கடல் பேனாக்கள் கடலுக்கடியில் அலைகள் இல்லாத இடத்தில் கூட்டம், கூட்டமாக பல வண்ணங்களில் ஆடும் பரதநாட்டியத்தைப் பார்ப்பது காணக்கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும். கடலுக்குள் ஓர் அற்புதக் கண்காட்சியையே நடத்திக் கொண்டிருக்கும் இதன் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியது..
""பார்ப்பதற்குப் பறவைகளின் இறகுகள் போல காணப்படும் கடல் பேனாவின் விலங்கியல் பெயர் பெனாடுலாசியா என்பதாகும். பறவைகளின் இறகுகளைக் கையில் வைத்துக்கொண்டு மையைத் தொட்டு, தொட்டு ஒரு காலத்தில் எழுதினோம். அந்த இறகுப் பேனாக்கள் போலவே இவையும் இருப்பதால் இவற்றிற்குக் கடல் பேனாக்கள் என்று பெயர் உண்டானது.உலகம் முழுவதும் உள்ள கடலில் வாழ்ந்தாலும் மன்னார் வளைகுடாவில் ஆழ்கடல் பகுதியில்,அலைகள் ஆர்ப்பரிக்காத இடத்தில் இவை கூட்டம், கூட்டமாக வியாபித்து ஆடும் நடனம் அற்புதம். கடலுக்கடியில் ஸ்கூபா டைவிங் செய்பவர்கள் இவற்றின் அழகைக் கண்டு ரசிக்க முடியும்.
பவளப்பாறைகளை உருவாக்கும் கடல் தாமரைகள் மாதிரியான ஒருவகைப் பூச்சிகள்தான் கடல் பேனாவாகின்றன. இதில் உள்ள ஒவ்வொரு இறகுகளும் 8 உணர்விழைகளைக் கொண்டிருக்கிறதாம். கடல் நீரை உறிஞ்சுதல்,உணவு உட்கொள்ளுதல், இனப்பெருக்கம்,டார்ச்லைட் போன்ற ஒளி உமிழ்தல் போன்றவையே இவற்றின் செயல்பாடுகள். கடலுக்கடியில் மணலிலோ, சகதியிலோ அடிப்பகுதி புதைந்து மற்ற பகுதிகள் வெளியில் தெரிவதுபோல காணப்படும். பல வண்ணங்களில் இருக்கும் இந்த உயிரினம் 6 அடி உயரம் வரை வளரக் கூடியது.
ஆழமான அதே நேரத்தில் அமைதியான கடல் பகுதிகளையே விரும்பும் இப்பேனாக்கள் அதன் இருப்பிடத்திலிருந்து பிடுங்கி விடாமல் தன்னைத்தானே பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்கின்றன.
தாவர மிதவை நுண்ணுயிரிகளே இதன் விருப்ப உணவாக இருப்பதால் இருக்கும் இடத்தில் அது கிடைக்காவிட்டால் தனது இருப்பிடத்தை மாற்றிக் கொள்கின்றன. சின்னஞ்சிறு மீன்களும் சில பெரிய கடல் பேனாக்களில் ஒட்டிக் கொண்டும் உயிர் வாழ்கின்றன. இப்பேனாக்களில் உள்ள இறகுகள் போன்ற வளையங்கள் மூலமே இதன் வயதும் கணக்கிடப்படுகிறது. கடலுக்கு அடியில் வாழும் நகரும் உயிரினங்களான நட்சத்திர மீன்கள், கடல் வண்ணப் புழுக்கள் ஆகியன இவற்றின் முக்கிய எதிரிகள். இவையிரண்டும் கடல் பேனாவை பார்த்தவுடனேயே வேரோடு பிடுங்கி அழித்து விடும். இவற்றிடமிருந்து இவைகள் தப்பித்துக் கொண்டால் 100 வருடங்கள் வரை உயிர் வாழும் வகையில் இதன் ஆயுளும் கெட்டியாக இருக்கும்.
ஆண் உயிரினம் இன முதிர்ச்சியடைந்து கடலில் விந்துகளை வெளியிடும் அதே நேரத்தில் பெண்ணும் அதற்கு அருகிலேயே ஒரே சமயத்தில் முட்டைகளை வெளியேற்றுவதால் இரண்டும் ஒன்றாகி கருவுறுதல் நடந்து இளங்குஞ்சுகளாகி விடுகின்றன. இவை ஒரு சில வாரங்கள் மட்டும் கடலில் நீந்தி வாழ்ந்து கொண்டு தனக்குச் சாதகமான இடம் கிடைத்தவுடன் மணலிலோ, சகதியிலோ அப்படியே ஊன்றி அங்கேயே வளர்ந்து கொண்டிருக்கும்.
நவீன விசைப்படகுகள் இழுவலைகளின் மூலம் மீன் பிடிப்பதால் பல அரிய வகை கடல் பேனாக்கள் வேரோடு பிடுங்கப்பட்டு சிறிதும் உபயோகமில்லாமல் கரைகளில் தூக்கி வீசப்படுகின்றன.
கடல் பேனாக்களை மற்றவை தொட்டால் உடனே டார்ச்லைட் போன்ற ஒருவித ஒளியை உமிழ்ந்து எதிரிகளைப் பயப்பட வைத்து தப்பிக்கும் நுட்பத்திலும் பேனாக்கள் பலே கில்லாடிகள்'' என்றார்.
Comments
Post a Comment