனை நாளும் என்னை அபலையாக ராவணனிடம் விட்டிருக்கலாமா? இது ராமன் செய்த குற்றம் தானே!'' என்று கேட்டாள். அனுமனும் அதை ஒப்புக்கொண்டார். அதன்பிறகு அனுமனுக்கு வேறு சந்தேகம் வந்துவிட்டது.
""அம்மா! நீங்கள் என்ன தப்பு செய்தீர்கள்! அதையும் கொஞ்சம் சொல்லுங்கள்!'' என்று புன்னகையுடன் கேட்க, ""ஆஞ்சநேயா! மிக நன்றாகக் கேட்டாய்! தன் கணவனைப் பற்றி யாரிடமும் விமர்சித்துப் பேசாமல் இருப்பது தான் நல்ல பெண்ணுக்குரிய இலக்கணம். ஆனால், நானோ உன்னிடம் இவ்வளவு நேரமும் என் ராமனைப் பற்றிக் குறை கூறினேனே! அதுவே நான் செய்த பெரிய தப்பு!'' என்றாள்.
ராமனிடம் தப்பிய ஒரே வீரன்
ராமன் வில்லெடுத்தால் அவன் தொடுக்கும் பாணம் எதிரியை அழிக்காமல் விட்டதில்லை. ஆனால், அந்த மாவீரனிடம் தப்பி விட்டான் ராவணனின் படையைச் சேர்ந்த ஒரு சாதாரண வீரன். ராவணனின் பதினான்காயிரம் படையும் ராமனால் வீழ்த்தப்பட்டது. அந்த சேனையில் இருந்து ஒரே ஒருவன் தப்பி ஓடினான். அவனை ராமனும் ஏதும் செய்யவில்லை. தப்பியவன் நேராக ராவணனிடம் ஓடினான்.
""மகாபிரபு! நம் பதினாலாயிரம் சேனையையும் ராமன் அழித்துவிட்டான்,'' என்றான். அப்போது ராவணன் அட்டகாசமாகச் சிரித்தான்.
""ஏ முட்டாளே! எல்லாரும் இறந்துபோனார்கள் என்றால், நீ மட்டும் எப்படியடா பிழைத்தாய், உளறாதே!'' என்றான் அலட்சியமாக. தன் படைகள் மீது அவ்வளவு நம்பிக்கை ராவணனுக்கு, அவற்றுக்கு சேதம் ஏதும் ஏற்பட்டிருக்காது என்றே நினைத்தான். வந்தவன் சொன்னான்.
""பிரபு! நான் தந்திரம் செய்து தப்பி வந்தேன்,'' என்றான்.
""அப்படி என்னடா தந்திரம்?''
""புடவை கட்டி தப்பினேன்,''.
""புடவையா? எதற்கு?''
""அந்த ராமன் தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டானாம். அதனால், என்னை யாரோ பெண் என நினைத்து விட்டுவிட்டான்,'' என்றானே பார்க்கலாம்!
சீதையைத் தவிர வேறு யாரையும் ஏறிட்டும் பார்க்காதவர் ராமபிரான்.
Comments
Post a Comment