விநாயகப்பெருமான் புன்னகையிலேயே பூத்த மலர் என்கிறது பிரமாண்ட புõரணம். இந்த புராணத்தில் லலிதோபாக்யானம் என்ற பகுதி வருகிறது. அதில் விநாயகரின் பிறப்பு பற்றி சொல்லப்பட்டுள்ளது.
பண்டாசுரன் என்பவன் தேவர்களை மிகவும் கடுமையாகக் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டும் என தேவர்கள், பார்வதிதேவியிடம் முறையிட்டனர். பார்வதி தனது பெண் சேனைகளுடன் லலிதாம்பிகை என்னும் பெயர் தாங்கி புறப்பட்டாள். சிவனும் காமேஸ்வரர் என்ற பெயர் தாங்கிவந்தார். அதனால், அம்பாளுக்கு "காமாட்சி' என்ற பெயரும் வந்தது.(புராணகாலத்திலேயே ராணுவத்தில் பெண்கள் இருந்துள்ளனர் என்பதற்கு இது சாட்சி). அக்னிகோட்டை ஒன்றை எழுப்பி, அதனுள் தங்கிவிட்டாள்.
இதையறிந்த பண்டாசுரன், தனது உதவியாளரான விசுக்ரன் என்பவனை அனுப்பி, ""தேவியின் படைகளைச் செயல்பட விடாமல் செய்து விடு,'' என்று உத்தரவிட்டான். விசுக்ரன் ஆரவாரத்துடன் தேவி தங்கியிருந்த இடத்துக்கு வந்தான். ஆனால், சுற்றிலும் அக்னி எரிந்ததால் அவனால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. உடனே அவன் ஒரு யந்திரத்தை தயாரித்தான். அதற்கு "விக்ன யந்திரம்' என்று பெயர். அதை நெருப்பைத்தாண்டி கோட்டையின் மேல் கூரையில் விழும்படி வீசி எறிந்தான். அதுவும் கூரையில் விழுந்தது.
அந்த யந்திரம் யாருடைய உயிரையும் வாங்காது. ஆனால், மனதை மாற்றிவிடும் சக்தியுடையது. அங்கு தங்கியிருந்த தேவியின் படைகளின் மனதை அது மாற்றியது.
""இந்த தேவிக்கு கட்டுப்பட்டு நாம் ஏன் வீணே போரிட வேண்டும்? நம்மால் கொல்லப்படுபவர்கள் அசுரர்களே ஆயினும், பிரம்மஹத்தி தோஷம் ஏற்படத்தானே செய்யும்! மேலும், நாம் கஷ்டப்பட்டு போரிட, இந்த தேவி "பெரிய வீராங்கனை' என்ற பெயரைத் தட்டிக்கொண்டு போய்விடுவாள். எனவே, இவளுடன் போருக்குச் செல்லக்கூடாது. எல்லாரும் நிம்மதியாக உறங்கி விடலாம்,'' என படுத்து விட்டனர்.
இந்த மாயைகளை எல்லாம் புரிபவளே அம்பிகை தானே! அவள் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். இந்த நேரத்தில், சிவன் அங்கு வர, அவரைப் பார்த்து மயக்கும் புன்னகையைச் சிந்தினாள். அந்த புன்னகைக்கு விலை மதிப்பே கிடையாது என்பதைப் புரிந்து கொண்ட சிவனும் புன்னகையை உதிர்க்க, அவர்களது புன்னகையிலேயே உதயமானார் விநாயகர்.
விநாயகர் தன் தும்பிக்கையை மேலே உயர்த்தி யந்திரத்தை எடுத்தார். சுற்றிலும் எரிந்த அக்னிக்குள் வீசி சாம்பலாக்கி விட்டார். விக்னயந்திரம் எரிந்து போன அடுத்த கணமே, தேவியின் படைகள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் போரிட்டு பண்டாசுரனை அழித்தனர். விக்னம் என்றால் "தடை'. தடையை வேரறுத்து, தன் தாய் வெற்றிவாகை சூட காரணமாக இருந்த விநாயகருக்கு "விக்னேஷ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.
Comments
Post a Comment