Skip to main content

லவகுசா பகுதி-3



சீடர்கள் குழப்பமடைந்தனர். குருவே! ராமாயணம் தொடர்கிறது என்றால், திவ்யமான ராமநாமத்தை நாங்கள் இன்னும் உங்கள் வாயால் தொடர்ந்து கேட்கப்போகிறோம் என்றுதானே பொருள். இதில் தாங்கள் வருத்தப்படுவது பற்றி தான் எங்களுக்கு புரியவில்லை, என்றனர். சீடர்களிடம் வால்மீகி பதிலேதும் சொல்லவில்லை. அவரது ஞானதிருஷ்டியில், காட்டிற்கு வரப்போகும் சீதைக்கு ஆகப்போகும் நிலை தெரிந்தது. உம்...விதி வழி வாழ்வு. அவள் பூமாதேவியின் புத்திரி ஆயினும், அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துதானே ஆக வேண்டும். பொதுவாகவே, பொறுமைசாலிகளுக்கு தான் பூமியில் அதிக துன்பமே விளைகிறது என தனக்குள் சொல்லிக்கொண்டார். இந்த பூலோகத்தில் பிறந்தவர்களில் பொறுமைசாலிகளுக்கு துன்பம் அதிகமாக வருகிறது என்று வால்மீகி நினைத்தது இன்றுவரை கண்கூடாகத்தான் தெரிகிறது. இவ்வளவு பொறுமையாய் இருந்தும், நமக்கு இவ்வளவு சோதனையா என சில பொறுமைசாலிகள் சலித்துக் கொள்ளவும் கூடும். ஆனால், காரணமில்லாமல் காரியமில்லை. இந்த லோகத்தில் நம் முன்வினைப் பயனையெல்லாம் அனுபவித்து, மேலும் மேலும் பொறுமை காத்தால், அவ்வுலகில் சுகமான வாழ்வு வாழலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீதையிடம் ராமன், சீதா! நீ நாளையே புறப்படலாம். உரிய ஏற்பாடுகளைச் செய்து விடுகிறேன், எனச்சொல்லி விட்டு, அரசவைக்குச் சென்றார். அவருக்கு வீட்டை விட நாட்டைப் பற்றிய கவலை அதிகம். மக்களுக்கு ஒரு சிறு கஷ்டம் கூட வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதற்காக, பல ஒற்றர்களை நியமித்திருந்தார். மக்கள் என்ன பேசுகிறார்கள். அவர்களது தேவையென்ன, யாராவது வெறுப்பு கலந்த குரலில் பேசுகிறார்களா...இவை ஒற்றர்களிடம் அவரது அன்றாடக்கேள்விகள். ஒற்றர்கள் இதற்குரிய பதிலைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். விஜயன், பத்திரன், தந்தவக்கிரன், சுமகாதன், சுராஞ்சி, காளியன் ஆகியோர் ராமபிரானின் ஒற்றர்கள். நகைச்சுவை ததும்ப பேசுவதிலும் இவர்கள் கில்லாடிகள். இவர்கள் சொன்ன நகைச்சுவை கதைகளைக் கேட்டு ராமன் கலகலவென சிரித்துக் கொண்டிருந்தார்.

நகைச்சுவை வாழ்க்கைக்கு ஒரு நல்ல மருந்து. சிரிக்க சிரிக்க பேசத்தெரியவில்லையே என வருத்தப்படுபவர்கள் அதிகம். ஆனால், சிரிப்பதற்கு பழக்கம் தேவையில்லை. சிரிக்க சிரிக்க பேசுபவர்கள் அதிகம் இருந்தாலே போதும்! சிரிப்பு மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குகிறது. மகிழ்ச்சியான மனநிலை சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. நகைச்சுவை புத்தகங்களைப் படிப்பது, சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகியவை நல்ல மருந்து. அதே நேரம் கேலியும், கேளிக்கையுமே வாழ்க்கையாகி விடக்கூடாது என்பதிலும் ராமன் கவனமாக இருந்தார். ஒற்றர்களே! இந்த பரிகாசக்கதைகள் ஒருபுறம் கிடக்கட்டும். நாட்டு மக்கள் என்ன சொல்கின்றனர்? அதை முதலில் சொல்லுங்கள். நாடாள்பவனுக்கு முதலில் மக்கள். அதன்பிறகு தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டும். சொல்லுங்கள், என்று துரிதப்படுத்தினார். அவர்கள் ராமனிடம், அண்ணலே! தங்கள் ஆட்சியில் என்ன குறை இருக்கிறது? கடலின் நடுவில் இருக்கும் இலங்கை மாநகரை தாங்கள் வெற்றி கொண்டதைப் பற்றி மக்கள் வியப்புடன் பேசுகிறார்கள். அசுரர்களை அழித்ததைப் பற்றி வீரம்பொங்க உரையாடுகிறார்கள். தேவர்களின் தலைவனான இந்திரனின் கொடும் பகைவனான இந்திரஜித்தைக் கொன்றது பற்றியும், அதிசயத்தின் வடிவமான பத்து தலைகளைக் கொண்ட ராவணனை அழித்தது பற்றி பேசுகிறார்கள். எங்கள் ராமனை வெல்வார் யார் என்று மார்தட்டி பேசுகிறார்கள், என்றனர். ராமன் அவர்கள் பேசுவதை கையசைத்து நிறுத்தினார். ஒற்றர்களே! நீங்கள் நிறைகளை மட்டுமே சொல்கிறீர்கள். தனது ஆட்சியின் நிறைகளைக் கேட்டு சந்தோஷம் கொள்வது மட்டும் அரசனின் பணியல்ல. அதன் குறைகளைக் கேட்டு, அதனை நீக்கி, நன்மை செய்பவனே அரசன். எனவே, நீங்கள் கேட்ட குறைகளையும், மனம் கூசாமல், அதைரியம் கொள்ளாமல் சொல்லுங்கள், என்று வற்புறுத்தினார். அந்நிலையில் அவர்கள் தாங்கள் கேட்ட ஒரு இழிசொல்லை ராமனிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.ஸ்ரீராமா! ஆருயிர் மன்னவரே! நாங்கள் கேட்ட ஒரு விஷயத்தைச் சொல்கிறோம். அதுகேட்டு தாங்கள் வருத்தம் கொள்ள வேண்டாம். புத்தியற்றவர்கள் பேசும் பேச்சு அது, என்றதும், ராமன் உஷாராகி விட்டார்.

உம்...அதை விரைந்து சொல்லுங்கள், என்றார். ராமா! எங்கள் அன்னை சீதாதேவியார், இலங்கையில் ராவணனின் இடத்தில் ஒரு வருடகாலம் இருந்தார். இப்படி தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவளை, அவன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாமே! இது தெரிந்தும், நாடாளும் மன்னன் ஒருவன் அவளுடன் வாழலாமா? குடிமக்களுக்கு ஒழுக்கத்தை கற்பித்து முன்மாதிரியாக இருக்க வேண்டிய மன்னன் ஒருவனே இப்படி இருந்தால், அது எவ்வகையில் நியாயம்? என கேட்கிறார்கள், என்றனர். இத்தனை நேரமும் பரிகாசக்கதைகளைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த ராமனின் கரிய முகம் சிவந்து விட்டது. அது கோபத்தின் வெளிப்பாடா, வெட்கத்தின் பிரதிபலிப்பா...ஒற்றர்கள் குழம்பினர். மனதில் வேல்போன்று தைத்த இந்த கடும் சொற்களைத் தாங்க முடியாத ராமபிரான், சைகையாலேயே ஒற்றர்களை அனுப்பிவிட்டு, தம்பியர்கள் இருக்குமிடம் சென்றார். தம்பியரே! என் உயிர் நீங்கள். என் பலமும் நீங்கள் தான். நண்பர்களும் நீங்களே! நீதி, தவம், சகோதரர்கள், அரசாங்கம், இன்பம் எல்லாமே நீங்கள்! இப்படி எல்லாமே எனக்கு நீங்கள் தான் என்றாகி விட்ட பிறகு உங்களிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? ஏனெனில், எனக்கு புகழ் கிடைத்தால் அதுவே உங்கள் புகழ். என் மீது பழிவந்தால் அது உங்களுக்கும் பழிதானே. எனவே, நான் கேள்விப்பட்ட ஒன்றை வெளிப்படையாகச் சொல்கிறேன், கேளுங்கள், என்றார். அண்ணனின் முகபாவம், பீடிகை ஆகியவை அவர் ஏதோ சொல்லக்கூடாததைச் சொல்லப் போகிறார் என்பதை தம்பிகளுக்கு உணர்த்தி விட்டது. என்ன அண்ணா? என்றனர் அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன். உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் கற்பின் வலிமையை நிரூபித்தாள். ஆனால், உலகத்தார் அதை ஏற்க மறுக்கின்றனர். அவள் மீதும், என்மீதும் சொல்லப்படும் பழிச்சொல் என் இதயத்தை வாட்டுகிறது, என்றவர் நடந்ததைச் சொன்னார். சகோதரர்கள் இதுகேட்டு மிக துன்பமடைந்தனர். கைகேயி, ராமபிரானை நாட்டை விட்டு அனுப்பியதை விட, அவர்களுக்கு இந்த தகவல் மிகக்கொடுமையாக இருந்தது.

Comments

Popular posts from this blog

மச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் !

அறிவியல் அறிஞர்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் . ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன . மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும் . மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும். சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது. மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால் கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும். நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம்இ கடத்தப்படுதல்இ தீரா நோய் கோர மரணம் ஊரை விட்டு ஒதுக்கப்படுவது உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும். ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி நெறியை மீறுதல் குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ...

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத ...

ஆதிசங்கரர் அவதாரம்!

கருணையே மிகச்சிறந்த அஸ்திரம் என்கிறார் ஆதிசங்கரர். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இந்து மதத்துக்கு புத்தெழுச்சி யூட்டி, அனைத்து மக்களும் நலம்பெற பல ஆன்மிக வழிகளைக் கூறியவர் ஆதிசங்கரர். பூவுலக மக்களுக்கு ஞானத்தை உணர்த்தவும், தர்மத்தை வலியுறுத்தவும், யக்ஞங்கள் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள் பக்தி ஒன்றினாலேயே உயர்வதற்கும் எண்ணற்ற பாடல்களை அருளிச் செய்தார் அன்பே உருவான சங்கரர். ஆதிசங்கரருக்கு பகவத் பாதர் என்ற திருநாமமும் உண்டு. கேரள மாநிலம் எர்ணாகுளம் காலடி என்ற கிராமத்தில் சிவகுரு - ஆர்யாம்பாள் என்ற தம்பதியருக்கு திருச்சூர் வடக்கு நாதர் அருளால் அவதரித்தவர் சங்கரர். சங்கரரின் உபநயனத்திற்கு முன்பே தந்தை சிவகுரு இறைவனடி சேர்ந்தார். பெற்றோர் செய்ய வேண்டிய உபநயனம் உறவினர்களால் செய்யப்பட்டது. ஆதிசங்கரர் குருகுலம் சென்று படிக்கும்போது, அன்றாடம் உஞ்சவிருத்தி செய்து (பிஜை) உணவு கொண்டு வருவார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த அவர், தன் விரதத்தை முடிக்க அயாசகன் என்பவர் வீட்டு வாசலில் நின்று பவதி பிக்ஷõம் தேஹி என அழைத்தார். அயாசகனின் மனைவி...