Friday, February 11, 2011

லவகுசா பகுதி-5




அந்த தேரில் அமைச்சர் சுமந்திரரும் சென்றார். தேர், கங்கைக்கரையை அடைந்தது. தேர் அங்கு சென்றதோ இல்லையோ, குனிந்த தலை நிமிராத லட்சுமணனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. சீதை பதைபதைத்து போனாள். லட்சுமணா! எதற்காக வருத்தப்படுகிறாய்? உன் கண்கள் கண்ணீர் சிந்துகிறது என்றால், ஏதோ கெடுதலின் அறிகுறியாகத்தான் இருக்கும். மறைக்காமல் சொல், என்றாள். என்ன சொல்வான் லட்சுமணன். அண்ணி, உங்களை அண்ணன் காட்டில் தனியாக விட்டு வரச்சொன்னான் என்பதை எப்படி அவளிடம் சொல்வான்! அழுகை முட்டியதில், வார்த்தைகள் வர மறுத்தன.லட்சுமணா! தூய்மையின் வடிவமானவனே! அழகான இந்தக் கங்கை நதியைக் கண்டவர்கள் கையெடுத்து வணங்குவார்கள். தங்கள் பாவம் தீர மனம் மகிழ்ந்து நீராடுவார்கள். அப்படியிருக்க, நீயோ, இந்த நதியைப் பார்த்து அழுகிறாயே! மேலும், நீ கவலைப்படும் அளவுக்கு, உனக்கு துன்பம் செய்யக்கூடியவர்களும் இந்த உலகத்தில் பிறக்கவில்லையே, என்றாள்.அண்ணியாரே! வேறொன்றுமில்லை. நான் பிறந்த நாளில் இருந்து நேற்று வரை என் அண்ணனைப் பிரிந்ததே இல்லை. இப்போது தான் முதன்முறையாகப் பிரிந்து தங்களுடன் வருகிறேன். அண்ணனை நினைத்துக் கொண்டேன். அதனால் அழுகை வந்து விட்டது, என்றான். லட்சுமணா! இதற்கா சிறுபிள்ளை போல் அழுவது! இவ்வுலகில் அறம் தழைக்க பாடுபடுபவர்கள் முனிவர்கள். அவர்களின் திருவடிகளைப் பணிந்தால் புண்ணியம் கிடைக்கும். அந்தப் புண்ணியம் தீவினைகளை அறுத்துவிடும். மேலும், நாம் முன்பு இங்கு இந்த கானகத்தில் தங்கியிருந்த போது, எனக்கு உதவிசெய்த முனிபத்தினியர், அவர்களின் மகள்களுக்கு புடவை, ஆபரணம் முதலானவற்றைக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. அவற்றையெல்லாம் இந்த தேரில் கொண்டு வருவதை நீயும் அறிவாய். அவற்றைக் கொடுத்துவிட்டு, முனிவர்ளை வணங்கிவிட்டு, ஒரே நாளில் திரும்பி விடப் போகிறோம். இதற்காக கலங்காதே, என்றாள். உடனே தேரில் இருந்து இறங்கிய லட்சுமணன், அண்ணியை வலம் வந்து வணங்கி, தேவி! ஏழுலகையும் ஆட்சி செய்ய உரிமையுடையவளே! நான் சொல்வதைக் கேட்பீர்களா? என்றதும், அவனது வித்தியாசமான நடவடிக்கையைக் கண்ட சீதை, எதுவானாலும் தயங்காமல் சொல் லட்சுமணா, என்றாள்.

லட்சுமணனின் நாக்கு வறண்டது. உடல் சோர்ந்தது. முகம் களையிழந்தது. மனம் நடுங்கியது. தட்டுத்தடுமாறி வார்த்தைகளை உதிர்த்தான். உத்தமியே! உலகத்தின் தாயே! தூயவராகிய ஜனகரின் வேள்வித்தீயில் பிறந்தவளே! என் அண்ணன் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை உங்களுக்கு சொல்கிறேன். இந்த உலகம் இல்லாத ஒன்றை இருக்கிறது என்று சொன்னால், எல்லோருமே அதை நம்பி, ஆமாம்...இருக்கிறது என்றே சொல்வார்கள். இருக்கும் ஒன்றை இல்லை என்று உலகம் சொன்னால், நிச்சயம் அது இல்லை என்றாகி விடுகிறது. உலகம் இருக்கிறது என்று சொல்லும் விஷயத்தை, யாரோ ஒருவன் இல்லை என்று சொன்னால், அவனை பேயைப் பார்ப்பது போல பார்ப்பார்கள். அண்ணியாரே! தங்கள் விஷயத்திலும் அப்படியே நடந்து விட்டது. தங்களை ராவணன் கவர்ந்து சென்றான். அண்ணன் உங்களை மீட்டார். நீங்கள் நெருப்பில் குதித்து உங்களைத் தூயவர் என்று நிரூபித்தும் விட்டீர்கள். ஆனால், இதையெல்லாம் அயோத்தியில் உள்ளவர்கள் பார்க்கவில்லையே! அப்படி பார்க்காத யாரோ சிலர், தங்களைப் பற்றி குற்றம் சொல்லி பேசியிருக்கிறார்கள். மோகத்தின் காரணமாக, மாற்றானுடன் தங்கியிருந்தவளுடன், இந்த ராமன் வாழ்வதை விட செத்து விடலாமே என்பதே பேச்சின் சாரம். இதை ஒற்றர்கள் மூலம் அறிந்த அண்ணன் கொதித்து விட்டார். மக்களுக்கு விருப்பமில்லாத ஒருத்தியுடன் இணைந்து அரசாள முடியாது. எனவே, வால்மீகி முனிவரின் ஆசிரமம் அருகில் உங்களை நிரந்தரமாக விட்டு வரச்சொன்னார், என்றான். இதைக் கேட்டாளே இல்லையோ, சீதாதேவியின் காதுகளில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கோலை நுழைத்தது போல் இருந்தது. தேரில் இருந்து சரிந்து கீழே விழுந்து விட்டாள். வாய்களில் இருந்து வார்த்தைகள் வர மறுத்தது. அவள் தரையில் இருந்து எழ முயற்சித்தாள். நிற்க முடியவில்லை. சரிந்து சாய்ந்தாள்.

இந்த உலகத்திலேயே சீதாதேவிக்கு ஏற்பட்டது போன்ற துன்பம் யாருக்கும் ஏற்பட்டது இல்லை. யாராவது ஒரு பெண், என்னைப் போல் பாவம் செய்த ஒரு ஜீவனுண்டா? என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. ஏனெனில், சீதா திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்தாள். சில காலம் தான் மாமியார் வீட்டில் தங்கியிருந்தாள். உடனே காட்டுக்கு புறப்பட்டாயிற்று. அங்கும் சோதனை. கொடியவன் ராவணனிடம் சிக்கிக் கொண்டாள். ராவணனோ, அவளை இச்சைக்கு அழைத்தான். ஒருவனுக்கு துணைவியாக இருக்கும் நிலையில், இன்னொருவன் கூப்பிடுகிறான் என்றால், ஒரு பெண்ணின் மனநிலையைச் சொல்லவும் வேண்டுமோ? சதாசர்வகாலமும், ராமனின் திருநாமம் விழ வேண்டிய செவிகளில், அரக்கியரோ, ராவணனுடன் போய் வாழ் என்று வற்புறுத்தும் இழிவான சொற்களைப் பேசினர். அதைத் தாங்கிக்கொண்டாள். காட்டில் இருந்து மீண்டாள். கட்டிய புருஷனே அவளைத் தீக்குளிக்கச் சொன்னான். சொன்னது அவனளவில் நியாயம் என்றாலும், எந்தக் குற்றமும் செய்யாத சீதா, கணவன் தன் மீது சந்தேகப்பட்டானே என்று துடித்துப் போனாள். தீ கூட அவளைச் சுடவில்லை. ஆனால், வார்த்தைகள் சுட்டன. வீட்டுக்கு வந்தாள். பட்டாபிஷேகம் முடிந்து சில காலம் கணவனுடன் சுகவாழ்வு. இப்போது அவள் கர்ப்பிணி. அயோத்தியின் வாரிசுகளை சுமந்து கொண்டிருக்கும் அவளை, உலகம் சந்தேகிக்கிறதே என்பதற்காக நிரந்தரமாக ஒதுக்கி வைக்கிறான் ராமன். என்ன கொடுமையப்பா இது! அடியே சீதா! உன்னை நினைத்தால், எங்கள் கண்கள் அருவியைத் தானேடி கொட்டுகிறது! என்று நாமும் அவளோடு சேர்ந்து புலம்புவதைத் தவிர வேறென்ன சொல்வது!

No comments:

Post a Comment