வைணவம் வளர மிகவும் பாடுபட்டவர் ஸ்ரீராமானுஜர். அதில் அவருக்கு எவ்வளவோ சங்கடங்கள் ஏற்பட்டன. இருந்தாலும், அதையெல்லாம் எதிர்கொண்டு பல புரட்சிகளைச் செய்தார். ஆரம்ப காலத்தில் அவர் குருகுல வாசம் செய்யும்போதே அவருக்குப் பிரச்சினை ஏற்பட்டது. அவர் கஞ்சியை அடுத்த திருப்புட்குழியில் யாதவப் பிரகாசர் என்ற அத்வைதியிடம் வேதாந்தக் கருத்துக்களைக் கற்று வந்தார். அப்போதே அவருக்கும் யாதவப் பிரகாசருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. அதன் காரணமாக ராமானுஜரின் பெருமை வளர்ந்தது. அதைக் கண்டு ராமானுஜர்மேல் வெறுப்படைந்த யாதவப் பிரகாசர் ராமானுஜரை கொலை செய்யவும் துணிந்து திட்டமிட்டார். அந்த சதியிலிருந்து ராமானுஜரின் சிற்றன்னை மகனான கோவிந்த பட்டரால் ராமானுஜர் காப்பாற்றப்பட்டார். எம்பார் என்ற கோவிந்த பட்டரின் முயற்சியாலேயே நாம் ராமானுஜரின் அருளைப் பெறுகிற பேறைப் பெற்றோம். பிற்காலத்தில் யாதவப் பிரகாசரே இராமானுஜரைச் சரணடைந்து அவரின் சீடராக மாறினார். அதுபோல மற்றுமொரு அத்வைதியான யக்ஞமூர்த்தி என்பவர் ஸ்ரீரங்கத்தில் ராமானுஜரிடம் 18 நாட்கள் வாதிட்டார். ராமானுஜர் வாத...