Saturday, May 7, 2011

ஆதிசங்கரர் அவதாரம்!


கருணையே மிகச்சிறந்த அஸ்திரம் என்கிறார் ஆதிசங்கரர். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இந்து மதத்துக்கு புத்தெழுச்சி யூட்டி, அனைத்து மக்களும் நலம்பெற பல ஆன்மிக வழிகளைக் கூறியவர் ஆதிசங்கரர். பூவுலக மக்களுக்கு ஞானத்தை உணர்த்தவும், தர்மத்தை வலியுறுத்தவும், யக்ஞங்கள் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள் பக்தி ஒன்றினாலேயே உயர்வதற்கும் எண்ணற்ற பாடல்களை அருளிச் செய்தார் அன்பே உருவான சங்கரர். ஆதிசங்கரருக்கு பகவத் பாதர் என்ற திருநாமமும் உண்டு. கேரள மாநிலம் எர்ணாகுளம் காலடி என்ற கிராமத்தில் சிவகுரு - ஆர்யாம்பாள் என்ற தம்பதியருக்கு திருச்சூர் வடக்கு நாதர் அருளால் அவதரித்தவர் சங்கரர். சங்கரரின் உபநயனத்திற்கு முன்பே தந்தை சிவகுரு இறைவனடி சேர்ந்தார். பெற்றோர் செய்ய வேண்டிய உபநயனம் உறவினர்களால் செய்யப்பட்டது. ஆதிசங்கரர் குருகுலம் சென்று படிக்கும்போது, அன்றாடம் உஞ்சவிருத்தி செய்து (பிஜை) உணவு கொண்டு வருவார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த அவர், தன் விரதத்தை முடிக்க அயாசகன் என்பவர் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷõம் தேஹி என அழைத்தார்.

அயாசகனின் மனைவி, தானம் கொடுக்க எதுவும் இல்லாததால், தன்னிடமிருந்த ஒரு காய்ந்த நெல்லிக்கனியை பிøக்ஷ இட்டாள். இந்தக் கருணைச் செயல், சங்கரரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. அக்குடும்பத்தின் வறுமை நீங்க, லட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். 19வது ஸ்லோகம் சொன்னவுடன், அந்த ஏழை பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது. இது சங்கரர் செய்த அற்புதம். அறத்தை நிலை நிறுத்தவே சங்கரரின் அவதாரம் என்றாலும், அன்பின் சக்தியால் நிகழ்த்திய ஆச்சரியம் இது ! அற்புதங்களை விட அன்பே முக்கியம். சங்கரர் இயற்றிய முதல் கிரந்தம் கனகதாரா ஸ்தோத்திரம் தான். எட்டு வயது பாலகனான சங்கரர் அன்னை ஆர்யாம்பாளிடமிருந்து சந்நியாசம் பெறுவதற்கு சூர்ணா நதிக்கரையில் பட்டபாடு- அன்னையின் அன்புப் பிடியிலிருந்து அவிழ்த்துக் கொள்ள தவித்த தவிப்பு- படிக்கும்போதே கல்லும் கரையும். அன்புமயமான சங்கரர் அன்னையிடம், தாயே, கல்யாணம், குடும்பம், குழந்தை என்று நான் ஆகிவிட்டால் இந்த உலகத்திற்காக யார் கவலைப்படுவது? என்று தாயிடம் கேட்கும்போது, அகிலத்திற்கே அன்பைப் பொழிய வேண்டும் என்ற கருணாமூர்த்தியாக திகழ்கிறார். அந்திம காலத்தின் போது வந்து உங்கள் ஈமக்கிரியைகளைச் செய்வேன் என்று தாயிடம் வாக்களித்துச் செல்லும்போது- அன்புமிக்க ஒரு மகனாக விளங்குகிறார்.

நர்மதை நதிக்கரையில் குரு கோவிந்த பகவத்பாதரைக் கண்டவுடன் குருவையும் கோவிந்தனையும் இணைத்து பஜகோவிந்தம் என்ற துதியைப்பாடி, நமக்கெல்லாம கோவிந்தனின் அருளைப் பெறும்படி செய்த அன்பை எப்படிச் சொல்வது ! காசிமா நகரத்தில், சநந்தனர் என்ற சீடனை மற்ற சீடர்கள் தவறாக நினைக்க, அவர்களுக்கு சநந்தனரின் குரு பக்தியை விளக்க கங்கை நதியில் தாமரையை மலரச் செய்து உணர்த்திய அன்பு- சநந்தனரை பத்மபாதராக்கிய பிரிவு... கங்கா நதி தீரத்தில் சண்டாளனாக வந்த பரமேஸ்வரனைக் குறித்து மனீஷா பஞ்சகம் என்ற அற்புதமான பாடலைப் பாடி நம்முடைய மன மாசுகளை எல்லாம் மாற்றிய மனித நேயம்... பிரயாகையில், மீமாஸ்சக கொள்கையில் இருந்த குமரிலபட்டருக்கு அத்வைதத்தை உபதேசித்து ஆட்கொண்ட அன்பிற்கு ஈடு இணையே இல்லை. மீமாஸ்சகர்களின் முதல் எதிரி கர்மாக்களை எல்லாம் நீத்த துறவிகள்தான். நர்மதை நதிக்கரையில் உள்ள மாகீஷ்மதி நகரிலுள்ள தீவிர மீமாஸ்சகரான மண்டன மிஸ்ரரை வாதத்தில் வென்று, அவருக்கு சுரேஸ்வரர் என்ற தீக்ஷõநாமம் சூட்டி அன்பு சீடராக்கிக் கொண்டார். மண்டன மிஸ்ரரின் மனைவியான சரஸவாணியின் சிக்கலான கேள்விகளுக்கு அழகாக விடை சொல்லி, சரஸவாணியை சாரதாம்பிகையாக சிருங்கேரியில் ஸ்தாபித்து வழிபாடு செய்தார்.

ஸ்ரீசைல ÷க்ஷத்ரத்தில் கோயில்கொண்டுள்ள மல்லிகார்ஜுனரைக் கண்ட மாத்திரத்தில் அன்பு பொங்க- பக்தி வெள்ளம் கரை புரண்டோட நூறு பாடல்களைப் பாடி மகிழ்ந்தார். மனம் மகேஸ்வரனின் திருவடிகளை நாடி அங்கேயே நிலை பெற்று விடுவதே பக்தி என்று நமக்கெல்லாம் அன்பில் செய்த உபதேசமே அது ! தன்னை வெட்ட வந்த காபாலிகனிடமும், அன்புடனே உரையாற்றிய அற்புதத்தையும் காண்கிறோம். அறிவினால் மட்டுமே மக்களின் சமய உணர்ச்சிகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்று உணர்ச்சிகளில் பிறப்பிடமாகிய இதயத்தில் பக்தியையும் அன்பையும் ஊன்றினார். அவர் தனது அதிநுட்பமான அறிவினால் மட்டுமே இதர மதங்களை எல்லாம் வென்று விட்டதாகச் சொல்ல முடியாது. அவர் எந்த தத்துவங்களையெல்லாம் போதித்தாரோ அத்தனைக்கும் அவரே நடமாடும் சான்றாக இருந்தார். உலகிலுள்ள சகல ஜீவராசிகளையும் தம்மில் கண்டு, தம்மை சகல ஜீவராசிகளிடமும் கண்டு பேரன்பின் உருவமாகவே திகழ்ந்தார். பயங்கரமான வழிபாடுகளையும், இந்திரிய வேகத்தையும் மக்கள் மனதிலிருந்து அகற்றி, அன்புருவான ஆண்டவனை அன்பாலே போற்றி, அனைவருடனும் அன்பு பூணும் பாங்கினை உணர்த்தி, ஈசன், அம்பிகை, நாராயணன், விநாயகர், முருகன், ஆதித்யன் மீதான ஆறுவித சாத்வீக ஷண்மத வழிபாட்டு முறைகளை வகுத்தார்.

தொழு நோயால் பீடிக்கப்பட்டு உயிரைவிட எண்ணிய வாலிபன் ஒருவனை அன்பின் மிகுதியால் அவனுடைய நோயைத் தீர்த்து சீடனாக்கிக் கொண்ட கருணையை என்ன சொல்வது? சௌசாம்பிகா நகரில் தங்களது ஒரே புதல்வனை இழந்து அவன் சடலத்தின்மீது விழுந்து இதயம் பிளக்க கதறிய பெற்றோர்களைக் கண்டு பரிதவித்த வள்ளலல்லவா சங்கரர் ! கருணை காட்ட வேண்டும் என்று ஈசனிடம் துதித்து அவனை மீட்டுக் கொடுத்த அற்புதத்தை என்னென்பது ! ஸ்ரீ வலி ÷க்ஷத்ரத்தில் ஊமைப் பிள்ளையை அழைத்து வந்து தன்னைச் சரணடைந்த பெற்றோர் மகிழ, அத்வைதம் பேச அருள்புரிந்த கருணை வள்ளலல்லவா சங்கரர் ! அவனைத் தன் சீடனாக்கிக் கொண்டு ஹஸ்தா மலகர் என்று பெயரிட்டு மகிழ்ந்த அன்பை வர்ணிக்க முடியாது. சிருங்கேரியில் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த சமயம், அறிவு குறைந்த ஆனந்த கிரி என்ற சீடனை மற்ற சீடர்கள் அலட்சியப்படுத்தியதைக் கண்டு, ஆனந்த கிரியை அறிவுக்களஞ்சியமாக்கி அனுக்ரஹம் செய்து , கடல் மடை திறந்தாற் போன்று தோடகாஷ்டகம் பாட வைத்த அன்பு சிலிர்க்க வைக்கிறது. கிரியை தோடகாச்சார்யார் என்ற தீக்ஷõ நாமம் சூட்டி மகிழ்ந்தார். சங்கரர்.

அனைத்தையும் துறந்த அற்புதத் துறவி அன்பின் உருவமாகவே இருந்தார். அந்திமக் காலத்தில் வருவதாக அன்னைக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது. அன்னை ஆர்யாம்பாளின் ஆயுள் முடியும் தருணத்தை ஞான திருஷ்டியினால் அறிந்த சங்கரர் காலடி சென்று தாயின் அருகில் அமர்ந்து அன்னையை மடியில் கிடத்திக்கொண்டு, மாத்ருகா பஞ்சகம் பாடினார். தாயின் வயிற்றில் பிள்ளை கருவாகி, பிறந்து வளரும் எல்லா நிலைகளிலும் தாயின் ஒவ்வொரு தியாகத்தையும், அனுபவித்த ஒவ்வொரு இன்னல்களையும் சொல்லிப் பாடுகிறார். அன்பின் மொழியிலேயே பாடுகிறார். ஒவ்வொரு தாயின் வயிற்றில் பிறந்த மகனும் ஆச்சார்யாளின் அடி பற்றி, அன்னைக்கு அன்பைக் கொடுத்து அருளையும் ஆசியையும் பெற வேண்டும். உலகத்திற்கே குருவாக இருந்தாலும் தாய்க்கு மகன்தானே ! தாய் அன்பிற்கு இணையே இல்லை. வயிற்றில் சுமந்த தெய்வத்தைத் தன் தோளில் சுமந்து ஈமச் சடங்குகளை செய்தார் சங்கரர் ! திசங்கரர் அகிலம் எங்கும் அத்வைதத்தை நிலை நாட்டினார். ஆறு சமய வழிபாடுகளையும் நம் போன்றவர்களுக்காவே செய்தார். ஆலயங்களுக்குச் சென்று ஆண்டவனைப் பாமாலைகளால் அர்ச்சித்தார். அறிவால் சிலரையும், அன்பினால் பலரையும் ஆட்கொண்டார். அம்பிகையின் சௌந்தர்யத்தை அழகின் அலைகளாகப் பாடி ஆனந்தம் அடைந்தார். அனைத்து தெய்வங்கள்மீதும் பேதம் இல்லாமல் பாடி அருளினார். அத்தனை உபநிஷதங்களுக்கும் உரை எழுதினார். வருங்கால மக்கள்மீது உள்ள அன்பினால் பக்தி, கர்மம், ஞானம் என்ற எல்லா மார்க்கங்களையும் உணர்த்தினார். ஞான சிம்மமாக, அன்பின் வடிவமாக அருள் அரசு செலுத்தினார் ஸ்ரீ ஆதிசங்கரர். எல்லா மதங்களும் அன்பை ஏற்றுக் கொள்ளும். அன்பிற்கு அழிவே இல்லை. ரக்தாக்ஷி ஆண்டு வைகாசி மாதம் சுக்கில பட்ச ஏகாதசி அன்று அன்பே உருவான ஆதிசங்கரர் இறைவனோடு ஐக்கியமானார் !

No comments:

Post a Comment