Monday, April 11, 2011

ராமநவமி


மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால்தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது.

வழிபடும் முறை: ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயில்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்ட ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்.

பலன்: ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.

விஷ்ணு சகஸ்ரநாமம் சொன்ன பலன் கிடைக்க

ஸ்ரீராமராமராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம்ராமநாம வரானனே

இந்த மந்திரத்தை மூன்று தடவை கூறினால் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதும் சொன்ன பலன் கிடைக்கும்.

3 தடவை சொன்னா ஆயிரம் தடவை சொன்ன மாதிரி

ராமநாமத்தை மூன்று முறை சொன்னால் ஆயிரம் முறை சொன்னதாக அர்த்தம். இதற்கு காரணம் உண்டு. ராம என்ற சொல்லில் ரகர வரிசையில் ரா இரண்டாவது எழுத்து. ம என்பது ப, ப, ப,ப, ம என்ற ஸ்வர வரிசையில் ஐந்தாவது எழுத்து. இரண்டையும் பெருக்கினால் பத்து வரும். இதை மும்முறை சொன்னால் 10*10*10 = 1000 முறை சொன்னதாக பொருள் கொள்ளலாம்.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஒரு ராம பாடல்

கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க அருணாசல கவிராயர் பாடிய ராமநாடக கீர்த்தனையை ராகத்துடன் பாடுங்கள்.

கண்டேன், கண்டேன், கண்டேன்
சீதையை கண்டேன் ராகவா!
அண்டருங் காணாத அரவிந்த வேதாவை
லங்காபுரத்திலேயே தரவந்த மாதாவை(கண்)
காவி விழிகளில் உன் உருவெளி மின்ன
கனிவாய்தனிலே உன் திருநாமமே பன்ன
ஆவித்துணையைப் பிரிந்த மடஅன்னமானால்
நான் சொல்லுவதென்ன
பூவை திரிதடை நித்தம் நித்தம் சொன்ன
புத்தி வழியே தன்புத்தி நிலைமை என்ன
பாவி அரக்கியர் காவல்சிறை துன்ன
பஞ்சுபடிந்த பழம்சித்திரம் என்ன (கண்)

ராமனுக்கு பிடித்த 13

பொதுவாக 13 என்ற எண்ணை கண்டாலே அலறியடித்து ஓடுவார்கள். ஆனால் ராமபக்தர்களை பொறுத்தவரையில் இது ஒரு அருமையான எண். ராமமந்திரம் 13 அட்சரங்கள் கொண்டது. ஸ்ரீராம ஜயராம ஜய ஜயராம என்பதே ராமமந்திரம். இதில் 13 எழுத்துக்கள் உள்ளன. வடமாநிலங்களில் இந்த மந்திரத்தை தேரா அக்ஷர் என்று சொல்கிறார்கள். சைவத்திலும் ஸ்ரீ ருத்ரம் மந்திரம் ஓதும்போது சங்கர என்ற வார்த்தை 13 முறை வரும்.

தாய்லாந்தில் வித்தியாசமான ராமாயணம்

கம்பராமாயணத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் ராமதூதன் அனுமானை பிரம்மச்சாரியாக பார்த்திருக்கிறோம். ஆனால், தாய்லாந்து நாட்டில் அவரைத் திருமணமானவராக கூறுகிறார்கள். அந்நாட்டை ஆண்ட நான்காம் ராமன் ராமகியான்என்ற பெயரில் ராமாயணம் எழுதியுள்ளார். அதில் சொல்லப்பட்டுள்ள இந்த தகவல் புதுமையாக இருக்கிறது.சிவலோகத்தில் வாழ்ந்த புஸ்மலி என்பவள், ஒரு சாபத்தால் லவா என்ற நாடாண்ட மன்னன் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு சுவர்ணமாலி என்ற தங்கை இருந்தாள். பெண்ணாசை கொண்ட ராவணன் அவர்களைக் கடத்தினான். அவன் உறங்கும் சமயத்தில், அவனிடமிருந்த சுரங்கப்பாதை சாவியைத் திருடிய சகோதரிகள், அந்தப் பாதைவழியே தப்பி தங்கள் நாட்டுக்கு சென்றனர். அவர்களை கற்பிழந்தவர்கள் என சந்தேகித்த தந்தை, ராமதூதன் ஒருவன் வருவான். அவனால் மட்டுமே உங்களுக்கு விமோசனம் தர முடியும், என சொல்லி விரட்டிவிட்டார். அவர்கள் வெவ்வேறு இடங்களில் தங்கினர். அனுமன் சீதையை தேடி சென்ற போது, ஒரு வீட்டில் புஸ்மலியைப் பார்த்தார். அவளது அழகால் கவரப்பட்ட அவர், தன் காதலை வெளிப்படுத்தினார். அவள் ஏற்க மறுத்தாள், தான் கண்ணியத்துக்குரிய ராமபிரானின் தூதர் என்பதையும், அவர் சீதாவுக்காக தன்னிடம் தந்திருந்த மோதிரத்தையும் அவளிடம் காட்டியதும், அவள் மகிழ்ந்தாள். ராமதூதனே தனக்கு விமோசனம் தர முடியும் என்பதை அறிந்த அவள் அவரைத் திருமணம் செய்து கொண்டாள். தன் தங்கையைத் தேடிப்பிடித்து அவளையும் திருமணம் செய்ய வேண்டினாள். அனுமன் அவளைக் கண்டு பிடித்து திருமணம் செய்து கொண்டார். அவளிடம் இருந்த சுரங்கச்சாவியைக் கொண்டே அனுமன் ராவணனின் கோட்டைக்குள் எளிதாக புகுந்தார்.

குழந்தை பாக்கியத்துக்கு ராமனிடம் வேண்டுதல்

நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் ராமபிரானை மனதில் நினைத்து இந்த பிரார்த்தனையை செய்தால் ராம சகோதரர்களைப்போல் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள் என்பது ஐதீகம். நாராயணீயம் எழுதிய நாராயணபட்டத்திரி என்ற பிரார்த்தனையை எழுதியுள்ளார். இறைவா! தங்களிடம் ராவணவதத்தைக் குறித்து தேவர்கள் வேண்டிக் கொண்டார்கள். கோசலநாட்டில் ரிஷ்யசிருங்க முனிவர் புத்திரபேறுக்கான வேள்வியை செய்தார். தசரத மன்னரிடம் பாயாசம் கொடுக்கப்பட்டது. அதை அருந்தியதால் ஒரே சமயத்தில் தசரத மன்னரின் மூன்று மனைவியரும் கருத்தரித்தனர். பரதனோடும், லட்சுமணனோடும், சத்ருக்கனனோடும் தாங்களே ராமனாக அவதரித்தீர். இறைவா! ராமனாக அவதாரம் செய்த குருவாயூரப்பனாகிய தாங்கள் இந்திரனால் அனுப்பப்பட்ட ரதத்தையும், கவசத்தையும் ஏற்றுக்கொண்டீர்கள். ராவணனோடு சண்டை செய்து அவனுடைய எல்லா தலைகளையும் பிரம்மாஸ்திரத்தால் வெட்டி தள்ளினீர்கள். தீயில் குளித்த தூயவளான சீதையை திரும்பவும் ஏற்றுக் கொண்டீர்கள். வானர கூட்டங்கள் காயம்படாமல் இருந்தன. இறந்த வானரங்களை தேவர்கள் கூட்டம் பிழைக்க வைத்தது. இலங்கையின் மன்னனான விபீஷணனுடனும், பிரிய மனைவியான சீதாதேவியுடனும், அன்புக்குரிய லட்சுமணனுடனும் புஷ்பக விமானத்தில் உங்கள் சொந்த நகரமான அயோத்திக்கு சென்றீர்கள்.(இந்த பிரார்த்தனையை சொன்னால் குழந்தை பேறு மட்டுமின்றி, பால் வளம் பெருகும் என்பதும் ஐதீகம்).

இப்படி பிரார்த்தித்தால் வீட்டுக்கே வருவார் ராமர்

ராமபிரானை பற்றி சதாசிவ பிரம்மேந்திராள் சமஸ்கிருது பாடல் ஒன்று எழுதியுள்ளார். அந்த பாடலின் விளக்கத்தை ராமநவமி அன்று படித்தால், ஸ்ரீராமபிரான் நம் இல்லத்திற்கே எழுந்தருளினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த பிரார்த்தனையை மனஉருக்கத்துடன் செய்யுங்கள்.ஏ நாக்கே! ராம என்னும் அமுதத்தை பருகுவாய். ராமன் என்னும் சுவையை பற்றுவாய். பாவங்களின் தொடர்பை அது போக்கும். பலவிதமான பழரசத்தால் அது நிரம்பியது. பிறப்பு, இறப்பு, அச்சம், துன்பம் இவற்றை அது போக்கும். நியமம், ஆகமம் என்னும் எல்லா சாஸ்திரங்களின் சாரமாக இருப்பது ராமநாமமே. ராமனின் நாமமே இந்த உலகை பாதுகாக்கிறது. வெளிவேஷக்காரர்களையும் நல்லவர்களாக மாற்றுகிறது. சுகர், சவுனகர், கவுசிகர் ஆகியோர் தம் வாயால் ராம அமுதத்தை பருகினார்கள். தூயவர்களாகி பரமஹம்சர்களின் ஆஸ்ரமங்களிலேயே அவர்கள் பாடினார்கள். அத்தகைய ராம அமுதத்தை நாங்களும் பருகுகிறோம்.

ராமனுக்குள் அடங்கிய ரமா

சிலர் ஸ்ரீராம ஜெயத்தை வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற வேண்டுதல்களுக்காக எழுதுகின்றனர். இவை நிறைவேறுவது மட்டுமின்றி, அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியை இந்த மந்திரம் தரும்.ராம என்ற மந்திரத்துக்கு பல பொருள் உண்டு. இதை வால்மீகி மரா என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு. ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ரா என்றால் இல்லை, மன் என்றால் தலைவன். இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது ராமனின் பொருள்.

ஜெகம் புகழும் ஸ்ரீராமன் !

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

அறுபதினாயிரம் ஆண்டுகள் பிள்ளை இல்லாமல் தவித்த தசரத மன்னவன், கௌஸல்யா தேவியாரிடத்து ராமனைப் பெற்றார். சாட்சாத் நாராயணனே ராமனாகப் பிறந்தான் என்பது வரலாறு. வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே...(வேதத்தால் அறியப்படும் பரம்பொருளே ராமனாகத் தோன்றினான்) எனும் வரியே இவ்விஷயத்தில் சான்றாகும்.

ஸ்ரீராமன் எதற்காக அவதரித்தான் என்பது குறித்து அழகான விளக்கம் தருகிறார்கள் வைணவப் பெரியோர்கள்; பித்ரு வாக்ய பரிபாலனம்- இதுவே ஸ்ரீராம அவதாரத்தின் முக்கிய காரணம் என்கிறார்கள். அதாவது, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உலகில் நிலைநாட்டுவதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாம். இல்லையென்றால்... ஒரு தவறும் செய்யாதிருந்தும், 14 ஆண்டுகள் பூழி வெங்கானம் (காடு) நடந்திருப்பானா ?!

தந்தை வரட்டும்; கல்யாணம் முடிக்கலாம்....

இன்னொரு சுவையான நிகழ்ச்சியையும் பார்ப்போம். தாடகை வதத்தின் பொருட்டு ராமனையும், இலக்குவனையும் அழைத்துச் செல்கிறார் ஸ்ரீவிஸ்வாமித்ர முனிவர். அவர்கள் மிதிலா தேசத்தை அடைந்தபோது, சீதைக்கு சுயம்வர ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்துகொண்டிருக்கிறார் ஜனகர். பெரிய சபையில் சிவ தனுசு வைக்கப்பட்டிருந்தது. அதை நாணேற்றி முறிப்பவருக்கே தன்னுடைய மகள் சீதையை கொடுக்க இருப்பதாக அறிவிக்கிறார் ஜனகர். சிலர் முயற்சி செய்து தோற்ற பிறகு, வில்லை சற்றுப் பார்ததுவிட்டு வரும்படி ராமனிடம் சொல்கிறார் விஸ்வாமித்திரர். வில்லை நன்கு பார் என்று முனிவன் சொன்னதற்கான உட்கருத்தை அறிந்த ராமன், நாணேற்றி சிவதனுசை முறிக்கவும் செய்தான். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சீதை, மண மாலையோடு ராமனை நெருங்குகிறாள். அப்போது, ராமன் உரைக்கிறான்... வில்லைப் பார் என்றார் விஸ்வாமித்திரர். நான் பார்த்தேன்... அவ்வளவுதான். மற்றபடி இந்த கல்யாணமெல்லாம் என் தகப்பனார் வந்து தீர்மானிக்கவேண்டிய விஷயங்கள். அப்பா வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்றான். சீதையை மணக்கும் காலத்திலும் தசரதனது முடிவையே ஸ்ரீராமன் எதிர்நோக்கி இருந்தான் என்றால், அவன் தன் தந்தையின் மீது எவ்வளவு மரியாதை கொண்டிருந்தான் என்பதை நாம் உணரலாம்.

அவ்வளவு ஏன்... ராவண வதம் முடித்து, புஷ்பக விமானத்தில் அமர்ந்து அயோத்தியை நெருங்கும்போது, தனது தந்தையின் ராஜ்ஜிய பூமி வந்துவிட்டது என்றே சீதையிடம் கூறுகிறான்; தன்னுடைய ஊர் என்று சொல்லிக் கொள்ளவில்லை! மனிதனை, விலங்கினத்தில் இருந்து பிரித்துக் காட்டுவது அவனது பண்புகளே. நற்பண்புகளே மனிதனை செதுக்குகின்றன. ஸ்ரீராமனிடம் எதிரிகளும் போற்றும் குணநலன்கள் உண்டு.

தர்மமே வடிவெடுத்து வந்தது!

சீதையை அபகரிக்கத் திட்டம் தீட்டுகிறான் ராவணன். அதற்காக மாயாவியான மாரீசனது உதவியை நாடுகிறான். தனக்கு உதவாவிட்டால் மாரீசனை தீர்த்துவிடுவதாகவும் மிரட்டுகிறான் ராவணன். ஏற்கெனவே, தாடகை வதம் நிகழ்ந்தபோது, ஸ்ரீராமனால் அடித்து விரட்டப்பட்டவனே இந்த மாரீசன். எனவே, சீதையை அபகரிக்கும் திட்டத்தைக் கைவிடும்படி, ராவணனிடம் மன்றாடுகிறான். அப்போது முன்பு ஸ்ரீராமனிடம் அடிபட்டதை நினைவு கூர்ந்தான். ?அவனது உடல் நடுங்கியது. ஆனால் வார்த்தைகள் தெளிவாய் வந்து விழுந்தன. முன்பு ராமன் என்னை அடித்தபோது பிரம்மச்சாரி பிள்ளையாக இருந்தான். அப்போதே அவன், நெருங்க முடியாத திறன் உடையவனாக, தேஜஸ் உடையவனாக இருந்தான். இப்போது ஜனகன் மகளை. சாட்சாத் ஸ்ரீமகாலட்சுமியைக் கைப்பிடித்திருக்கிறான். எனவே, இன்னும் ஒளிமிக்கவனாக; நெருங்க ஒண்ணாத வடிவுடையவனாகத் திகழ்வான் என்றான். அப்ரமேயம் ஹி தத் தேஜா யஸ்யஸா ஜநகாத்மஜா என்பது மாரீசன் வாக்கு. மேலும், தர்மமே வடிவெடுத்தவன் ஸ்ரீராமன் என்பதையும் ராவணனுக்கு உணர்த்தத் தவறவில்லை மாரீசன். ராமோ விக்ரஹவாந் தர்ம; எவ்வளவு உயர்ந்த வாக்கு இது. நம்முடைய நண்பர்களே நம்மைப் பாராட்டத் தயங்குவர். ஆனால், எதிரியான மாரீசனும் ராமனை தர்மமே வடிவெடுத்தான் என்று கொண்டாடுகிறான் என்றால், ஸ்ரீராமன் எத்தகைய பண்பாளன் என்பதை நீங்கள் உணரலாம்.

குணத்தில் தோற்ற விபீஷணன்; வீரத்தில் தோற்ற ராவணன்!

யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: என்று போற்றுகிறான். அதாவது, தனது பராக்கிரமத்தைக் காட்டி எதிரியை வியக்கச் செய்பவன் என்று ஸ்ரீராமனைக் கொண்டாடுகிறான். ராமனின் வீரத்தில் தோற்றான் ராவணன், ராமனின் அழகில் தோற்றாள் சூர்ப்பணகை. ராமனின் குணத்தில் தோற்றான் விபீஷணன். இது, ஸ்ரீராமனின் தனிப் பெருமை அல்லவா ? குகனோடும் ஐவரானோம் என்று படகோட்டி குகனையும் தன்னுடைய சகோதரனாக ஏற்றுக்கொண்ட தன்மை... இன்றளவும் நாம் போற்றும் ஸ்ரீராமனின் சிறப்பல்லவா?

திருப்புட்குழி விஜயராகவன்

பெற்றெடுத்த தந்தைக்கே ஈமச்சடங்குகளைச் செய்ய பலபேர் இன்று தயங்கிறபோது, பறவையான ஜடாயுவை தன் தந்தையாகவே பாவித்து, அந்திம க்ரியைகளைச் செய்தான் ராமன். இன்றைக்கும் காஞ்சிபுரம் அருகில், திருப்புட்குழி தலத்தில், ஜடாயு மகாராஜாவுக்கு ஈமச்சடங்குகள் செய்தவனாக, ஸ்ரீவிஜயராகவனாக தரிசனம் தந்தருள்கிறான் ஸ்ரீராமன். எண்ணிறந்த குணநலன்கள் ஸ்ரீராமனிடம் இருந்தாலும், அடுத்தவரது துன்பத்தை, தனது கஷ்டமாகக் கருதி, அவற்றைத் தீர்க்க முற்படுவது, ஸ்ரீராமனின் தலையாய பண்பாகும். வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி து:க்கித: என்ற பிரமாணத்தின் மூலம் இதை நாம் அறியலாம். அடுத்தவர் நலனை கருத்தில்கொண்டு, அத்தனை துன்பங்களையும் தானே எவனொருவன் ஏற்றுக் கொள்கிறானோ, அவனையே உத்தமன் எனப் போற்றுகிறோம். எனவேதான் ஸ்ரீராமன் தான் முடிசூட்டிக் கொள்ளாமல், கொடிய கானகம் சென்றான். தன் உடன்பிறவாத் தம்பிகளான சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் முடிசூட்டிய பிறகே, தனது முடிசூட்டு விழா நடைபெற வேண்டும் என்பது ராமனின் அபிப்பிராயமாம். ஆகவேதான், முதல் தடவை பட்டாபிஷேகம் தடைப்பட்டது. விபீஷணனுக்கு முடிசூட்டிய பிறகு, தான் செய்யவேண்டியதை செய்து முடித்ததாக திருப்தி கொண்டானாம். சீதையைப் பிரிந்து துன்பக் கடலில் மூழ்கியிருந்தபோதிலும், விபீஷணன் முடிசூட்டிக் கொண்டதும், மகிழ்ச்சியில் திளைத்தானாம் !

புல் - பூண்டுக்கும் மோட்சம் தந்தவன்

அதேபோல், தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுந்தம் புறப்படும்போது, அயோத்தி வாழ் மக்கள் அனைவரையும் தன்னுடன் மேலுலகத்துக்கு அழைத்துச் சென்றான். அதோடு நில்லாமல் அயோத்தியில் இருந்த செடி, கொடி, புல், பூண்டு முதலியவற்றுக்கும் முக்தியை நல்கினான் எனில், ஸ்ரீராமனின் பெருமையை என்னவென்பது?! பரமசிவனாரும் எப்போதும் தியானித்துக் கொண்டிருப்பது ஸ்ரீராமனைத்தானே! பார்வதிதேவிக்கு அவர் உபதேசித்தது ஸ்ரீராம நாமத்தைத்தானே !

இன்றைக்கும் காசியில் ஒரு நம்பிக்கை உண்டு. எவர் ஒருவர் காசியில் மரித்தாலும், அவர் நற்கதி அடையும் பொருட்டு, அவருடைய செவியில் ஸ்ரீராம தாரக மந்திரத்தை பரம சிவனே உபதேசிக்கிறார் என்பர். எனவேதான் ஸ்ரீநம்மாழ்வாரும் கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ - என்று போற்றுகிறார். எனவே, நாமும் ஸ்ரீராமநவமி தினத்தில் ஸ்ரீராமனைத் துதித்து இவ்வுலக இன்பங்களை குறைவில்லாமல் பெறுவதோடு மறுமைக்கும் நன்மையைச் சேர்த்துக் கொள்வோம்.

ஜடாயு குண்டம்

வைதீஸ்வரன் கோயிலில் ஜடாயு குண்டம் எனும் பகுதி உள்ளது. இங்குதான் ஜடாயுவுக்கு ஸ்ரீராமன் தகனக் கிரியை செய்தார் என்பது நம்பிக்கை. புல் என்றால், ஜடாயு; ரிக்- வேதம்; வேள் - முருகன் இந்த மூவரும் வழிபட்டதால் இந்தத் தலத்தை புள்ளிருக்கு வேளூர் என்றும் போற்றுவர். ஜடாயு குண்டத்துக்கு எதிரில் ஸ்ரீராமன், லட்சுமணன் முதலானோரின் திருவுருவங்களையும் தரிசிக்கலாம். இந்தக் குண்டத்தில் இருக்கும் சாம்பலைச் சேகரித்து நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள் பக்தர்கள்.

வினைகள் தீர்க்கும் வீரராகவர்

சென்னையில் இருந்து சுமார் 47 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவள்ளூர். இங்கே கோயில் கொண்டிருக்கும் பெருமாள் ஸ்ரீவீரராகவர் எனும் திருநாமத்துடன், பாம்பணையில் பள்ளி கொண்ட கோலத்தில் சேவை சாதிக்கிறார். நாபிக்கமல பிரம்மனுக்கு இடக்கையால் பிரணவ தத்துவத்தை உபதேசித்தவாறும், வலக் கரத்தை சாலிஹோத்ர முனிவரின் சிரசில் வைத்து அபயப் பிரதானம் செய்தவாறும் காட்சி தருவது விசேஷம்.

தசரதன் அருள்பெற்ற திருப்புல்லாணி

பூரி ஜெகந்நாதருக்கும் முற்பட்டவர் திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர்; இவர், 72 சதுர் யுகங்களுக்கு முன் தோன்றியவராம் ! திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தத் தலம், ராமேஸ்வரத்துக்கு அருகில், சேதுக்கரையிலிருந்து வடக்கே, சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே, ஆதிஜெகந்நாதர் நித்யவாசம் செய்த அரசமரத்தைத் தரிசிக்கலாம். புல்லவர், கண்ணுவர், காலவர் ஆகிய முனிவர்களுக்குத் தங்கமயமான அச்வத்த மரமாகக் காட்சி தந்தாராம் பெருமாள். இவர்கள் வேண்டுகோளை ஏற்று, இங்கேயே கோயில் கொண்டாராம். அதுமட்டுமா? நான்கு வேதங்களும் உனக்கு நான்கு பிள்ளைகளாகப் பிறக்கும் என்று தசரதன் அருள்பெற்றதும், சீதையைத் தேடிவந்த ஸ்ரீராமருக்குவில் அருளப்பெற்றதும் இந்தத் தலத்தில்தான்!

வில் ஊன்றிய தலம்

ராமேஸ்வரத்துக்கு அருகில் வில்லூண்டி எனும் தலம் உண்டு. சீதாதேவியின் தாகம் தணிக்க, ஸ்ரீராமன் தரையில் தனது வில்லை ஊன்றி, நன்னீர் பெற்ற திருத்தலம் இது. வில் ஊன்றி என்பதே நாளடைவில் வில்லூண்டி என மருவியதாகச் சொல்கிறார்கள். அருகில் கடல் இருக்க, இந்த இடத்தில் மட்டும் நன்னீர் கிடைப்பது அற்புதமே !

ஸ்ரீராம தீர்த்தம்

ஆந்திர மாநிலம் - விஜய நகரத்திலிருந்து சுமார் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது ராம தீர்த்தம் எனும் தலம். இங்கு கருவறையில் சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் காட்சி தருகிறார் ஸ்ரீராமன். ஆனால் அனுமன் இல்லை. ஸ்ரீராமன் அனுமனைச் சந்திப்பதற்கு முந்தைய நிலை இது என்கிறார்கள்.

சங்கு சக்கரத்துடன் ஸ்ரீராமன்

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற கோயில்களில், பத்ராசலம் ஸ்ரீராமன் ஆலயமும் ஒன்று. தண்டகாரண்யத்தில், மகாமேரு முனிவரின் மகளான பத்ரா என்பவள், தவம் செய்து அருள் பெற்ற தலம் இது. அரசு பணத்தைச் செலவழித்துக் கோயில் கட்டினார் என்பதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார் பத்ராசலம் ராமதாஸர். அவரைக் காப்பாற்றும்பொருட்டு, தப்பி லட்சுமணனுடன் வந்து, அந்த தேசத்தை ஆண்ட நவாப்பிடம் கோயில் கட்டியதற்கான தொகையை ஒப்படைத்து ஸ்ரீராமன் அருளாடல் புரிந்த தலம்! நான்கு கரங்களுடன் சங்கு - சக்கரம் ஏந்தி, பத்ராசலம் ஸ்ரீராமர், திகழ்வது அற்புதம்!

ஸ்ரீ ராமருக்கு விருந்து

பரத்வாஜர் ராமனுக்கு விருந்து படைத்த கட்டத்தைப் பாட்டிகள் பாடும் விதமே அலாதியானது.

வைகுண்டவாசருக்கு வாழை இலை போட்டு
வாழை இலைதன்னை வடக்கே நுனி போட்டு
காட்டுச் சிறு கிழங்கும் கந்த மூலம் பழமும்
தூது விளங்காயுடனே சுண்டைக்காய் பச்சடியும்
அஞ்சு வகைப் பச்சடியும் ஆன நல்ல தாளிதமும்
பத்துவகைப் பச்சடியும் பால் குழம்பும் சர்க்கரையும்
பொறிச்ச பொறி கறியும் பொன்போல் சிறு பருப்பும்
புத்துருக்கு நெய்யும் புனுகு சம்பாப் பாயசமும்
தேங்காயும் சர்க்கரையும், தித்திக்க மோதகமும்
பச்சுன்னு கீரையும் பால் வடியும் மாவடுவும்
வேர்புறத்திலே வெடித்த வேண பலாச்சுளையும்
தார் பழுத்துச் செறிந்த தேனான கதலிகளும்
கொத்தோடு மாம்பழமும் கொம்பிலுள்ள நல்தேனும்
கொய்யாப் பழங்களும் கொடி முந்திரிப் பழமும்
கிச்சிலிப் பழங்களும் கிளுகிளுத்த மாதுளையும்
வெள்ளைக் கடுக்காயும் வெடுக்குன்னு இஞ்சியும்
பச்சை மிளகும் பால் வழியும் களாக்காயும்
நேர்த்தியாய் நெல்லிக்காய் மணமுள்ள மாகாளி
நார்த்தை கடநார்த்தை நறுமண எலுமிச்சை
கடுகு மாங்காயும் கார மிளகாயும்

இப்படி முற்றிலும் அடுக்களைப் பெண்களாகப் பாட்டுச் செய்தவர்கள், போஜனம் முடித்த ராமன், காலும் அலம்பி கனிவாயும் கொப்புளிச்சு ஆசமனம் பண்ணி அவருமங்கே வீற்றிருந்தார் எனும் போது கவிகளாகவும், சாஸ்திர ஆசார சீலைகளாகவும் ஆகி விடுகின்றனர். கையலம்பி வந்ததும் ஜீர்ணம் ஆவதற்காக, ஏலமுடன் சுக்கு எல்லார்க்கும் தாம் கொடுத்தார் என்று மறக்காமல் சொல்வதை, பாட்டிமார் பாஷையிலேயே, பொகு அழகு என்று சிலாகிக்கலாம்.

அப்படி என்ன பேரழகி அவள்?

ராமர் ராவணனைப் போரில் வென்றார். இலங்கை அரசனாக விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் சூட்டினார். விழா முடிந்ததும் சீதை, லக்ஷ்மணன் இவர்களுடன் வானரங்களையும் அழைத்துக் கொண்டு, இலங்கையை விட்டு புஷ்பக விமானத்தில் புறப்பட்டார். விமானம் கிஷ்கிந்தையை அடைந்தது. விமானத்திலிருந்து ராமர் கீழே இறங்கினார். கிஷ்கிந்தைப் பெண் குரங்குகள் அங்கு ஓடோடி வந்தன. விமானத்தில் தாவி ஏறின. அவற்றுக்குத் தங்கள் கணவரைப் பார்ப்பதற்கும் முன்னால் சீதையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல். அப்படி என்ன பேரழகி அவள்? அவளை மீட்பதற்காக எத்தனை பெரிய போர்? என்ற சிந்தனையோடு பார்த்தன. சீதையைச் சுற்றிச் சுற்றி வந்த பெண் குரங்குகள் தங்களுக்குள் பேசிக் கொண்டன; இது என்ன பிரமாத அழகோ? நம்மைப் போல் இவளுக்கு ஒரு வால்கூட இல்லையே!

No comments:

Post a Comment