சீடர்கள் குழப்பமடைந்தனர். குருவே! ராமாயணம் தொடர்கிறது என்றால், திவ்யமான ராமநாமத்தை நாங்கள் இன்னும் உங்கள் வாயால் தொடர்ந்து கேட்கப்போகிறோம் என்றுதானே பொருள். இதில் தாங்கள் வருத்தப்படுவது பற்றி தான் எங்களுக்கு புரியவில்லை, என்றனர். சீடர்களிடம் வால்மீகி பதிலேதும் சொல்லவில்லை. அவரது ஞானதிருஷ்டியில், காட்டிற்கு வரப்போகும் சீதைக்கு ஆகப்போகும் நிலை தெரிந்தது. உம்...விதி வழி வாழ்வு. அவள் பூமாதேவியின் புத்திரி ஆயினும், அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துதானே ஆக வேண்டும். பொதுவாகவே, பொறுமைசாலிகளுக்கு தான் பூமியில் அதிக துன்பமே விளைகிறது என தனக்குள் சொல்லிக்கொண்டார். இந்த பூலோகத்தில் பிறந்தவர்களில் பொறுமைசாலிகளுக்கு துன்பம் அதிகமாக வருகிறது என்று வால்மீகி நினைத்தது இன்றுவரை கண்கூடாகத்தான் தெரிகிறது. இவ்வளவு பொறுமையாய் இருந்தும், நமக்கு இவ்வளவு சோதனையா என சில பொறுமைசாலிகள் சலித்துக் கொள்ளவும் கூடும். ஆனால், காரணமில்லாமல் காரியமில்லை. இந்த லோகத்தில் நம் முன்வினைப் பயனையெல்லாம் அனுபவித்து, மேலும் மேலும் பொறுமை காத்தால், அவ்வுலகில் சுகமான வாழ்வு வாழலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீதையிடம் ராமன், சீதா! நீ நாளையே புறப்படலாம். உரிய ஏற்பாடுகளைச் செய்து விடுகிறேன், எனச்சொல்லி விட்டு, அரசவைக்குச் சென்றார். அவருக்கு வீட்டை விட நாட்டைப் பற்றிய கவலை அதிகம். மக்களுக்கு ஒரு சிறு கஷ்டம் கூட வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதற்காக, பல ஒற்றர்களை நியமித்திருந்தார். மக்கள் என்ன பேசுகிறார்கள். அவர்களது தேவையென்ன, யாராவது வெறுப்பு கலந்த குரலில் பேசுகிறார்களா...இவை ஒற்றர்களிடம் அவரது அன்றாடக்கேள்விகள். ஒற்றர்கள் இதற்குரிய பதிலைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். விஜயன், பத்திரன், தந்தவக்கிரன், சுமகாதன், சுராஞ்சி, காளியன் ஆகியோர் ராமபிரானின் ஒற்றர்கள். நகைச்சுவை ததும்ப பேசுவதிலும் இவர்கள் கில்லாடிகள். இவர்கள் சொன்ன நகைச்சுவை கதைகளைக் கேட்டு ராமன் கலகலவென சிரித்துக் கொண்டிருந்தார்.
நகைச்சுவை வாழ்க்கைக்கு ஒரு நல்ல மருந்து. சிரிக்க சிரிக்க பேசத்தெரியவில்லையே என வருத்தப்படுபவர்கள் அதிகம். ஆனால், சிரிப்பதற்கு பழக்கம் தேவையில்லை. சிரிக்க சிரிக்க பேசுபவர்கள் அதிகம் இருந்தாலே போதும்! சிரிப்பு மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குகிறது. மகிழ்ச்சியான மனநிலை சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. நகைச்சுவை புத்தகங்களைப் படிப்பது, சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகியவை நல்ல மருந்து. அதே நேரம் கேலியும், கேளிக்கையுமே வாழ்க்கையாகி விடக்கூடாது என்பதிலும் ராமன் கவனமாக இருந்தார். ஒற்றர்களே! இந்த பரிகாசக்கதைகள் ஒருபுறம் கிடக்கட்டும். நாட்டு மக்கள் என்ன சொல்கின்றனர்? அதை முதலில் சொல்லுங்கள். நாடாள்பவனுக்கு முதலில் மக்கள். அதன்பிறகு தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டும். சொல்லுங்கள், என்று துரிதப்படுத்தினார். அவர்கள் ராமனிடம், அண்ணலே! தங்கள் ஆட்சியில் என்ன குறை இருக்கிறது? கடலின் நடுவில் இருக்கும் இலங்கை மாநகரை தாங்கள் வெற்றி கொண்டதைப் பற்றி மக்கள் வியப்புடன் பேசுகிறார்கள். அசுரர்களை அழித்ததைப் பற்றி வீரம்பொங்க உரையாடுகிறார்கள். தேவர்களின் தலைவனான இந்திரனின் கொடும் பகைவனான இந்திரஜித்தைக் கொன்றது பற்றியும், அதிசயத்தின் வடிவமான பத்து தலைகளைக் கொண்ட ராவணனை அழித்தது பற்றி பேசுகிறார்கள். எங்கள் ராமனை வெல்வார் யார் என்று மார்தட்டி பேசுகிறார்கள், என்றனர். ராமன் அவர்கள் பேசுவதை கையசைத்து நிறுத்தினார். ஒற்றர்களே! நீங்கள் நிறைகளை மட்டுமே சொல்கிறீர்கள். தனது ஆட்சியின் நிறைகளைக் கேட்டு சந்தோஷம் கொள்வது மட்டும் அரசனின் பணியல்ல. அதன் குறைகளைக் கேட்டு, அதனை நீக்கி, நன்மை செய்பவனே அரசன். எனவே, நீங்கள் கேட்ட குறைகளையும், மனம் கூசாமல், அதைரியம் கொள்ளாமல் சொல்லுங்கள், என்று வற்புறுத்தினார். அந்நிலையில் அவர்கள் தாங்கள் கேட்ட ஒரு இழிசொல்லை ராமனிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.ஸ்ரீராமா! ஆருயிர் மன்னவரே! நாங்கள் கேட்ட ஒரு விஷயத்தைச் சொல்கிறோம். அதுகேட்டு தாங்கள் வருத்தம் கொள்ள வேண்டாம். புத்தியற்றவர்கள் பேசும் பேச்சு அது, என்றதும், ராமன் உஷாராகி விட்டார்.
உம்...அதை விரைந்து சொல்லுங்கள், என்றார். ராமா! எங்கள் அன்னை சீதாதேவியார், இலங்கையில் ராவணனின் இடத்தில் ஒரு வருடகாலம் இருந்தார். இப்படி தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவளை, அவன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாமே! இது தெரிந்தும், நாடாளும் மன்னன் ஒருவன் அவளுடன் வாழலாமா? குடிமக்களுக்கு ஒழுக்கத்தை கற்பித்து முன்மாதிரியாக இருக்க வேண்டிய மன்னன் ஒருவனே இப்படி இருந்தால், அது எவ்வகையில் நியாயம்? என கேட்கிறார்கள், என்றனர். இத்தனை நேரமும் பரிகாசக்கதைகளைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த ராமனின் கரிய முகம் சிவந்து விட்டது. அது கோபத்தின் வெளிப்பாடா, வெட்கத்தின் பிரதிபலிப்பா...ஒற்றர்கள் குழம்பினர். மனதில் வேல்போன்று தைத்த இந்த கடும் சொற்களைத் தாங்க முடியாத ராமபிரான், சைகையாலேயே ஒற்றர்களை அனுப்பிவிட்டு, தம்பியர்கள் இருக்குமிடம் சென்றார். தம்பியரே! என் உயிர் நீங்கள். என் பலமும் நீங்கள் தான். நண்பர்களும் நீங்களே! நீதி, தவம், சகோதரர்கள், அரசாங்கம், இன்பம் எல்லாமே நீங்கள்! இப்படி எல்லாமே எனக்கு நீங்கள் தான் என்றாகி விட்ட பிறகு உங்களிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? ஏனெனில், எனக்கு புகழ் கிடைத்தால் அதுவே உங்கள் புகழ். என் மீது பழிவந்தால் அது உங்களுக்கும் பழிதானே. எனவே, நான் கேள்விப்பட்ட ஒன்றை வெளிப்படையாகச் சொல்கிறேன், கேளுங்கள், என்றார். அண்ணனின் முகபாவம், பீடிகை ஆகியவை அவர் ஏதோ சொல்லக்கூடாததைச் சொல்லப் போகிறார் என்பதை தம்பிகளுக்கு உணர்த்தி விட்டது. என்ன அண்ணா? என்றனர் அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன். உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் கற்பின் வலிமையை நிரூபித்தாள். ஆனால், உலகத்தார் அதை ஏற்க மறுக்கின்றனர். அவள் மீதும், என்மீதும் சொல்லப்படும் பழிச்சொல் என் இதயத்தை வாட்டுகிறது, என்றவர் நடந்ததைச் சொன்னார். சகோதரர்கள் இதுகேட்டு மிக துன்பமடைந்தனர். கைகேயி, ராமபிரானை நாட்டை விட்டு அனுப்பியதை விட, அவர்களுக்கு இந்த தகவல் மிகக்கொடுமையாக இருந்தது.
Comments
Post a Comment