Monday, April 11, 2011

சித்திரை வருடப்பிறப்பு


சூரியன் மீண்டும் ஒருமுறை 12 ராசிகளிலும் சுற்றித்துவங்கும் நாளே சித்திரை வருடப்பிறப்பு. விஷு புண்யகாலம் எனப்படும். ஆனால் சந்திரனின் சுற்றை அடிப்படையாகக் கொள்பவர்க்கு - அதாவது தெலுங்கு மக்களுக்கு - பங்குனி மாதம் அமாவாசையன்று புது வருடம் (யுகாதி) ஆரம்பிக்கும். இந்த புனித நன்னாளில் புத்தாடை அணிந்து பெரியோர்களின் ஆசிர்வாதம் பெற்று, கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும். மேலும் தான, தர்மங்கள் செய்வதுடன், உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று புத்தாண்டு வாழ்த்து கூறி அனைவரையும் மகிழ்விக்க வேண்டும். இந்த நாளில் சூரிய வழிபாடு மிகவும் சிறப்பானது ஆகும். ஆசையின்றி சாதனை இல்லை. சாதனைக்காக திட்டங்களைத் தீட்டச் செய்யும் நன்னாளே வருடப்பிறப்பு. புது வருடத்தில் செய்யப்படும் அனைத்து செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக அன்றைய தினத்தில் நாம் அனைவரும் பஞ்சாங்கம் படித்து இந்த புத்தாண்டின் கால நேரங்களை அறிந்து அதன்படி செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.

கர வருட வெண்பா பலன்

கர வருடத்திற்காக எழுதப்பட்ட பாடல், பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

கரவருடம் மாரி பெய்யும் காசினியும் உய்யும் மிகுந்து வெள்ளமெங்கும் ஓடும் திரைமிகுந்த நாலுகால் ஜீவன்மலியு நோயால் மடியும் பாலும் நெய்யும்மே சுருங்கும்பார் கர புத்தாண்டில் நல்ல மழை பெய்யும். உலகத்தில் செழிப்பு ஏற்படும். ஆனாலும், வெள்ளப்பாதிப்பு இருக்கும். அதிக மழையால் கால்நடைகள் பாதிக்கும். பால் வளமும் நெய் உற்பத்தியும் குறையும் என்று இந்த பாடல் நமக்கு எடுத்து சொல்கிறது.

இங்கே 26 , அங்கே 37

தமிழ் ஆண்டுகள் 60. தற்போது பிறக்கும் கர தமிழ் புத்தாண்டு 26வது ஆண்டாகும். தென்னிந்தியாவில் கரஆண்டாக நாம் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் வடமாநிலங்களில் சோமகிருது ஆண்டு பிறந்துள்ளது. அம்மாநிலங்களில் அது 37வது ஆண்டாகும்.

கர வருடத்திற்கு ஈடான பிற வருடங்கள்

ஆங்கிலம் ........................... 2011- 2012
கொல்லம் ........................... 1186- 1187
பசலி .................................. 1420- 1421
சாலிவாகனம் (தெலுங்கு) ...... 1933- 1934
திருவள்ளுவர் ....................... 2042- 2043
ஜகத்குரு ஸ்ரீசங்கராச்சாரியார் ... 2082
ஸ்ரீமகாவீரர் (ஜைனர்) ............. 2538
ஸ்ரீபுத்தர் சகாப்தம் ................. 2554- 2555
கலியப்தம் .......................... 5112

தமிழகத்தில் என்ன நடக்கும்?

* காற்றும் மழையும் அதிகமாக இருக்கும். எங்கும் வெள்ளப்பாதிப்பு ஏற்படும்.
* கால்நடைகளுக்கு நோய் வந்து பால், நெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்.
* வாகன விலை குறைய வாய்ப்பு உள்ளது.
* முக்கிய நதிகள் பாதிப்புக்குள்ளாகும்.
* அயல்நாடு வாணிபம் பெருகும்.
* கருப்பு பணம், கடத்தல் பொருட்கள் பிடிபடும்.
* கல்வித்துறையில் பல மாற்றங்கள் ஏற்படும்.
* முக்கியஸ்தர்கள் பயம் காரணமாக பாதுகாப்பு தேடி அலைவார்கள்.

புத்தாண்டு கிரகங்கள்

கரஆண்டுக்குரிய ராஜா சந்திரன். மந்திரி குரு. சேனாதிபதி புதன். மக்களுக்கும், கிரகங்களுக்கும் அதிபதி சூரியன். உணவு பொருள்களுக்கு அதிபதி சுக்கிரன். இந்த கிரகங்களை வணங்குவதன் மூலம் நமக்கு நற்பலன் கிடைக்கும். இந்த ஆண்டில் பெருமாளை வழிபடுவதன் மூலம், வர இருக்கும் சிரமங்கள் தூளாய் பறக்கும். நமது வெற்றியை நாளை சரித்திரம் வெல்லும். -சிவானந்தரின் தமிழ் புத்தாண்டு முழக்கம்

நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் முன்னேறுவதற்காகவே பிறந்திருக்கிறீர்கள். நம் வாழ்நாள் ஒவ்வொன்றும் மகத்தானது. அதை நன்கு பயன்படுத்திக் கொள்வதில் தான் வெற்றி அடங்கி இருக்கிறது. இந்த வெற்றி நமது செயல்களின் சரித்திரத்தை என்றென்றும் பறைசாற்றும்.செய்யும் பணி எதுவாக இருந்தாலும் அதில் மனதை ஒருமுகப்படுத்தி செயல்படுங்கள். சிறு குழந்தையைப் போல அடிப்படைத்தேவைக்குக் கூட அடுத்தவரை நம்பி இருப்பதால் பயனில்லை. உற்சாகத்தோடு ஆர்வமாகப் பணியாற்றுங்கள். நம் தேவைகளை எல்லாம் நிறைவேற்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அனைத்தும் நம்மிடம் முழுமையாகவே இருக்கிறது.செய்யும் கடமையை மனப்பூர்வமாக அணுகினால் உங்கள் காலிலேயே நிற்கும் வலிமையும், செயல்திறமையும் பெறுவீர்கள். சிறுபணி தானே என்று எதையும் புறக்கணித்துவிடாதீர்கள். குளிப்பது, துணி துவைப்பது, உணவு சமைப்பது போன்ற அன்றாடப்பணிகளையும் அக்கறையோடு செய்யுங்கள்.

பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். தப்பி ஓட நினைக்காதீர்கள். மகிழ்ச்சியுடன் பொறுப்புகளை ஏற்று வெற்றி நடைபோடுங்கள். நீங்கள் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முயலும்போது, உங்களுக்கான நல்ல சூழ்நிலையும் ஒத்தவளர்ச்சி பெற்று துணைநிற்கும்.தியானம் அன்றாடப்பணிகளில் மிகவும் அடிப்படையானது. இதனால் நம் மனம் அமைதியில் நிலைத்திருக்கும். கடமைகளைக் குறைந்தநேரத்தில் திறம்படச் செய்வதற்கான ஆற்றலைத் தரும். சோம்பலைப் போக்கி புத்துணர்ச்சி உண்டாக்கும். உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் சுறுசுறுப்பாய் ஈடுபடுங்கள். அப்போது மன அமைதி காண்பீர்கள். ஆனால், நமக்குப் பிடித்தமான வேலை நமக்கும் பிறருக்கும் நன்மை தருவதாய் இருப்பது மிகவும் அவசியம். அன்புணர்வு, தன்னம்பிக்கை, பக்தி, தன்னலமின்மை, தர்மசிந்தனை இவை போன்ற நல்ல எண்ணங்கள் எல்லாம் ஒருநாளில் ஒருமனிதனிடம் உண்டாவதில்லை. நம் இயற்கையான சுபாவமாகத்தான் இருக்கவேண்டும் என்று சொல்வதாலும் பயனில்லை. விடாமுயற்சி உங்களிடம் இருக்குமானால் நிச்சயம் ஒருநாள் நல்ல குணங்கள் அனைத்தும் உங்களின் அங்கமாகிவிடும்.

மனம் எப்போதும் ஒருநிலையில் இருப்பதில்லை. அவ்வப்போது தளர்ச்சி அடையக்கூடும். அப்போது நல்ல உயர்ந்த மனப்பான்மையை உருவாக்கும் நல்ல நூல்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். இதனால் மனம் சீர்பட்டு புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் மனதில் மீண்டும் தழைக்கும்.மேலான ஒரு லட்சியத்தை உங்கள் மனக்கண் முன் நிறுத்துங்கள். அதன்பின் அதைநோக்கிய பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே உண்மையானவராக மாறிவிடுவீர்கள். உங்கள் சிந்தனை, சொல், செயல் மூன்றும் உயர்ந்த லட்சியத்தை வட்டமிட்டுக் கொண்டே இருக்கட்டும். இம்மூன்றும் ஒன்றுபடும் போது மனிதனால் சாதிக்கமுடியாதது எதுவுமில்லை என்பதை உணர்வீர்கள்.

கர ஆண்டில் கிரகண நாட்கள்

கர ஆண்டில் இரண்டு சூரிய கிரகணங்களும், மூன்று சந்திர கிரகணங்களும் ஏற்படுகின்றன. ஆனால் இரண்டு சந்திர கிரகணம் மட்டுமே இந்தியாவில் தெரியும் என்பதால் அந்நாட்களில் மட்டும் தோஷ பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

* ஜூன் 15 புதன்கிழமை இரவு 11.52 மணிக்கு சந்திரகிரகணம் ஏற்படுகிறது. நள்ளிரவு 1.38 மணிக்கு உச்சமாகி 3.32 மணிக்கு விடுகிறது. 3 மணி 40 நிமிடங்களுக்கு இந்த கிரகணம் நீடிக்கிறது. இது முழுசந்திரகிரகணமாக இருக்கும். சந்திரனின் பிம்பம் மங்கலாகிவிடும். புதன்கிழமை பிறந்தவர்களும் ஆயில்யம், அனுஷம், கேட்டை, மூலம், ரேவதி மற்றும் விருச்சிக ராசியில் பிறந்தவர்களும் சாந்தி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். கிரகணம் விட்டபின் சந்திர தரிசனம் செய்ய வேண்டும். இந்த நாளில் சூன்ய திதி என்பதால் தர்ப்பணம் செய்யக்கூடாது. கர்ப்பிணிகள் கிரகண நேரத்தில் சந்திரனை பார்க்க கூடாது.

* டிசம்பர் 10 சனிக்கிழமை மாலை 6.14 மணிக்கு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இரவு 7.58 மணிக்கு உச்சமாகி 9.47 மணிக்கு விடுகிறது. 3 மணி 37 நிமிடங்களுக்கு இந்த கிரகணம் நீடிக்கிறது. சனிக்கிழமை பிறந்தவர்களும் கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவோணம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களும் சாந்தி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். கிரகணம் விட்ட பின்பு சனிக்கிழமை இரவே தர்ப்பணம் செய்து கொள்ளலாம். இரவு 10 மணிக்கு சந்திர தரிசனம் செய்ய வேண்டும். அன்று பவுர்ணமி திதி என்பதால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சிரார்த்தம் செய்ய வேண்டும்.

கர ஆண்டில் சிறந்த கிழமை

கரதமிழ் புத்தாண்டில் நீங்கள் முக்கிய வேலை துவங்க இருந்தால் வியாழக்கிழமையை தேர்ந்தெடுங்கள். கிரக நிலைகளின் படி இந்த ஆண்டு வியாழக்கிழமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்நாளில் நவக்கிரக மண்டபத்திலுள்ள குருபகவானையும், சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தியையும் வழிப்பட்டு பணிகளை துவக்கினால் அது வெற்றிவாகை சூடும்.

நல்ல மாதங்களும், கவன மாதங்களும்

கரபுத்தாண்டில் நட்சத்திர வாரியாக சிறந்த மாதங்கள் மற்றும் சோதனையான மாதங்கள் பற்றிய விபரம் கீழே தரப்படுகிறது அசுவினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், சுவாதி, விசாகம், மூலம், திருவோணம், சதயம், பூரட்டாதி, ரேவதி ஆகிய 14 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் ஆண்டு முழுவதும் சோதனை குறைவாகவே இருக்கும். பரணி, பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆவணி முதல் கார்த்திகை வரை சோதனை ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சித்திரை முதல் ஆடி வரை சோதனையான காலகட்டம். கார்த்திகை, கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மார்கழி முதல் பங்குனி வரை சோதனை ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சித்திரை முதல் கார்த்திகை முடிய எட்டு மாதங்கள் சோதனையான காலமாகும். பூசம், அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆவணி முதல் பங்குனி வரையிலான எட்டு மாதங்கள் சோதனை ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சித்திரை முதல் ஆடி வரையும், மார்கழி முதல் பங்குனி வரையும் சோதனையான மாதங்கள். இந்த சமயங்களில் தேவையற்ற அலைச்சல், நிம்மதி குறைவு, பணப்பிரச்னை ஏற்படலாம். அவரவர் ஜாதகத்திற்கு ஏற்பவும், தெய்வ வழிப்பாட்டிற்கு ஏற்பவும் சோதனைகள் குறையும்.

ஒரே மாதத்தில் மூன்று கிரக பெயர்ச்சிகள்

புத்தாண்டில் குரு, ராகு, கேது கிரகங்கள் மே மாதத்தில் பெயர்ச்சியாகின்றனர். அதுவும் ஒரு வார இடைவெளிக்குள் இந்த பெயர்ச்சிகள் நடக்கிறது. எனவே ஒரு கிரகம் தரும் நற்பலனை மற்றொரு கிரகம் பறிக்கலாம் அல்லது ஒரு கிரகம் தரும் கெடுபலனை மற்ற கிரகங்கள் மாற்றியமைக்கலாம்.

* குருபகவான் மே9, திங்கள், அதிகாலை 1.09 மணிக்கு மீனராசியில் இருந்து மேஷராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

* ராகு, கேது கிரகங்கள் மே 16, திங்கள் காலை 9.55 மணிக்கு தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும், மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும் பெயர்ச்சியாகின்றன.

* சனிபகவான் டிசம்பர் 21, புதன் காலை 7.24 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

சித்திரையில் எத்தனை பண்டிகைகள்!

சித்திரை மாதம் திருதியை அன்று பகவான் விஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் செய்தார். ஆகவே, அன்று மத்ஸ்ய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத சுக்லபட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்வதால் அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

வருடத்திற்கு ஆறுமுறை அபிஷேகம் காணும் தில்லை நடராஜருக்கு வசந்த காலமான சித்திரை மாத திருவோண நட்சத்திர தினத்தன்று அந்த ஆண்டிற்குரிய அபிஷேகம் நடத்தப்படுகின்றது. திருவையாற்றில் உமையம்மையின் தரிசனம் பெற்ற திருநாவுக்கரசர், சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் இறைவனடி சேர்ந்தார். சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு, சுக்லபட்ச பஞ்சமியன்று ஆதிசங்கரர் ஜெயந்தியும், ராமானுஜர் திருநட்சத்திர சேர்ந்து கொண்டாடப்படுகிறது. ரமண மகரிஷியின் ஆராதனையும் சித்திரைத் திங்களில் நடைபெறுகிறது.

எமதர்மனின் கணக்கரான சித்ர குப்தன் தோன்றியது சித்திரை மாத பௌர்ணமி நாளில் தான். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்றுதான் நீலாதேவி மற்றம் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது. அன்னை மீனாட்சி, மதுரையில் சொக்கநாதரை மணந்ததும், சித்திரை மாத பவுர்ணமி தினத்தில் தான். கள்ளழகர் மதுரை வைகையாற்றில் சித்திரை மாத பவுர்ணமியில் விழா காண்கிறார். சித்திரை மாத அமாவாசையை அடுத்த சுக்லபட்ச திருதியை அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது. அன்று தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும். எந்தப்பொருள் வாங்கினாலும், எந்த செயல் செய்தாலும் அது மூன்று மடங்காக பெருகும் என நம்பப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா சித்திரை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment