Skip to main content

லவகுசா பகுதி-2



அன்று சீதாதேவி, ஸ்ரீராமனின் பேரழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கணவனின் அழகை ரசிப்பதில் பெண்களுக்கு பேரானந்தம் உண்டு. இத்தனைக்கும் ராமன் சியாமளவண்ணன். கரிய நிறமென்று சொல்வதற்கில்லை. கருமையிலும் ஒரு நீலம். இந்தக்காலத்தில் என்றால், பெண்கள் மாப்பிள்ளை கருப்பா என்று புள்ளி வைப்பார்கள். சீதாதேவி, ராமனுக்காகவே பிறந்தவள். அவளது தந்தை அவளுக்கு மாப்பிள்ளையாக ராமபிரானைக் கொண்டு வந்து நிறுத்திய போது, அவள் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நமது கம்பர் தான், நம் தமிழ்க்காதலின் சுவை கருதி, அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்று இருவருமே திருமணத்துக்கு முன் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டதாக அனுபவித்து எழுதியிருக்கிறார். ஆனால், வால்மீகி அப்படி சொல்லவில்லை. அவன் கால் பாதம் தான் அவளுக்குத் தெரியும். அந்த நீலவண்ணப் பாதங்களில் செந்தூரத்தால் போட்ட கோலம் தெரியும். திருமணமாகி அயோத்திக்கு வந்த பின்னர் தான் அவனது முகம் பார்த்து வெட்கத்தால் சிவந்தாளாம் அந்த சிவப்பழகி. இன்றைக்கும் கூட நமது கிராமங்களில் சிகப்பி என்று பெண்களுக்கு பெயர் வைப்பார்கள். அது வேறு யாருமல்ல. நம் சீதாதேவி தான். பூமாதேவியின் அம்சமான அவள், அத்தனை சிவப்பழகு, பேரழகு படைத்தவள். கொடிகள் அவளது இடையைக் கண்டு வெட்கப்பட்டு, முகம் நாணி, தலை குனிந்து, கொம்புகளுக்குள் வளைந்து வெட்கப்பட்டு கிடக்கும். சிவப்பழகு கொண்ட பெண்கள், கருத்த மாப்பிள்ளைகளை ஒதுக்கக்கூடாது. மனம் வெள்ளையாக இருக்கிறதா என்பதை விசாரித்து தெரிந்து கொண்டால் போதும் என்பது சீதாதேவி பெண்களுக்கு கற்றுத்தரும் பாடம். அவரருகே வந்தவள், ஸ்ரீராமா... என்று ஆரம்பித்து விட்டு நிறுத்தினாள். அவர் அவளது கைகளைப் பற்றி நெஞ்சத்தில் புதைத்து, அவளை தழுவியபடி, என்ன தேவி! சொல், என்றார்.

அன்பரே! என் மனதிலுள்ள ஆசையை நிறைவேற்றுவீர்களா?ராமன் சிரித்தார்.நாடாளும் ராணி நீ. இந்த பட்டத்தரசி சொல்வதைக் கேட்கத்தானே இந்த பட்டத்தரசனும், இந்த தேசமும், உன் மாமியார்களும், மைத்துனர்களும் இருக்கிறோம். மனதிலுள்ளதை தயங்காமல் சொல். அதிலும் நீ கர்ப்ப ஸ்திரீயாக இருக்கிறாய். கர்ப்பவதிகள் மனதில் எதையும் வைத்துக் கொள்ளக்கூடாது. தங்கள் விருப்பத்தை கணவனிடம் சொல்ல வேண்டும். கணவன் அதை நிறைவேற்றி வைக்க வேண்டும். சொல் சீதா, என்றார். ஸ்ரீராமா! எனக்கு மீண்டும் மகரிஷிகளை தரிசிக்க வேண்டுமென என் மனம் ஆசைப்படுகிறது. தாங்கள் ராஜ்ய பரிபாலனத்தில் இப்போது தான் கவனம் செலுத்த துவங்கியிருக்கிறீர்கள். எனவே, நான் மட்டும் சென்று வருகிறேன். ஒரே ஒரு நாள் தரிசனம் தான். நான் சென்று வருவதற்குரிய அனுமதியையும், அதற்குரிய ஏற்பாட்டையும் செய்து தாருங்கள், என்றாள். ராமர் கலகலவென சிரித்தார். இவ்வளவுதானா! இதற்கா மனம் சஞ்சலப்படுகிறது என்றாய். மகரிஷிகளை தரிசிப்பது என்பது நல்ல விஷயம் தானே! அதிலும், நீ கர்ப்பவதியாய் இருக்கிறாய். இந்நேரத்தில், உன் வயிற்றில் இருக்கும் நம் செல்வம், மகரிஷிகள் கூறும் மந்திரங்கள், நல்வார்த்தைகளைக் கேட்டால், மிகச்சிறந்தவனாக, தர்மத்தைக் கடைபிடிப்பவனாக பிறப்பானே! இதைச் சொல்லவா இவ்வளவு தயக்கம்! காட்டிற்கு போகிறோமோ என கவலை கொள்ளாதே. உன் மைத்துனன் லட்சுமணன், எதற்கு இருக்கிறான்? கோபக்கார பயல். அவனை உன்னோடு அனுப்பி வைக்கிறேன். அவன் தன்னைப் பெற்ற சுமித்திரையை தாயாக நினைக்கிறானோ இல்லையோ! உன்னை தாயாக நினைக்கிறான், என்றதும் சீதாவின் கண்களில் கண்ணீர் அரும்பியது. ஆம்...சுவாமி! தாங்கள் மாரீச மானைப் பிடிக்கச் சென்றதும், அவனைக் கடும் மொழிகளால் பேசினேன். அவன் கோபிக்கவில்லை. மாறாக, கண்ணீர் வடித்தான். அந்நிலையிலும் அவன் கோடு போட்டு நிற்கச் சொன்னான். அதையும் நான் மதிக்கவில்லை. அயோத்தியில் காட்டிற்கு நாம் கிளம்பிய போது, அவன் நம்மோடு கிளம்பினான். அப்போது, தன் மனைவி ஊர்மிளாவிடம், விடை பெறச்சென்றான்.

அந்த மாதரசி எந்த தடையும் சொல்லவில்லை. ஊர் உலகில் நடக்கிற காரியமா இது? எந்த மனைவியாவது தன் கணவனை, அவனது அண்ணனுக்கும், அண்ணன் மனைவிக்கும் துணையாக காட்டுக்கு 14 வருஷம் அனுப்புவாளா? அவள் அனுப்பி வைத்தாள். அந்த உத்தம பத்தினியை மனைவியாகப் பெற்ற அவன், என்னோடு வருவது சாலவும் தகும். ஆனால்... என்று இழுத்தவளிடம், ராமபிரான், என்ன ஆனால்... என்றார். சுவாமி! ஊர்மிளாவும் இப்போது கர்ப்பவதியாக இருக்கிறாள். அவள் அருகே அவன் இருக்க வேண்டாமா? அவனை ஏற்கனவே 14 ஆண்டுகள் மனைவியை விட்டு பிரித்து விட்டோம். இப்போது, அந்த கர்ப்பஸ்திரீயிடமிருந்தும் பிரிக்க வேண்டுமா? என்ற சீதாவைப் பார்த்து சிரித்தார் ராமன். சீதா! ஊர்மிளா யார்? உன் தங்கை. உன்னைப் போலவே உத்தமி. நீ காட்டிற்கு போகிறாய் எனத்தெரிந்தால், அவள் உடனே தன் கணவனை அனுப்பி வைப்பாள். இதற்கெல்லாம் கலங்காதே. மேலும், நீ என்ன அங்கே நீண்டகாலம் தங்கவா போகிறாய்? ரிஷி தரிசனத்தை முடித்து விட்டு கிளம்பப் போகிறாய். அவனும் உன்னோடு வந்துவிடுவான், என்றார். அயோத்தியில் பட்டாபிஷேகம் முடிந்ததோடு ராமாயணமும் முடிந்தது, ஸ்ரீராமனின் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ந்து வாழப் போகின்றனர். ராமசகோதரர்கள் தங்கள் மனைவியருடன் இல்லறத்தில் திளைத்து, நன்மக்களை உலகுக்கு தரப்போகின்றனர். இனி இவ்வுலகில் எல்லாம் ÷க்ஷமமே என நினைத்திருந்த வால்மீகி மகரிஷி திடீரென நிஷ்டை கலைந்து எழுந்தார். சீடர்கள், அவர் திடுக்கிட்டு எழுந்ததைக் கண்டு ஓடோடி வந்தனர். குருவே! என்னாயிற்று! தாங்கள் இப்படி பதைபதைப்பு காட்டி நாங்கள் பார்த்ததே இல்லையே! தங்கள் கண்களிலிருந்து சரம் சரமாய் கண்ணீர் கொட்டுகிறதே! ராமன் ஆளும் பூமியில் அபவாதம் ஏதும் நிகழ வாய்ப்பில்லையே சுவாமி! பின் ஏன் இந்த கலக்கம்? என்றனர் படபடப்புடன். அவர் அமைதியாகச் சொன்னார்.ராமாயணம் முடியவில்லை...அது தொடரப்போகிறது.

Comments

Popular posts from this blog

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத

அபிமன்யுவின் வீரம்!

அபிமன்யுவின் வீரம்! சிறுவன் ஒருவன் சாதனைகளைச் செய்ய முடியுமா? நிச்சயமாய் முடியும். அபிமன்யுவின் வரலாறை படிக்கும் குழந்தைகள் பெரும் சாதனையாளர்களாக மாறுவார்கள். அர்ஜூனனின் மனைவி சுபத்ரா. துவாரகை மன்னன் பலராமன், கண்ணன் ஆகியோரின் தங்கை. அவளுக்கு ஆனைப்பட்டணம் என்ற ஊரை சீதனமாக அளித்தார் பலராமன். சுபத்ரா கர்ப்பமாக இருந்த நேரத்தில் அண்ணன் கண்ணனிடம் போர் முறைகளைப் பற்றி கேட்டாள். கண்ணன் சொல்ல ஆரம்பித்தார். எப்படியெல்லாம் போரில் யூகங்கள் வகுக்கப்படும், அதிலிருந்து எப்படியெல்லாம் வீரர்கள் தப்புவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரது விளக்கம் சுபத்ராவுக்கு போரடித்து விட்டது போலும். உம் கொட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். ஆனால் உம் சத்தம் மட்டும் வந்து கொண்டே இருந்தது. சுபத்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை தான் அது.போர் முறைகளைப் பற்றிக் கவனமாகக் கேட்டுக் கொண்டே உம் கொட்டியது. கண்ணன் அப்போது சக்ர வியூகம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதை அமைக்கும் வி

Magadheera (2009) - Dheera Dheera HQ song