Saturday, May 7, 2011

ராமானுஜர் ஜெயந்தி


வைணவம் வளர மிகவும் பாடுபட்டவர் ஸ்ரீராமானுஜர். அதில் அவருக்கு எவ்வளவோ சங்கடங்கள் ஏற்பட்டன. இருந்தாலும், அதையெல்லாம் எதிர்கொண்டு பல புரட்சிகளைச் செய்தார். ஆரம்ப காலத்தில் அவர் குருகுல வாசம் செய்யும்போதே அவருக்குப் பிரச்சினை ஏற்பட்டது. அவர் கஞ்சியை அடுத்த திருப்புட்குழியில் யாதவப் பிரகாசர் என்ற அத்வைதியிடம் வேதாந்தக் கருத்துக்களைக் கற்று வந்தார். அப்போதே அவருக்கும் யாதவப் பிரகாசருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. அதன் காரணமாக ராமானுஜரின் பெருமை வளர்ந்தது. அதைக் கண்டு ராமானுஜர்மேல் வெறுப்படைந்த யாதவப் பிரகாசர் ராமானுஜரை கொலை செய்யவும் துணிந்து திட்டமிட்டார். அந்த சதியிலிருந்து ராமானுஜரின் சிற்றன்னை மகனான கோவிந்த பட்டரால் ராமானுஜர் காப்பாற்றப்பட்டார். எம்பார் என்ற கோவிந்த பட்டரின் முயற்சியாலேயே நாம் ராமானுஜரின் அருளைப் பெறுகிற பேறைப் பெற்றோம். பிற்காலத்தில் யாதவப் பிரகாசரே இராமானுஜரைச் சரணடைந்து அவரின் சீடராக மாறினார். அதுபோல மற்றுமொரு அத்வைதியான யக்ஞமூர்த்தி என்பவர் ஸ்ரீரங்கத்தில் ராமானுஜரிடம் 18 நாட்கள் வாதிட்டார். ராமானுஜர் வாதில் தோற்றுவிடுவாரோ என்ற நிலை ஏற்பட்டது. 18-ஆம் நாள் இரவு, வாதில் தாம் தோற்று தம்மால் வைணவத்திற்குக் களங்கம் ஏற்பட்டு விடுமோ என்று மனங்கலங்கிய ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனைப் பிரார்த்தனை செய்து கொண்டே நித்திரையில் ஆழ்ந்தார். காஞ்சி வரதன் அவர் கனவில் தோன்றி, ஆளவந்தாரின் மாயாவாத கண்டனத்தை துணைகொண்டு யக்ஞமூர்த்தியிடம் வாதாடுக ! நீரே வெற்றி பெறுவீர்; கவலை வேண்டாம் என்று தெரிவித்தார்.

அடுத்த நாள் வாதாடச் சென்ற ராமானுஜரைப் பார்த்த யக்ஞமூர்த்தி, அவரின் தேஜஸைக் கண்டு ராமானுஜரின் காலடியில் விழுந்து, உமது பெருமை தெரியாமல் வாதாடிவிட்டேன். எனது வாதங்களைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் என் மேல் பரிவு கொண்டு உமது சீடராக ஏற்று அருள்புரிய வேண்டும் என்று வேண்டிட, அவரை சீடராக ஏற்ற ராமானுஜர் யக்ஞமூர்த்திக்கு, அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு தம்முடனே வைத்துக்கொண்டார். மேலும் வைணவ சித்தாந்தங்களை அவருக்கு உபதேசித்து, அவருக்கென்று ஒரு மடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்து, அவரை பலர் குருவாக ஏற்றுக்கொள்ள வழிவகுத்தார். இவரின் குரு பக்தியைப் பலரும் போற்றும்படி ராமானுஜரின் ஆணைப்படி நடந்து வந்தார். அதற்கேற்றாற்போல் ஒரு சம்பவமும் நடந்தது. ராமானுஜர் மடமும் யக்ஞமூர்த்தியின் மடமும் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் இருந்தது. இரண்டுமே ராமானுஜர் மடம் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. ஒருசமயம் ஸ்ரீரங்கத்திற்கு வந்த யாத்ரிகர்கள், ராமானுஜர் மடம் எங்கேயுள்ளது? என்று விசாரிக்க, வழி சொன்னவர்கள், இங்கு ராமானுஜர் மடங்கள் இரண்டு உள்ளன. எங்கு செல்ல வேண்டும்? என்று கேட்க, அவர்கள் விஷயங்களைத் தெரிந்துகொண்டு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (யக்ஞமூர்த்தி) மடத்திற்குச் சென்றனர். இந்த விவரத்தை அறிந்த அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திகைப்படைந்து , பகவத் ராமானுஜருக்கு ஒப்பாக இருக்க எனக்குத் தகுதியில்லை. எனவே எனக்கென்று தனி மடம் வேண்டாம். நானும் பகவத் ராமானுஜரின் மடத்திலேயே தங்கி அவருக்கே சேவை செய்ய விரும்புகிறேன் என்று சொல்லி, தமது மடத்தை இடித்துத் தள்ளிவிட்டு ராமானுஜர் மடத்திற்கே வந்துவிட்டார். இவரின் ஞானசாரம், பிரமேய சாரம் என்ற படைப்புகள் வைணவ உலகில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

ராமானுஜருக்கு உபதேசம்: திருக்கோஷ்டியூரில் வசித்த திருக்கச்சி நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் வந்தார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, யார்? என்று கேட்க, நான் ராமானுஜன் வந்திருக்கிறேன், என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, நான் செத்து வா! என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் அடியேன் வந்திருக்கிறேன் என்றார். அவரை அழைத்த நம்பி, ஓம் நமோநாராயணாய என்ற மந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார்.ஆனால், ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார். கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார். மகிழ்ந்த நம்பி நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார் என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார்.ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே நம்பியின் வீடு இருக்கிறது. இந்த வீடு கல்திருமாளிகை என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.

No comments:

Post a Comment